கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை திறந்துவைத்து பேசுகையில், “கல்லியாணத்தை பண்ணிப்பார் கட்டடத்தை கட்டிப்பார் என கிராமங்களில் சொல்லுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் பெயரில் காங்கிரஸ் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அலுவலகம் அமைந்துள்ள நிலம் சுமார் 2 கோடி ரூபாய், கட்டடம் 75 லட்சம் ரூபாய் என மொத்தம் இரண்டே முக்கால் கோடி காங்கிரஸ் சொத்தாக வந்துள்ளது.
நாம் 10 ஆண்டு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அப்போது நாம் நினைத்திருந்தால் ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஒரு அலுவலகம் கட்டியிருக்க முடியும். ஆனால் நாம் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம், லஞ்சம் லாவண்ய பணத்தில் கட்ட வேண்டாம் என நம் தலைவர்கள் இருந்தார்கால். ஆனால், பா.ஜ.க இன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்துகோடி ரூபாய் மதிப்பில் அலுவலகங்களை கட்டிவருகிறது. அதுதான் நமக்கு பா.ஜ.க-வுக்கும் உள்ள வித்தியாசம். பிரின்ஸ் எம்.எல்.ஏ தன்னிடம் உதவி கேட்டு வந்த நண்பரிடம் தனக்காக எதுவும் வேண்டாம் கட்சி கட்டடத்துக்காக நிலம் தாருங்கள் என கேட்டு வாங்கி அதை சோனியா காந்தியிடம் ஒப்படைத்திருக்கிறார். மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமையில், எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் ஒத்துழைப்போடு இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் புத்துணர்வு பெறுவதற்கும், மறு சீரமைப்பு செய்வதற்கும், தம்மை தாமே சுய பரிசோதனையில் இறங்கியிருக்கிறோம். காங்கிரஸ் இன்று இந்தியாவுக்கு தேவையான இயக்கமாக இருக்கிறது. நாம் அங்கும் இங்கும் விலகாமல் நேர்மையாக அரசியல் களத்தில் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த தலைமுறையில் வேறுவிதமாக அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. பாசிச சக்திகள் தேசத்தை விழுங்க ஆரம்பித்த்திருக்கிறார்கள். சாதிய, மதவாத இயக்கங்கள் இந்த தேசத்தை கூறுபோட துடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒருபோதும் அதை நாம் அனுமதிக்கக்கூடாது.
நான் காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு தலைவராக 2014- முதல் செயலாற்றினேன். சென்னையில் ரூ.1000 கோடிக்குமேல் சொத்து இருக்கிறது. திருச்சியில் நமக்கு 100 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறது. கோவையில் 100 கோடி, ராமநாதபுரத்தில் 100 கோடி, திருப்பத்தூரில் 200 கோடி, கிருஷ்ணகிரியில் 150 கோடி, கும்பகோணத்தில் ஒரு சொத்து மட்டுமே 150 கோடியில் உள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த சொத்துக்களை அபகரிக்க முடியுமா என ஒருக்கூட்டம் முயற்சிசெய்துகொண்டே இருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரியில் ஒரு சொத்து விவகாரம் உயர் நீதிமன்ற வரை சென்றிருக்கிறது. ஆனால் கன்னியாகுமரியில் சொத்தை உருவாக்க வேண்டும் என ஒரு கூட்டம் இருக்கிறது. இதுதான் தலைமைப் பண்பு.

நடிகை பானுமதி குன்னூரில் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்ய வந்தார். நிகழ்சியை தொடங்கிவைக்க காமராஜரை நடிகை பானுமதி அழைத்தார். அப்போது முதல் காட்சியில் வரும் பணத்தை எங்கள் கட்சிக்கு கொடுப்பதாக இருந்தால் நிகழ்ச்சியை தொடங்கிவைக்க வரலாம் என்றார் காமராஜர். அனைத்து காட்சியிலும் வரும் பணத்தையும் கொடுக்கலாம் என கூறினார்கள். அந்த நிகழ்ச்சியில் வசூலான 540 ரூபாயை காமராஜரிடம் கொடுத்தார்கள். அதை மாவட்ட கமிட்டியிடம் கொடுத்து சொத்து வாங்கச்சொன்னார் காமராஜர். இப்படி எல்லம்தான் காங்கிரஸ் கட்சிக்கு சொத்துகள் வந்தன.
காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை எப்படி எல்லாம் அபகரித்து, மோசடி செய்திருக்கிறார்கள் என என் எண்ணத்தில் ஓடும். சில இடங்களில் வாடகை வாங்குவதில் பிரச்னை இருக்கிறது. நம் கட்சிக்கு இருக்கும் சொத்துபோன்று தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும் சொத்து இல்லை. ஆனால், அதில் அனைத்திலும் வில்லங்கம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கட்சி சொத்தை எப்படியாவது அபகரித்துவிடலாமா என நினைக்கும் தலைவர்கள் மத்தியில் கன்னியாகுமரியில் சொத்தை உருவாக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். எனவே மாவட்ட தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி உள்ளிட்டோருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த தலைமுறை தவறு செய்து விடாமல் சொத்தையும், பத்திரத்தையும் பாதுகாத்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழ்நாட்டில் கிராம கமிட்டி நாம் எதிர்பார்த்தை விட வேகமாக சென்றுள்ளது. காங்கிரஸ் எங்கே இருக்கிறது என கேட்டார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாத கிராமங்களே இல்லை. கிராமங்களில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்கும் காலம் வந்திருக்கிறது. எந்த கட்சியிலும் இல்லாத வகையில் உலகதரம் வாய்ந்த கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டையை கொடுக்கிறோம். உறுப்பினர்களின் புகைப்படம், பதவி, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்து பயோடேட்டாவுடன் கொடுக்க உள்ளோம். யாராவது நீங்கள் காங்கிரஸில் இருப்பதற்கு ஆதாரம் கேட்டால் அடையாள அட்டையில் இருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து தகவல்களும்ம் வரும். 12,425 கிராமங்கள் தொடங்கி நகராட்சி, மாநகராட்சி என அனைத்துக்கும் கமிட்டியை அமைத்து புத்துணர்வு பெற்ற இயக்கமாக மாற்றுவோம். பக்கத்தில் கேரளாவிலும், கர்நாடகா, தெலங்கானா மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் சளைத்தது அல்ல என்பதை நிரூபிக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது” என்றார்.