திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன், தி.மு.க கிளைச் செயலாளர். இவர் கடந்த தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஸ் தனக்கு நெருங்கிய உறவினர் என்றும் அரசு வேலை தாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் பணம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
வேலங்குடி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையிடம் மக்கள் தொடர்பு உதவி அலுவலர் வேலை வாங்கி தருகிறேன் என்று ரூ.42 லட்சம் வாங்கியவர் சொன்னபடி வேலை வாங்கித் தராததோடு தலைமறைவாகி விட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அண்ணாமலை கடந்த 5ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிர்ச்சியடைந்த அண்ணாமலை உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். மேலும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பெயரை பயன்படுத்தி சுமார் ரூ.4 கோடி மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பியது சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
இது குறித்து அண்ணாமலையின் மனைவி பிரியங்காவிடம் பேசினோம், “என் கணவர் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். தி.மு.க கிளைச் செயலாளரான ரமேஷ்கிருஷ்ணன், என் கணவரிடம், அபோதை அமைச்சர் அன்பில் மகேஸ் எனக்கு நெருங்கிய உறவினர். அவருடைய உதவியாளர் வாளாடி கார்த்தியும் எனக்கு நெருக்கம். பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாக சொன்னார்.
அன்பில் மகேஸையும் அடிக்கடி சந்தித்து வந்தார். செய்தி மக்கள் தொடர்பு துறையில், மக்கள் தொடர்பு உதவி அலுவலர் பணிக்கு ஆள் எடுப்பதாக சொல்லி அறிவிப்பை காட்டி உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்றார் ரமேஷ்கிருஷ்ணன். அதற்காக, தலைமை செயலகத்தில் வேலை செய்கிறவர்கள் என்று சென்னையில் உள்ள இரண்டு வங்கி கணக்கு எண்ணை கொடுத்து பணம் அனுப்ப சொன்னார்.
முதல்கட்டமாக ரூ.5 லட்சம் அனுப்பினோம். பின்னர் என் கணவருக்கு வேலைக்கு ஆர்டர் வந்து விட்டதாக கூறி அரசு முத்திரையுடன் அதிகாரி கையெழுத்திட்ட அரசாணையை காட்டி 26.7.2023 அன்று தலைமை செயலகத்தில் நேரடியாக பணி நியமனம் செய்யப்போகிறார்கள் அதற்கு முன்பு பணம் கொடுக்க வேண்டும் என்றார்.

ஆர்டரை பார்த்தும் முழு நம்பிக்கை ஏற்பட்டது. விவசாய நிலத்தை அடகு வைத்து, கடன் வாங்கி பணம் ரெடி செய்து ரமேஷ்கிருஷ்ணனிடத்தில் ரூ.37 லட்சம் கொடுத்தோம். பின்னர் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் காரணமாக பணி நியமன நிகழ்ச்சி தற்காலிகமாக தேதி மாற்றப்படுகிறது என்று அதற்கான கடிதத்தை காட்டினார். ஆனால் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை.
சாக்கு போக்கு சொல்லி மாதங்களை கடத்தினாரே தவிர வேலை வாங்கி கொடுக்கவில்லை. ஒருக்கட்டத்தில் அவர் கொடுத்த ஆர்டர் கடிதத்துடன் தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று விசாரித்த போது அவை பொய்யென்று தெரிந்து இடிந்து விட்டோம்.
மேலும், இதே போல் வேலை வாங்கி தருவதாக பலரிடத்தில் பல லட்சங்கள் வாங்கியிருக்கிறார் என்பது தெரிந்தது. உண்மை தெரிந்ததும் எல்லோரும் பணம் கொடுங்கள் என்று நெருக்க தலைமறைவாகி விட்டார். அன்பில் மகேஸ் பெயரை சொல்லி கிட்டதட்ட ரூ.4 கோடி மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக நாங்கள் முதல்வர் தனிப்பிரிவில் அப்போது புகார் கொடுத்தோம். அப்போதைய முதல்வர் ஸ்டாலின் இதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. அதை செய்திருந்தால் இன்றைக்கு என் கணவர் துயரமான முடிவை எடுத்திருக்க மாட்டார். நான்கு வயதாகும் என் இரட்டை மகள்களை இனி எப்படி வளர்த்து ஆளாக்குவேனு தெரியவில்லை” என்றார்.

ஆவூர் தி.மு.க கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் நம்மிடம், “தி.மு.கவைச் சேர்ந்தவர் என்ற முறையில் அறிமுகமான ரமேஷ்கிருஷ்ணன் அன்பில் மகேஸ் அப்பா பொய்யாமொழி பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்கு எங்களை திருச்சிக்கு அழைத்துச் செல்வார். நாங்களும் போய் மரியாதை செய்வோம். அப்போது அன்பில் மகேஸ்கிட்ட நெருக்கமாக இருப்பார். பி.இ படித்த என் மகனுக்கு அன்பில் மகேஸிடத்தில் சொல்லி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் வேலை வாங்கி தருவதாக சொன்னார். நானும் நம்ம கட்சிக்காரர் தானே என்று நம்பி ரூ.25 லட்சம் கொடுத்தேன். ஏன் வேலை கிடைப்பது தாமதமாகிறது என்று ரமேஷ் கிருஷ்ணன்கிட்ட கேட்டேன். அதற்கு அன்பில் மகேஸ் உதவியாளர் வாளாடி கார்த்தியிடம் பேசியிருப்பதாக சொன்னவர் திடீர்னு தலைமறைவாகி விட்டார்.
அந்த சமயத்தில் முதல்வர் தனிப்பிரிவு மற்றும் காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ரமேஷ்கிருஷ்ணனுக்கு சொத்து பத்து உள்ளது. மருமகன் நகராட்சியில் ஆணையராக இருப்பதாக சொல்கிறார்கள். ரமேஷ்கிருஷ்ணன் சொத்துக்களை பறிமுதல் செய்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களிடம் ஒப்படைப்பதற்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நன்னிலம் டி.எஸ்.பி முத்துகுமரனிடன் பேசினோம், “ரமேஷ்கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்.
விசாரணையில், கடந்த ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உதவியாளரையும், அரியலூரைச் சேர்ந்த சினிமாத்துறையில் இருக்க கூடியவரையும் கைகாட்டியிருப்பதாக போலீஸார் சொல்கிறார்கள். இது குறித்து வாளாடி கார்த்தியிடம் விளக்கம் கேட்டோம், “அமைச்சராக இருக்கும் போது பலர் பார்க்க வருவார்கள் யாரையும் தடுத்ததில்லை. எங்களுக்கும் புகாருக்கு உள்ளாகியிருப்பவருக்கும் துளி தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் இதில் எங்கள் பெயரை மிஸ் யூஸ் செய்கிறார்கள். வேலைக்காக பணம் வாங்கிய பழக்கம் எங்களுக்கு இல்லை. இது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.




