நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 7வது முறையாக தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி அறிவிக்கும் கூட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்செந்தூரில் நடந்த கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், ”எங்கள் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்து தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டு மக்கள் இனி உங்கள் முகத்தில் கரியை பூசுவார்களே தவிர இனி ஒரு காலமும் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது. தி.மு.க-வை வீழ்த்தி விடலாம் என்று கனவு காண்கிறீர்களா? கனவு காணாதீர்கள். பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் என்று யார் வந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்போம்.
இன்னும் நான்கு மாதம்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நிலைக்கும். அதுவரை தி.மு.க.,தான் இந்த ஆட்சியை தாங்கிக் கொண்டிருக்கும். நான்கு அல்லது ஆறு மாதத்தில் மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வராக வருவார். தமிழகத்திற்குள் மீண்டும் லாட்டரியை கொண்டுவர, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முயற்சிக்கிறார். தமிழகத்தில் லாட்டரி நுழைய நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். அவருக்கு துணிச்சல் இருந்தால் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் பார்க்கலாம்.

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அவரை ஒரு லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறச் செய்வோம். கொளத்தூர் தொகுதியை, சிங்கப்பூர் போல ஸ்டாலின் மாற்றி வைத்திருந்தார். ஆனால், அந்த தொகுதி மக்கள் நன்றி மறந்தவர்கள். அவருக்கு ஓட்டு போடவில்லை” என்றார்.




