திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டவர் கார்த்திகா. அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான இவர் ஆளுங்கட்சிக்கு எதிராகத் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.
தேர்தல் பரப்புரை விவகாரம் தொடர்பாக தாராபுரம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் ரோடு ஷோ செல்லும் பாதையில் மறியலில் ஈடுபட்டது போன்ற செயல்களுக்காக கார்த்திகா உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், கோவையில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த கார்த்திகா அவரின் கணவர் உள்ளிட்ட சிலரை நேற்று அதிகாலை காவல்துறையினர் திடீரென கைது செய்தனர். இரவு உடையுடன் தாராபுரம் அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திகாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கார்த்திகா உள்ளிட்டோரை தாராபுரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் கோலை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கார்த்திகா மீதான காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் தாராபுரம் காவல்நிலையத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய கார்த்திகா, “நான் என்ன மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்றேனா? போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை செய்பவர்கள் எல்லாம் இந்த ஆட்சியில் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு வேட்பாளராகிய என் மீது பிணையில் வெளியே வர முடியாத அளவிற்கு பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கிறார்கள். இது எந்த வகையிலும் ஏற்க முடியாது” என ஆவேசமாகப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் நன்மாறன், “நான்கு வழக்குகள் போலீஸாரால் பொய்யாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை ஜாமீன் மனுத் தாக்கல் செய்தால் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கைத் திசை மாற்றம் செய்யவே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் குற்றச்சாட்டு தெரிவித்தார்.




