இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்தை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். எதிர்பார்த்ததை போல நிகழ்வு நடந்து முடிந்திருந்தாலும் தவெக தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறது. காரணம், நிகழ்வில் ஏற்பட்ட தள்ளு முள்ளு சம்பவம். நிகழ்வு அரங்கின் கண்ணாடி கதவுகளெல்லாம் உடைபடும் அளவுக்கு ஏற்பட்ட தள்ளு முள்ளுக்கு தவெக தரப்பும் காவல்துறையும் மாறி மாறி பழிபோட்டுக் கொள்கின்றனர்.
‘ஸ்பாட் அப்டேட்!’
6:20 மணியளவில் நோன்பை முடித்து தொழுகை நடத்தி இஃப்தார் விருந்தை எடுத்துக்கொள்ளும்படி நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. தன்னுடைய பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து கட்சியின் இணைப் பொருளாளர் ஜெகதீஸ் மற்றும் அவரின் நலம் விரும்பியான ராஜேந்திரன் ஆகியோருடன் கிளம்பி ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.
நிகழ்வுக்கு தவெக சார்பில் இரண்டு விதங்களில் இஸ்லாமியர்களை அழைத்திருந்தனர். முதலில் தொகுதிக்கு 5 பாஸ் என கூறப்பட்டு தமிழகம் முழுக்கவும் இருந்து இஸ்லாமிய நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். அதுபோக, நேற்று ஆனந்த் சென்னையிலுள்ள முக்கியமான மசூதிகளுக்கும் சிறுசிறு இஸ்லாமிய அமைப்புகளுக்கும் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கி வந்தார். அதன்படி, மதியம் 2 மணியிலிருந்தே ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை நோக்கி அழைப்பிதழ் வைத்திருந்த இஸ்லாமியர்கள் வர தொடங்கிவிட்டனர்.
தவெக சார்பில் தொகுதிவாரியாக அழைக்கப்பட்டிருந்த நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த நபர்கள் தங்களின் மா.செவிடமிருந்து ஒப்புதல் கடிதங்களை வாங்கி வந்திருந்தனர். அந்த கடிதங்களை பவுன்சர்களிடம் காட்டி உள்ளே வர வேண்டும் என்பதே திட்டம்.

‘கட்டி ஏறிய கூட்டம்!’
ஐந்தரை மணி அளவிலேயே கூட்டம் கட்டி ஏற தொடங்கிவிட்டது. அரங்கிற்குள் நுழையும் கண்ணாடி வாயிற்கதவையும் கூட்டம் நொறுக்கிவிட்டது. உள்ளேயும் அரங்கம் நிறைந்துவிட்டது. ஆனால், அதன்பிறகும் இரண்டு முறை மைதானத்தின் கேட் திறந்துவிடப்பட்டது. அப்போதும் அழைப்பிதழ் வைத்திருந்தவர், இல்லாதவர் என குழப்பியடித்து கூட்டம் திமுதிமுவென ஏற போலீசார்கள், பவுன்சர்கள் என இரு தரப்புமே திணறிவிட்டனர். இந்த கூட்டத்தால் ஆனந்திடம் அழைப்பிதழை பெற்றிருந்த சில சிறு சிறு இஸ்லாமிய அமைப்பினரால் நிகழ்வரங்குக்குள் நுழையவே முடியவில்லை. ‘பவுன்சர்களை வச்சு அசிங்கப்படுத்துறீங்களா…’ என அதிருப்தியுடன் சில இஸ்லாமியர்கள் வெளியேறியதையும் பார்க்க முடிந்தது. நிகழ்வில் விஜய் மைக் பிடிக்கும் திட்டமே இருந்திருக்கவில்லை. வெளியே நடந்த களேபரங்களால்தான் கடைசியில் மைக் பிடித்து முகமது நபியை குறிப்பிட்டு, ‘என்னுடைய அழைப்பை ஏற்று வந்த உங்களுக்கு நன்றி..’ என விஜய் பேசியிருந்தார். இத்தனைக்கும் தவெக தரப்பில் மட்டும் மூன்று வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
‘தவெக குற்றச்சாட்டு!’
கூட்டநெரிசலுக்கும் தள்ளு முள்ளுக்கும் என்ன காரணமென விசாரித்தால் தவெக தரப்பும் காவல்துறை தரப்பும் மாறி மாறி பழிபோட்டுக் கொள்கின்றனர். ‘நிகழ்வை இராயப்பேட்டையிலிருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப் போகிறோம் என முடிவெடுத்து காவல்துறையை நாடியதிலிருந்தே பிரச்சனைதான். அனுமதிக்கே அத்தனை கறார் காட்டினார்கள். அவர்களிடம் சொன்னதைப் போலவே 1500 அழைப்பிதழ்களைத்தான் அச்சடித்தோம். அதை முறையாக எல்லாருக்கும் வழங்கியிருக்கிறோம். அழைப்பிதழ் வைத்திருப்பவர்களை மட்டும்தான் உள்ளே அனுமதித்திருக்க வேண்டும். முதலில் அப்படித்தான் அனுமதிக்கவும் செய்தார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இரண்டு கேட்களிலும் கூடியிருந்த கூட்டத்தையும் எந்த பரிசோதனையும் இல்லாமல் திறந்துவிட்டுவிட்டார்கள்.

