பதினேழாவது சட்டசபையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக, இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த பதினாறு சட்டமன்ற நிகழ்வுகளின்போது நடந்த சில முக்கிய சம்பவங்களைத் திரும்பிப் பார்க்கலாம்.
யார் யார் எப்போது?
எந்தெந்தக் கட்சிகள் எந்தெந்த தேர்தல்களில் வென்று எத்தனை முறை தமிழகத்தை ஆட்சி செய்தன என்று பார்க்கலாமா?
காங்கிரஸ் – நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தொடர்ச்சியான மூன்று ஆட்சிக் காலங்கள் (1952, 57, மற்றும் 1962 தேர்தல்கள்)
தி.மு.க – 1967, 1971,1989, 1996, 2006, 2021
அ.இ.அ.தி.மு.க – 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2016
தவெக – 2026
காங்கிரஸ் ஆட்சியில் ராஜாஜி, காமராஜர் அவருக்குப் பின் பக்தவச்சலம் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர்.
திமுக ஆட்சி செய்த காலங்களில் சி.என்.அண்ணாதுரை, கருணாநிதி அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர். கருணாநிதி முதல்வராக இருந்த ஒரு சமயத்தில் ஸ்டாலின் துணை முதல்வராகவும்… ஸ்டாலின் முதல்வராகப் பதவி வகித்த கடந்த ஆட்சியில் உதயநிதி துனை முதல்வராகவும் இருந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் எம்.ஜி.ஆர், அவருக்குப் பின் சில மாதங்கள் அவர் மனைவி ஜானகி, தொடர்ந்து ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதல்வர் பதவியை அலங்கரித்தனர். பழனிசாமி முதல்வராக இருந்த போது துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார்.

கலைத்து ஆடிய மத்திய அரசு!
தமிழக அரசியல் வரலாற்றில் சமீப காலமாகத்தான் ஆட்சிக் கலைப்பு, குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற வார்த்தைகளெல்லாம் விடை பெற்றிருக்கின்றன.
ஆனால் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கிய புதிதில் ஆட்சிக் கலைப்பு அஸ்திரத்தை அவ்வப்போது எடுத்திருக்கிறது மத்திய அரசு.
திமுக ஆட்சி இரு முறையும், அதிமுக ஆட்சி இரு முறையும் கலைக்கப்பட்டிருக்கிறது.
1971ம் ஆண்டு தேர்தலில் வென்று முதல்வராக இருந்தார் கருணாநிதி. அவரது ஆட்சிக்காலம் முடிவடைய சில மாதங்களே இருந்த நிலையில் அந்த அரசு கலைக்கப்பட்டது. காரணமாக சர்காரியா ஊழல் விவகாரத்தைச் சொன்னது மத்திய அரசு,. திமுக-வினரோ நெருக்கடி நிலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காததனாலேயே கலைக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். கலைப்புக்குப் பின் நடந்த 77 தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை.
அடுத்து 1989 தேர்தலில் வென்று இரண்டு ஆண்டுகள் பதவி வகித்த நிலையில் 1991-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. ஈழப் போராளிகளுக்கு ஆதரவு தந்ததாகவும் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் சொல்லி கலைக்க பரிந்துரைத்தது அப்போதைய பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு. கலைப்புக்குப் பிறகு நடந்த 91 தேர்தலிலும் ராஜீவ் அனுதாப அலை வீச, திமுக-வால் வெற்றி பெற முடியவில்லை.
அதிமுக அரசு 1980ம் ஆண்டு முதன் முதலாக கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-வுடன் கூட்டணி சேர்ந்து வென்றிருந்த இந்திரா காந்தி, தோல்வியடைந்த கட்சிகள் ஆள்கின்ற தகுதியை இழந்து விட்டன எனச் சொல்லி கலைத்தார். ஆனால் திமுக தூண்டுதலாலேயே கலைக்கப்பட்டதாகக் கூறினர் அதிமுகவினர். பிறகு நடந்த தேர்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது அதிமுக. திரும்ப 1988 ல் ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது கலைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜெ., ஜா என இரு அணிகளாகப் பிளவு பட சட்டமன்றத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி சட்டபையைக் கலைத்தது மத்திய அரசு.
முதல்வர்கள் – ஹைலைட்ஸ்
காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்திய அண்ணா ஒரு பதவிக்காலம் கூட முழுமையாக பதவி வகிக்காமலேயே மறைந்து விட்டார்.
கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி, இரண்டு முறைதான் பதவிக்காலத்தை முழுவதுமாக ஆட்சி செய்திருக்கிறார். அதில் ஒரு ஐந்தாண்டு தனி மெஜாரிட்டி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா – தனி மெஜாரிட்டியுடன் முழுப் பதவிக் காலத்தையும் ஆண்ட முதல் முதல்வர் என்ற பெருமை இவருக்குண்டு. அதேபோல் சிறைத் தண்டனை மூலம் முதல்வர் பதவி இழந்த முதல் முதல்வரும் இவரே!
சலசலப்பு, கைகலப்பு!
1989 ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா திமுக-வினர் சட்டப்பேரவைக்குள் தன்னைத் தாக்கி தன் சேலையைப் பிடித்து இழுத்ததாக பேட்டி தந்தார். முதல்வராக இருந்த கருணாநிதியின் கையில் இருந்த பட்ஜெட் நகலை கிழிக்க முயன்றனர் என அதிமுக-வினரைக் நோக்கிக் கைகாட்டினர் திமுக-வினர்.
2017ம் ஆண்டு பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது திமுக-வின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து எழுந்த சலசலப்பின்போது, தனது சட்டை கிழிக்கப்பட்டதாக பனியனுடன் மீடியா முன் வந்து பேசினார் மு.க.ஸ்டாலின்.

மூன்றாவது முறையாக மைனாரிட்டி!
தமிழக தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இரண்டு முறை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத ஒரு நிலைமை உருவாகியிருக்கிறது.
முதல் முறையாக 1952 ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் அப்போது தமிழ்நாடு தனி மாநிலமாக இல்லாமல் சென்னை மாகாணமாக இருந்தது. அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி வேறு சில கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்தது.
அதன்பிறகு 2006ம் ஆண்டு தேர்தலில் அதே சூழல் உருவானது. புதிதாக களம் கண்ட விஜயகாந்த் கணிசமான வாக்குகளைப் பிரிக்க, பதவியிலிருந்த அதிமுக ஆட்சியை இழக்க, ஆட்சியைக் கைப்பற்றிய திமுக-வுக்கோ பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. ஆயினும் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார் கருணாநிதி. அதேநேரம் கடைசி வரை காங்கிரஸ் உறுப்பினர்களை அமைச்சரவையில் சேர்க்கவே இல்லை. பெரும்பான்மையை நிரூபித்தே ஆட்சி நடந்தாலும் அந்த ஐந்து ஆண்டுகளும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா திமுக-வை குறிப்பிடும் போதெல்லாம் `மைனாரிட்டி திமுக அரசு’ என்றே சொல்லி வந்தார்.
மூன்றாவது முறையாக விஜய் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள இந்த தேர்தலில் பெரும்பான்மைக்குப் பத்து இடங்கள் தேவைப்பட்ட நிலையில், அவை கிடைக்காமல் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது புதிதாக களம் கண்ட தவெக. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிருபித்துள்ளது தவெக.




