அமெரிக்காவின் தொழிலாளர் துறையானது காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, HCL டெக்னாலஜிஸ், கேப்ஜெமினி ஆகிய ஆறு ஐ.டி நிறுவனங்களையும் ‘நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் (PERM) திட்ட’த்தில் இருந்து நீக்கியுள்ளது.
பெர்ம் திட்டம் என்பது ஐ.டி நிறுவனங்கள் தகுதியான தங்களது வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கிரீன் கார்டு, நிரந்தரக் குடியுரிமை ஆகியவற்றைப் பெற்றுத்தரும் திட்டம் ஆகும்.
வேலைக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பலர். ஒவ்வொரு ஆண்டும் ஹெச்-1பி விசா பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை சராசரியாக 66 சதவிகிதம்.
கிரீன் கார்டிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமானதுதான்.
ஆக, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை நிச்சயம் அமெரிக்காவிற்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களைப் பாதிக்கும்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து HCL டெக்னாலஜியின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விநீத் நாயர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவலை குறைவுதான்
அந்தப் பதிவில், “அமெரிக்காவிற்குச் செல்லும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ட்ரம்ப் விரும்புகிறார்.
ஆனால், அதன் எதிர்பாராத விளைவாக, அமெரிக்காவின் தொழில்நுட்பப் பணிகள் அதிகளவில் இந்தியாவை நோக்கி நகரும் சூழல் ஏற்படலாம்.
நான் இந்தத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன்.
எனவே, அமெரிக்கா சில முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களை PERM நடைமுறையைப் பயன்படுத்துவதிலிருந்து தடுத்துள்ளது என்ற செய்தியைப் படித்தபோது, தலைப்புச் செய்திகள் காட்டிய பதற்றத்தை விட எனக்குக் கவலை குறைவாகவே இருந்தது (ஊழியர்கள் நிரந்தரக் குடியுரிமை பெற PERM ஒரு முக்கிய வழியாகும்).
புள்ளிவிவரம்
ஏன் என்பதை ஒரே ஒரு புள்ளிவிவரம் விளக்கிவிடும்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 1,17,849 PERM-ல் இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்பு 1,400-க்கும் குறைவுதான். அதாவது 2%-க்கும் கீழே. எனவே, இதன் நேரடித் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்.

ஆனால், இதற்குப் பின்னால் மிகவும் சுவாரசியமான வேறொரு மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் இந்திய ஐடி துறையின் வேலை மாதிரி மிகவும் எளிமையானதாக இருந்தது. வாடிக்கையாளருக்கு அமெரிக்காவில் முக்கியமான வேலை இருக்கும். அதைச் செய்ய நாங்கள் இந்தியப் பொறியாளர்களை அங்கே அனுப்புவோம்.
பின்னர், அந்த வேலையின் பெரும் பகுதியை இந்தியாவிலிருந்தே செய்ய முடியும் என்பதை கண்டறிந்தோம். ‘ஆன்சைட்-ஆஃப்சோர்’ (Onsite-offshore) எனும் இந்த மாடல் இப்படித்தான் உருவானது.
அந்த வரலாற்று மாற்றத்தை நான் நேரில் அனுபவித்திருக்கிறேன்.
வேறொரு மாற்றத்திற்கான தொடக்கம்…
இப்போது நாம் அதுபோன்ற மற்றொரு மாற்றத்தின் தொடக்கத்தில் இருக்கலாம்.
இந்தியத் திறமையாளர்கள் அமெரிக்காவிற்கு வருவதை அமெரிக்க அரசு கடினமாக்கி வரும் அதே வேளையில், இந்தியாவில் உள்ள சிறிய குழுக்கள் மிகவும் அதிநவீனப் பணிகளைப் பொறுப்பேற்று செய்வதைத் தொழில்நுட்பம் மிகவும் எளிதாக்கியுள்ளது.
இதில் ஒரு சுவாரசியமான முரண் உள்ளது.
இந்தியத் திறமையாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் குறைக்க முனையும் அமெரிக்கா, அதே முயற்சியால் அமெரிக்கப் பணிகள் இந்தியாவிற்கு நகர்வதை விரைவுபடுத்தக்கூடும்.
ஆனால், நான் இதை வெறும் சாதாரண கோடிங் மற்றும் பராமரிப்புப் பணிகளின் அடுத்த அலை என்று சொல்ல வரவில்லை.
ஆர்க்கிடெக்சர், தயாரிப்புப் பொறியியல், சைபர் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, தொழில்சார் தீர்வுகள் மற்றும் இறுதியாக தயாரிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றின் மீதான அதிகாரத்தைக் கைப்பற்றுவதே நமது முன்னால் உள்ள மிகப்பெரிய வாய்ப்பு.