ஒரு முறை அல்ல. இரண்டு முறை இப்படி செய்தனர். இதில்தான் அழைப்பிதழ் இல்லாதவர்களும் உள்ளே வந்து கூட்டம் கூடி நெரிசலாகிவிட்டது. உள்ளே கூட்டம் முண்டியத்து கதவுகளை உடைத்த போதும் காவல்துறையினர் மெத்தனமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலைமை கையை மீறி சென்ற போதுதான் பெயருக்கு உள்ளே புகுந்து கூட்டத்தை கலைத்தார்கள். இந்த நிகழ்ச்சியென்று இல்லை, தவெக ஆண்டு விழாவிலும் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த முயற்சிக்காமல் அலட்சியமாகவே செயல்பட்டனர். ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாகத்தான் இப்படி செய்கிறார்களோ என்றும் எங்களுக்கு தோன்றுகிறது.’ என அதிருப்தி குரலில் புகார் வாசிக்கின்றனர் தவெக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.
‘காவல்துறை தரப்பு தகவல்!’
காவல்துறையிடமும் இந்த விவகாரம் பற்றி பேச்சுக் கொடுத்தோம். ‘முதலில் அவர்கள் 1500 அழைப்பிதழ்கள்தான் அடித்தோம் எனக் கூறுவதே பொய். 2500 லிருந்து 3000 வரைக்கும் அழைப்பிதழ்களை அடித்து விநியோகித்திருக்கிறார்கள். ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இருக்கும் அந்த அரங்கத்தில் அத்தனை பேர் அமரவே முடியாது. 1500 பேர் வரை மட்டும்தான் அமர முடியும். தொகுதிக்கு 5 நிர்வாகிகள் என அழைத்து வர சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தொகுதிக்கு 5 பேர் மட்டும் வரவில்லை. அவருக்கு தெரிந்தவர், இவருக்கு தெரிந்தவர் என இவர்களின் கட்சி நிர்வாகிகளே எக்கச்சக்கமாக கூடியிருந்தார்கள். ஆனாலும், நாங்கள் எப்படி முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டுமோ அப்படித்தான் வழங்கினோம்.

நிகழ்வு நடந்த அந்த இடம் எப்போதுமே பிஸியாக இருக்கும். அருகில் அரசு மருத்துவமனை வேறு இருக்கிறது. மெட்ரோ வேலை நடப்பதால் சாலைகளும் குறுகலாக இருக்கிறது. பெரிய பெரிய க்ரேன்களும் வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் சாலையில் கூட்டம் கூடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மவுண்ட் ரோடு வரைக்கும் பாதிக்கப்படும். அதனால் கூடியிருந்த கூட்டத்தை உள்ளே அனுமதித்தோம். தள்ளு முள்ளுக்கு உண்மையான காரணமே நிகழ்ச்சி ஏற்பாட்டிலிருந்த குளறுபடிகள்தான். 3000 பேருக்கு அழைப்பு விடுத்துவிட்டு 4:45 மணி வரைக்கும் யாரையும் அரங்குக்குள் அனுமதிக்காமல் இருந்தனர். பவுன்சர்களை வைத்து கூட்டத்தை தடுத்து நிறுத்தியிருந்தனர். இதனால்தான் கூட்டம் தேங்கியது.

நிகழ்வுக்காக விஜய் அவரது வீட்டிலிருந்து கிளம்பினார் என்பதை சேனல்களில் லைவ்வில் பார்த்தவுடனேயே கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்துவிட்டது. தொகுதியிலிருந்து வந்திருக்கும் நிர்வாகிகள் ஒரு கடிதத்தோடு வந்து நிற்கிறார்கள். கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த பவுன்சர்களுக்கே அந்த கடிதம் பற்றி எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. இதனாலும் ஏகப்பட்ட குழப்பம். 2 மணியிலிருந்தே அழைப்பிதழை வைத்திருந்த நபர்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். அப்போதே உள்ளே அனுமதித்திருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது. தள்ளு முள்ளு ஏற்பட்ட போதும் காவல்துறையினர்தான் உள்ளே புகுந்து அழைப்பிதழ் இல்லாதவர்களை கறாராக வெளியில் அனுப்பினார்கள். நாங்கள் எங்கள் வேலை சரியாகத்தான் செய்தோம். நிகழ்ச்சி ஏற்பாட்டில்தான் ஏகப்பட்ட குளறுபடிகள்.’ என காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்த ஆனந்த், ஆதவ், ஜான் என மூன்று தரப்பு குழுவுமே கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார்களாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
