அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங்களாக இருந்த கட்சி சீனியர்கள் யாரும் க்ரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு வரவில்லை. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு பெரும் எம்.எல்.ஏ-க்கள் படை த.வெ.க-வுக்கு ஆதரவளித்திருக்கிறது. சி.வி.சண்முகத்தின் எம்.ஆர்.சி நகர் இல்லத்துக்கு முதல்வர் விஜய்யே நேரில் சென்று, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் வாழ்த்துப் பெற்றிருக்கிறார். நாளை, த.வெ.க அரசாங்கம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், அ.தி.மு.க-வுக்குள் குழப்ப மேகங்கள் கும்மியடிக்கின்றன. இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம், ஒரு கட்டிட தொழிலதிபர்தான் என்கிறார்கள் கிளர்ச்சியாளர்கள்.
அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர், “தேர்தல் தோல்விக்குப் பிறகு, தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் திட்டத்தை எங்களிடம் சொன்னார் எடப்பாடி பழனிசாமி. அங்கிருந்துதான் சி.வி.சண்முகத்துக்கும் எடப்பாடிக்கும் இடையே வார்த்தைப்போர் வெடித்தது. இப்படியொரு திட்டத்தை எடப்பாடியிடம் சொன்னதே அந்த கட்டிட தொழிலதிபர்தான். 2017-2021 அ.தி.மு.க அரசாங்கத்தில், ஓ.பன்னீர்செல்வம் சி.எம்.டி.ஏ அமைச்சராக இருந்தபோது, அவருக்கு அறிமுகமானவர்தான் அந்த கட்டிட தொழிலதிபர். கோயம்பேட்டில், அந்த கட்டிட தொழிலதிபரின் புராஜெக்ட்க்கு ஒப்புதல் வழங்கி சர்ச்சையில் சிக்கினார் ஓ.பி.எஸ். இதனால், கட்டிட தொழிலதிபருக்கும் எடப்பாடிக்கும் இடையே சிறு மனக்கசப்பு உண்டானது. ஆனாலும்கூட, எடப்பாடியின் மகன் மிதுனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் அந்த தொழிலதிபர்.
அடுத்துவந்த தி.மு.க ஆட்சியில், உதயநிதி ஸ்டாலினுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொண்டார் அந்த தொழிலதிபர். டெல்லியில், அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுடனும் நட்பை உருவாக்கிக் கொண்டவர், அமித் ஷாவின் குட் புக்கிலும் இடம்பெற்றார். இந்தத் தொடர்புகள் அவரை பவர் சென்டராக உருவாக்கியது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடியின் நெருங்கிய உறவுகள் மீது வருமானவரித்துறை சோதனைகளை ஏவியது டெல்லி. அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க, தன்னுடைய மகன் மிதுன் ரூட்டில் அந்த தொழிலதிபரை கையில் எடுத்தார் எடப்பாடி. இருவரும் நெருக்கமானார்கள். அந்த தொழிலதிபரின் சிபாரிசில், வருமானவரித்துறை சங்கடங்களெல்லாம் தீர்ந்தன. பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பாக டெல்லியில் அமித் ஷாவை எடப்பாடி சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மொழிப்பெயர்ப்பாளராக இருந்தவர் அந்த கட்டிட தொழிலதிபர்தான். இப்படி ஆல் இன் ஆலாக வலம் வந்த தொழிலதிபர்தான், இப்போதைய அ.தி.மு.க குழப்பத்திற்கும் வித்திட்டுள்ளார்.

2026 தேர்தல் ரிசல்ட் வெளியான சமயத்தில், த.வெ.க-வை ஆட்சியமைக்கவிடாமல் தடுப்பதற்கு கடுமையாக முயற்சித்தார் உதயநிதி. அ.தி.மு.க-வுக்கு வெளியிலிருந்து தி.மு.க ஆதரவளித்து, எடப்பாடியை முதல்வராக்கும் திட்டத்தையும் முன்வைத்தார். அந்தத் திட்டத்தை எடப்பாடியிடம் சொல்லி, அவரது மனதைக் கரைத்தவர் அந்த கட்டிட தொழிலதிபர்தான். இந்தத் திட்டத்தை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் எடப்பாடி சொன்னபோதுதான் பிரச்னையும் வெடித்தது. ‘அந்த தொழிலதிபரோட சேர்ந்து ரொம்பவும் மாறிட்டீங்க. உங்களைக் கெடுத்தது பத்தாதுனு, கட்சியையும் நாசம் பண்ண ரெடியாகிட்டாரு. அவர் திட்டத்தைக் கேட்டு தி.மு.க-வோட கூட்டணி அமைச்சா, நம்ம கட்சியே காணாமல் போய்டும்’ என்று சி.வி.சண்முகம் ஓப்பனாக வெடிக்க, கூட்டத்தில் அனல் பறந்தது.
அ.தி.மு.க – தி.மு.க கூட்டணி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்ததும், வி.சி.க தலைவர் திருமாவளவனை முதல்வராக்கும் திட்டத்தை முன்வைத்தார் உதயநிதி. அதற்காகவும் எடப்பாடியிடம் பேசியது அந்த கட்டிட தொழிலதிபர்தான். அதற்கும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆதரவளிக்கவில்லை. இப்படி எடப்பாடியை குழப்பி, கட்சியையே புதைக்கும் அளவுக்கு குழப்ப சகதியில் சிக்கவைத்துவிட்டார் அந்த கட்டிட தொழிலதிபர். ‘தி.மு.க-அ.தி.மு.க கூட்டணி’ என்ற திட்டத்தை அவர் முன்வைக்கவில்லை என்றால், இவ்வளவு பெரிய குழப்பம் கட்சிக்குள் இன்று ஏற்பட்டிருக்காது. எடப்பாடிக்கு எதிராக முழங்குபவர்கள்கூட, அமைதியான முறையில் மாற்று ஏற்பாடுகளுக்கு திட்டமிட்டிருப்பார்கள். எடப்பாடியிடம் கட்சியை சீரமைப்பது குறித்து விவாதித்திருப்பார்கள். இன்று எல்லாமே கையைவிட்டுப் போய்விட்டது” என்கிறார்கள் வருத்தத்துடன்.
அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய அந்த கட்டிட தொழிலதிபர், தற்போது த.வெ.க-வின் அதிகார மையங்களோடு நெருங்க ஆரம்பித்திருக்கிறாராம். அக்கட தேசத்தின் ஆட்கள் மூலமாக, ‘உங்களுடைய ஆட்சி சுமூகமாக நடைபெறுவதற்கு டெல்லியில் நான் பேசித் தருகிறேன்’ என்று வலிய வந்து நேசக்கரம் நீட்டியிருக்கிறாராம். கண நேரத்தில் கட்டிட தொழிலதிபர் ஜாகை மாறியிருப்பதை, கடுகடுப்போடுதான் பார்க்கின்றன தி.மு.க., அ.தி.மு.க வட்டாரங்கள். முதல்வர் விஜய்க்கு பாசக்கரம் நீட்டியிருக்கும் வேலுமணி, சண்முகம் வகையறாக்களும் அந்த கட்டிட தொழிலதிபர் மீது கடும் கோபத்தில் இருப்பதால், அதிகார மையத்தில் பல அதிரடி நகர்வுகள் நடக்கலாம் என்கிறது பனையூர் வட்டாரம்.