இந்தியா அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும்…
இந்தியக் குழுக்கள் நியூயார்க்கிலிருந்து வரும் வழிகாட்டுதல்களைச் செயல்படுத்தும் அமைப்பாக மட்டுமே இருக்கக்கூடாது. என்ன உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலும் பங்கெடுக்க வேண்டும்.
ஒரு சர்வதேச வங்கியின் தொழில்நுட்பத் தளத்தைப் பராமரிப்பதுடன் நின்றுவிடாமல், அந்த வங்கியின் கட்டமைப்பையே மாற்றியமைக்க உதவ வேண்டும்.
வேறொருவரின் பிரச்னைக்குத் தீர்வு காணப் பொறியாளர்களை அனுப்புவதுடன் நிறுத்தாமல், அந்தப் பிரச்னைக்கான முழுப் பொறுப்பையும் நாமே ஏற்க வேண்டும்.
இதில் ஒரு சங்கடமான உண்மையும் இருக்கிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்திய ஐடி துறையின் வளர்ச்சியும், இந்திய ஐடி வேலைவாய்ப்புகளின் வளர்ச்சியும் ஒன்றாகவே பயணித்தன.
அதிக தொழில் வாய்ப்புகளைப் பெறுவதும், அதிக பொறியாளர்களை வேலைக்கு எடுப்பதும் ஒன்றாகவே நடந்தன.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உற்பத்தித்திறனை அதிகரிக்கும்போது, இந்தத் தொடர்பு தளரக்கூடும்.
அதே விகிதத்தில் ஆட்களின் எண்ணிக்கையை உயர்த்தாமலேயே, இந்திய ஐடி துறை மேலும் அதிநவீனப் பணிகளைக் கைப்பற்றி, கூடுதல் மதிப்பை உருவாக்க முடியும்.
எனவே, வெற்றி என்பதற்கு நமக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் தேவை.

அடுத்த 30 ஆண்டுகள்…
கடந்த முப்பது ஆண்டுகளாக, இந்திய ஐடி துறை முக்கியமாக இந்தியத் திறமையாளர்கள் மீதான குறைந்த செலவை நம்பியே போட்டியிட்டது.
ஆனால், அடுத்த முப்பது ஆண்டுகள் இந்தியத் திறமையாளர்களின் திறனைப் பொறுத்தே அமையும்.
நம்மால் வெறும் புரோகிராமர்களை மட்டும் உருவாக்காமல், ‘ஆர்க்கிடெக்டுகளை’ உருவாக்க முடியுமா? தயாரிப்புகளையும் அறிவுசார் சொத்துகளையும் இங்கேயே உருவாக்க முடியுமா?
உலகளாவிய முடிவெடுக்கும் அதிகாரத்தை இந்தியாவிற்கு நகர்த்த முடியுமா? ஒரு நபருக்கான உற்பத்தி மதிப்பை அதிகரித்து, அதன் மூலம் நமது ஊழியர்களுக்கு மிகச் சிறந்த ஊதியத்தை வழங்க முடியுமா?
அமெரிக்கா எத்தனை விசாக்களை வழங்குகிறது என்பதை விட இவைதாம் மிக முக்கியமான, பெரிய கேள்விகள்.
எனவே, விசா தொடர்பான தலைப்புச் செய்திகளைக் கண்டு கவலைப்பட வேண்டாம்.
இந்தியப் பொறியாளர்கள் அமெரிக்கப் பணிகளுக்குச் செல்வதை ட்ரம்ப் கடினமாக்கலாம்.
ஆனால், அமெரிக்கப் பணிகளையே இந்தியப் பொறியாளர்களைத் தேடி வர வைப்பதே நமக்கு முன்னால் உள்ள வாய்ப்பு” என்று கூறியிருக்கிறார் விநீத் நாயர்.




