12
May, 2026

A News 365Times Venture

12
Tuesday
May, 2026

A News 365Times Venture

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

Date:

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் மூன்றாம் இடத்திற்கு தள்ளபட்டிருக்கிறது.

த.வெ.க அலை ஒருபுறம் அடித்தாலும், அ.தி.மு.க-வில் புதுமுகம் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், மீண்டும் பழைய நபர்களுக்கே வாய்ப்பு கொடுத்தது பெரும் பின்னடைவாக மாறியது என்கின்றனர் அக்கட்சியினர்.

என்னதான் நடக்கிறது தேனி அ.தி.மு.க -வில்..?

இது குறித்து அ.தி.மு.க வட்டாரங்களில் பேசினோம். “ஆண்டிப்பட்டி தொகுதி அதிக கிராமங்களை உள்ளடக்கிய தொகுதி. படப்பிடிப்பிற்காக எம்.ஜி.ஆர் வைகை அணைக்கு வரும்போதெல்லாம் அவரை பார்ப்பதற்காக ஒரு பெரிய கூட்டம் கூடும். தேனியில் தனக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதை உணர்ந்ததாலேயே, 1984-ல் எம்.ஜி.ஆர் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு பிரசாரத்திற்கே செல்லாமல் படுத்துக்கொண்டே வெற்றி பெற்றார்

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்

அவரின் மறைவிற்கு பிறகு வந்த 1989-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஆண்டிப்பட்டி தொகுதியில் நின்று தோல்வியடைய, போடி தொகுதியில் நின்ற ஜெயலலிதா வெற்றி பெற்றார். ஜானகி, ஜெயலலிதா இருவரில் யார் எம்.ஜி.ஆருக்கு அடுத்து என்ற கேள்விக்கான பதிலை இந்த வெற்றி சுட்டிக் காட்டியதோடு, கட்சியும் கைகளுக்குள் வந்ததால், தேனி மாவட்டம் மீது ஜெயலலிதாவிற்கு ஒரு தனிபிரியம் ஏற்பட்டது.

அதனாலேயே அ.தி.மு.க ஆட்சியமைக்கும் போதெல்லாம் தேனி மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுத்தார். கட்சியின் கட்டமைப்பை மாற்றி அ.தி.மு.க -வை பலப்படுத்திய ஜெயலலிதா, தேனியிலிருந்துதான் தென்மாவட்டங்களுக்கு கட்சியை விரிவுப்படுத்தினார்.

தனக்கு அடுத்தும் தேனி மாவட்டத்தை கைக்குள் வைத்திருப்பதற்காகவே,1999-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரனை போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தார்.

டி.டி.வி தினகரன்
டி.டி.வி தினகரன்

இந்த வெற்றிக்கு கடுமையாக உழைத்த ஓ.பன்னீர்செல்வத்தை, ஜெயலலிதாவிற்கு அறிமுகம் செய்து வைத்த டி.டி.வி.தினகரன், அடுத்து வந்த 2001 சட்டமன்ற தேர்தலில் எம்.எல்.ஏ சீட்டையும் பெற்று கொடுத்தார். அதே சமயத்தில்தான் தங்கதமிழ்செல்வனும் அ.தி.மு.க-விற்குள் எம்.எல்.ஏ ஆகிறார். டான்சி வழக்கில் சிக்கிய ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவதற்காக ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், கட்சிக்குள் முக்கிய நபராக மாறினார் தங்கதமிழ்செல்வன்.

டி.டி.வி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவுக்கு தங்கதமிழ்செல்வனும் விசுவாசிகளாக மாறவே, தேனி மாவட்டத்தில் இருவரின் கையும் ஓங்குகிறது. 2001-ம் ஆண்டுக்கு முன்பு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளில் அ.தி.மு.க -வில் புதுமுகம் அறிமுகமாகி, கட்சியில் வளர்ச்சியடைந்து வந்த நிலையில் தங்கதமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் வருகைக்கு பின் மற்ற நிர்வாகிகளால் வளர்ச்சியடைய முடியவில்லை.

தங்க தமிழ்ச்செல்வன் | ஓ.பன்னீர்செல்வம்
தங்க தமிழ்ச்செல்வன் | ஓ.பன்னீர்செல்வம்

தங்கதமிழ்செல்வன் தி.மு.கவிற்கு மாறிய பின்பும், புதிதாக அ.தி.மு.க-விற்குள் வரும் நபர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை; தலைமையும் இது குறித்து கண்டுகொள்ளவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்துவந்த லோகிராஜனின் குடும்பம்தான் தற்போது அ.தி.மு.க -வில் ஆளுமை செலுத்தி வருகிறது.

