10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

“கடைசிகாலம் வரை எடப்பாடியாரின் படைத்தலைவர்களில் ஒருவனாக இருப்பேன்!" – கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

Date:

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, தி.மு.க-வில் சேரவிருப்பதாக வெளியான செய்தி, தமிழக அரசியலில் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
அ.தி.மு.க தொடர்ந்து இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியின் தலைவர்கள் மாற்றுக் கட்சிகளில் இணைந்துவருகிறார்கள். குறிப்பாக ஆளுங்கட்சியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில், அ.தி.மு.க-வினர் பலரும் அடைக்கலமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக வலம் வரும் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எதிர்க்கட்சியான தி.மு.க-வில் சேரவிருப்பதாக செய்திகள் தடதடக்கின்றன.
இதையடுத்து, ‘நீங்கள் தி.மு.க-வில் இணையப்போவதாக செய்திகள் வெளிவருகின்றனவே… உண்மையா?’ என்ற கேள்வியை கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமே கேட்டபோது, செய்தியை மறுத்து பொங்கித் தீர்த்துவிட்டார்.

இதுகுறித்து அவர் பேசும்போது,
“அது 100% பொய்யான செய்தி. சாதாரண குடும்பத்தில் பிறந்த நான், அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளின் வியர்வையால் வளர்ந்தவன். இந்த இயக்கத்துக்கும் இயக்கத்தினுடைய தலைமையான எடப்பாடியாருக்கும் விசுவாசமான தொண்டனாக கடைசிவரை நான் இந்தக் கட்சியில்தான் பயணிப்பேன்.

அரசியலில் என்னை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள், இதுபோன்ற செய்திகளை பரப்புவதன் வாயிலாக மனமகிழ்ச்சி அடைகிறார்கள்.
ஒருகாலத்தில், ‘ராஜேந்திரபாலாஜி பா.ஜ.க-வில் சேரப் போகிறார்; விமானம் ஏறிவிட்டார், டெல்லி சென்றுவிட்டார்’ என்றெல்லாம் செய்தி பரப்பினார்கள். இப்படி ஆண்டுதோறும் பொய்ச்செய்திகளை பரப்புவது சிலருக்கு மகிழ்வைக் கொடுக்கிறது.

பதவி சுகத்துக்காக த.வெ.க-வில் இணைந்தவர்கள், ஒருசில இளைஞர்களை வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமிலும் வாட்ஸப்பிலும் இப்படி ஒரு செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷத்திற்காக பரப்பிக்கொள்ளட்டும்.
அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு சிலரை ஆசை வார்த்தை காட்டி, த.வெ.க-வில் இணைத்துவருகின்றனர். த.வெ.க ஆட்சிக்கு வருவதற்காக உழைத்தவர்கள் பலர் அந்தக் கட்சியில்தான் இப்போதும் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய பொறுப்புகளை கொடுத்து கௌரவிக்கலாம். அதை விடுத்து, 32 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த அ.தி.மு.க-வில் இருப்பவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி கட்சியைக் களங்கப்படுத்த நினைப்பது தவறானது. இதனால் அ.தி.மு.க தொண்டர்களும் த.வெ.க மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.

கடந்த முறை அ.தி.மு.க ஆட்சி முடிந்து தி.மு.க ஆட்சி வந்தவுடன் என் மீது வழக்கு தொடுத்தனர். அ.தி.மு.க-வின் பத்தாண்டுகால ஆட்சியில் என் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகளையும் தோண்டி எடுத்து, எங்கேயாவது குறைபாடு இருக்கிறதா, டெண்டர் முறைகேடு இருக்கிறதா என்றெல்லாம் உற்றுப் பார்த்தார்கள். ஆனால், அப்படி எதுவும் கிடைக்கவில்லை.
உடனே, ‘ஆவினில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பண மோசடி செய்துவிட்டார்’ எனக்கூறி ஒரு பொய்யான வழக்கை என் மீது தொடுத்து, என்னை அச்சுறுத்தி கைது செய்து திருச்சி சிறையிலும் அடைத்தார்கள். நெருக்கடியான அந்த காலகட்டத்திலும்கூட மனம் தளராமல், இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்தவன் நான்.
 
உண்மை இப்படியிருக்க, நான் எப்படி அ.தி.மு.க-வை விட்டுவிட்டு வேறு கட்சியில் போய் இணைவேன்?

கடைசிகாலம் வரை அ.தி.மு.க-வின் ஆணிவேராக இந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி இருப்பான். எடப்பாடியாருடைய படைத் தலைவர்களில் ஒருவனாக நான் இருப்பேன்!” என்றார் உறுதியாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான்: 'உச்ச தலைவர் மொஜ்தபா நலமாக இருக்கிறார்' – வீடியோ வெளியிட்ட தெஹ்ரான்

ஈரானில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்தியது....

பழனி நில மோசடி வழக்கு: "அன்வர்தீன் சிறைக்குள் உயிரிழந்தது ஏன்?" – தவாக வேல்முருகன் கேள்வி

பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்...

உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா‌ கமேனி? வெளியான வீடியோ; முடிவுக்கு வந்த கேள்வி|Video

ஈரான் போரின் முதல் நாளே ஈரானின் உச்சத் தலைவர் அயோதுல்லா அலி...

"எங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்னை இருக்கிறது" – எஸ்.பி. வேலுமணி ஓபன் டாக்

கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி...