தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்யாமல் இருப்பதால், அதை இறுதி செய்யும் வேலையை தி.மு.க தலைமை கையில் எடுத்துள்ளது.
ஆனால், தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்காமல் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என கூட்டணி கட்சியினர் முரண்டு பிடிக்கிறார்கள். இதனால் கணக்கை முடித்து தேர்தல் தேர்தல் வேலையை துவக்குவது எப்போது என ஆலோசிக்கிறது அறிவாலய வட்டாரம்.
திருச்சியில் நடந்த மாநாடு தி.மு.கவுக்கு திருப்பம் தரும் மாநாடாக இருக்கும் என தி.மு.க தலைமை உற்சாகத்துடன் சொல்லிவருகிறது. ஆனால், “கூட்டணிக் கட்சிகளை உற்சாகப்படுத்தாமல், எப்படி தி.மு.கவுக்கு மட்டும் மாநாடு திருப்பம் தரும்” என கடுப்பில் இருக்கிறார்கள் கூட்டணிக் கட்சியினர்.
தொகுதி குறைப்பு நடவடிக்கை
இன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொகுதி உடன்படிக்கையை இறுதி செய்ய அறிவாலயத்திற்கு வந்தனர். தி.மு.க தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் ஆலோசனை செய்தனர். அப்போது, `கடந்த முறை உங்களுக்கு ஆறு இடங்களை ஒதுக்கினோம், இந்த முறை ஒரு இடத்தையாவது குறைத்து கொண்டு ஐந்து இடங்களை வாங்கிக்கொள்ளுங்கள்’ என தேர்தல் பேச்சுவார்த்தை குழுவினர் சொல்ல, கடும் டென்சனில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்துள்ளார்கள்.
“நாங்கள் இந்த முறை கூடுதல் தொகுதியை எதிர்பார்தோம். அதை தர முடியாவிட்டால் கூட பராவாயில்லை. இருக்கிற தொகுதியையும் குறைக்க சொல்வது நியாயமா?”என்று கடுப்பில் கேட்டுள்ளார்கள். மற்றொரு புறம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் நான்கு தொகுதிகளை வாங்கிக்கொள்ளுங்கள் என்று ஏற்கனவே தி.மு.க தரப்பு சொல்லியுள்ளார்கள். அதற்கு அவர்கள், `ஆறுக்கு குறைவாக ஒரு இடத்தை கூட நாங்கள் வாங்க மாட்டோம்’ என்று உறுதியாக சொல்லியுள்ளார்கள்.
இவர்கள் எல்லாம் ஒருபுறம் என்றால் மறுமலர்ச்சி தி.மு.க கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை அவர்களை நாலு இடங்களில் மட்டும் போட்டியிட வைக்க தி.மு.க வலியுறுத்தி வருகிறது. மேலும் 2028-ம் ஆண்டு நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் ஒரு இடத்தை மறுமலர்ச்சி தி.மு.க-வுக்கு வழங்குவோம் என தி.மு.க உறுதி கொடுத்துள்ளதாம். ஆனால் இதை ம.தி.மு.க தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

தி.மு.கவின் இந்த தொகுதி குறைப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ம.தி.மு.க நாளை உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தை நடத்த உள்ளது . தி.மு.க வின் தொகுதி குறைப்பு நடவடிக்கை குறித்து அதில் ஆலோசிக்க உள்ளார்கள். ஏற்கனவே வி.சி.கவும் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று தி.மு.க தலைமையிடம் அழுத்தம் கொடுத்த நிலையில், அடுத்தடுத்து கூட்டணிக்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் தி.மு.க தலைமை தவித்து வருகிறது.
இழுபறி
இதுவரை காங்கிரஸ், ஐ.யு.எம்.எல், ம.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் மட்டுமே கூட்டணியை இறுதி செய்துள்ளது தி.மு.க. பிற கட்சிகள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முடியாமல் சீட் விவகாரம் இழுபறியாக உள்ளது.
தி.மு.க நிர்வாகிகள் நம்மிடம், “ தி.மு.க தலைமை தேவையில்லாமல் முதலில் தே.மு.தி.க-வுக்கு எட்டு தொகுதிகள் என்று இறுதி செய்துள்ளனர். அந்த விவரம் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தெரிந்த பிறகு, கடும் கடுப்பில் இருக்கிறார்கள். அதுவும் ராஜ்யசபா சீட் கொடுத்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே வி.சி.க , கம்யூனிஸ்ட், ம.தி.மு.க என அனைவரும் தங்களுக்கு தே.மு. தி.க எண்ணிக்கையில் சீட் வேண்டும் என நெருக்கடி கொடுத்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் எல்லாக் கட்சியுடனும் கூட்டணியை இறுதி செய்ய தலைமை உத்தரவிட்டுள்ளது.

புதிய யுக்தி
இதனால் புதிய யுக்தியை தி.மு. க கையில் எடுக்க உள்ளது. தே.மு.தி.க-விடம் பேசி எட்டு தொகுதிகளுக்கு பதிலாக ஆறு தொகுதிகளை இறுதி செய்ய உள்ளோம். அதே ஆறு எண்ணிக்கையை கம்யூனிஸ்ட், வி.சி.க , ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு கொடுத்து தொகுதி பேச்சுவார்த்தையை இறுதி செய்ய தி.மு.க தலைமை முடிவெடுத்துள்ளது. கூட்டணி கட்சிகளிடம் தொகுதிகளை குறைக்க சொல்லி வழக்கம் போல பேசுவோம். படியாவிட்டால் மட்டுமே கடைசியாக இந்த கணக்கை செயல்படுத்த உள்ளோம்” என்கிறார்கள்.