இந்த தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புதுமுகங்களாக இல்லாமல், பழைய ஆட்களையே வேட்பாளராக நிறுத்தியதும் தேனி மாவட்டத்தில் மூன்றாவது இடத்திற்கு அ.தி.மு.க தள்ளப்பட்டிருப்பதற்கு காரணம்” என்றனர்.

இது குறித்து தேனி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முருக்கோடை ராமர் நம்மிடையே பேசும்போது, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு கஷ்டமான காலங்களில் தேனி மாவட்ட மக்கள் அவர்களுடன் நின்று வெற்றி பெற வைத்தனர். அதற்கு பிறகு வந்த ஓ.பன்னீர்செல்வம், அவரின் மகன் ரவீந்தர நாத், தங்க தமிழ்செல்வன் என மூவருக்கும் வெற்றியை பெற்று தந்த தேனி மாவட்ட அ.தி.மு.கவையே அழிக்கிறேன் என புறப்பட்டிருக்கிறார்கள். தங்களை வளர்த்துவிட்ட கட்சிக்கு விசுவாசம் காட்ட வேண்டாமா?

முருக்கோடை ராமர்

தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஏலக்காய், திராட்சை, மாம்பழம், காய்கறிகள் ஆகியவை அதிகளவில் விளையும் பகுதிகளாக இருந்ததால், மக்கள் ஓரளவு பொருளதார ரீதியாக பிரசனையில்லாமல் இருந்தனர். அதே சமயத்தில், இந்த பொருள்களை விற்பனை செய்வதற்காக, கொண்டு செல்ல போதிய சாலை வசதி இல்லை என்பதுதான் தேனி மாவட்டத்தின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, தேனியில் உள்ள மலைகிராமங்கள் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி அமைத்து கொடுத்தார். கானா விலக்கு அரசு மருத்துவமனை, அரசு கல்லூரிகள் கொண்டுவந்தார். டி.டி.வி தினகரன், தொகுதி முழுவதும் பாலங்களை அமைத்து, கோவில் கட்டுவதற்கு பணம் கொடுத்து அ.தி.மு.க -வின் செல்வாக்கை பெருக்கினர்.

அதன் பிறகு வந்த தங்கதமிழ்செல்வனும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களுடைய சொந்த வளர்ச்சியிலேயே கவனம் செலுத்தினார்கள். கட்சிக்கும், தொகுதிக்கும் எதுவுமே செய்யவில்லை. இருவரையும் தாண்டி யாரையும் வளர்த்து விடவும் மாட்டார்கள். இதனாலேயே தொகுதி மக்களும், கட்சி நிர்வாகிகளும் அ.தி.மு.க மீது நம்பிக்கை இழக்க தொடங்க காரணம்.

ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது

தங்கதமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்திற்கென தனித்த செல்வாக்கு இன்னமும் கூட இல்லை. முன்னாள் முதலமைச்சர் என்ற காரணத்திற்காகவே அவருடைய சமூக மக்கள் ஓ.பன்னீர்செல்வத்தை வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

தி.மு.க -விற்கு மாறிய தங்கதமிழ்செல்வன் கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்தார். ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு கட்சியை பிளவுப்படுத்தினார். இருவருமே தங்களுடைய சுயலாபத்திற்காக கட்சியை வளைத்ததாலேயே, அ.தி.மு.க இந்த இடத்திற்கு வந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றி பெறுகிற நிலையில்தான் இருந்தது த.வெ.கவின் அரசியல் வருகை தேர்தல் முடிவுகளை மாற்றியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-விற்கு ஆபத்து வரும் போதெல்லாம் கட்சியை காப்பாற்றி, தோல்வியிலிருந்து வெற்றிக்கு மாற்றியது இந்த தேனி மாவட்ட மக்கள்தான். இப்போதும் அ.தி.மு.கவை வெற்றி பாதைக்கு அழைத்து வருவார்கள் ” என்றார்.

காலத்திற்கேற்ப, கட்சியையும் தகவமைக்கவில்லை என்றால், தேனி மாவட்ட அ.தி.மு.கவின் நிலைமைதான் மற்ற கட்சிகளுக்கும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தகர்த்த செந்தில் பாலாஜி; கொடியேற்றிய விஜய்… `கோட்டை'யில் கோட்டைவிட்ட அதிமுக!

“கோவை என்றைக்கும் அண்ணா தி.மு.க கோட்டை. எனவே, கோவையில் அனைத்து தொகுதிகளிலும்...

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் – எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங்...

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" – பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின்...

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' – தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ...