“காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்… அவர் என்கிட்ட வந்து ‘என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்… என்னனு கவனிக்க மாட்டியானு’ மொறக்கிறாரு…” என கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த ஹேமன்ஸு பட்டேலிடம் கோபத்தைக் காண்பித்தார் அவரருடைய அப்பா.
“அப்படி நான் என்ன தப்பா கேட்டுட்டேன்… சின்ன வயசுலிருந்து இந்த கிராமத்துல தானே இருக்கோம். ஏன் எதுவும் மாறல?சுத்தமான குடி தண்ணீ கூட இல்லாம எவ்ளோ கஷ்டப்படுறோம். இதை ஏன் சரிபண்ணாம இருக்கீங்கனுதான் கேட்டேன். ஆனா அவரு, ‘டேய் நீ சின்னபுள்ள. படிக்கிற வேலையமட்டும் பாரு… போ’னு துரத்துராரு’ எனக் காலையில் நடந்த சம்பவத்தை தந்தையிடம் வேகத்துடன் சொல்லி முடித்தார் ஹேமன்ஸு பட்டேல். அப்போது அவருக்கு வயது 22.
இந்தியாவின் பரபரப்பு அரசியலுக்கு பஞ்சமில்லாத மாநிலங்களில் ஒன்று குஜராத். பெரும் அரசியல் ஆட்டங்களுக்குப் பிறகு கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த அந்த மாநிலத்தின் தலைநகரிலிருந்து, 82 கி.மீ தூரத்தில் இருக்கிறது புன்சாரி கிராமம். 6000-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் அந்த கிராமத்தின் அஸ்திவாரம் விவசாயமும், பால் உற்பத்தியும்தான். முறையில்லா சாலைகள், சூரியனும், சந்திரனும் விளக்காக இருந்து வெளிச்சமளிக்கும் அந்தக் கிராமத்தில், எங்கு தோண்டினாலும் உப்புத் தண்ணீர் மட்டுமே.
அதனால் குடிநீர் பற்றாக்குறை. பள்ளிகள் இருந்தும் படிக்க வராமல், ஊட்டச்சத்து குறைபாடுடன் வளரும் குழந்தைகள், போதிய மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதிகளில்லாத சூழலால் போன்ற காரணங்களால் வறுமை தாண்டவமாடும் சிறிய கிராமம்தான் புன்சாரி.
ஆனால், 2011-ம் ஆண்டு அந்த கிராமத்துக்குதான் ‘India’s First Smart Village‘ என மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது. அதற்குப் பிறகுதான் குஜராத் அரசு அந்த கிராமத்தை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்தது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், கம்போடியா, கோஸ்டாரிகா, எத்தியோப்பியா, கானா, கென்யா, மாலத்தீவுகள், மால்டா, மங்கோலியா, பெரு, இலங்கை, தான்சானியா, உகாண்டா என வறுமையில் வாடும் மக்கள் அதிகம் இருக்கும் உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இதை எப்படி சாத்தியப்படுத்தினார்கள் என ஆய்வு செய்து, பார்வையிட்டுச் செல்கின்றனர்.
ஆமாம்! உண்மையில் இது எப்படி சாத்தியமானது? சில ஆண்டுகளில் அந்த கிராமம் எந்தப் புதையலைக் கண்டுபிடித்தது? இதன் பின்னணி என்ன? என நமக்குள் எழும் ஆயிரம் கேள்விகளுக்கு அடித்தளமிட்ட ‘ஏன் எதுவும் மாறல…’ என்ற ஹேமன்ஸு பட்டேல் பஞ்சாயத்து தலைவரிடம் கேட்ட அந்த முதல் கேள்வி.
‘நீ சின்னபுள்ள படிக்கிற வேலைய மட்டும் பாரு’ எனப் பஞ்சாயத்துத் தலைவரால் குறைத்து மதிப்பிடப்பட்ட ஹேமன்ஸு பட்டேல், அக்டோபர் 20, 2006-ம் ஆண்டு ஊர் பஞ்சாயத்துத் தலைவராக 300 ஓட்டு வித்தியாசத்தில் தேர்வு செய்யப்படுகிறார். அப்போது அவருக்கு வயது 23. அதற்குப் பிறகும் தொடர்ந்து படித்து கல்லூரிப் படிப்பை முடிக்கிறார். அதே நேரம் அந்தப் புன்சாரி கிராமம் எப்படி மாறவேண்டும் என்ற அவரின் பெரும் கனவையும் நனவாக்க தீவிரமாக திட்டமிடுகிறார். அந்தக் கனவு கிராமத்தைக் கட்டமைக்க அவர் வைத்த முதல் செங்கல்தான் தெருமுனை எங்கும் வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர்.
பஞ்சாயத்து அலுவலத்திலிருந்து பேசினால் ஒவ்வொரு தெருவிலும் இருக்கும் வாட்டர் ப்ரூஃப் ஸ்பீக்கர் மூலம் மக்கள் கேட்க முடியும். ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு, “ஹலோ… கேக்குதா…. அதாவது மகா ஜனங்களே… இன்னிக்கு மாநில அரசும் மத்திய அரசும் அறிவித்திருக்கிற திட்டங்கள் என்னனா..” என அன்றைய தினம் இரு அரசுகளும் கிராம பஞ்சாயத்துக்கு அறிவித்திருக்கும் திட்டங்கள், அல்லது மக்களுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள், மக்கள் உடனே செய்துமுடிக்க வேண்டிய அரசு ஆவணங்கள் தொடர்பான தகவல்கள், மரண அறிவிப்பு, குழந்தை பிறப்பு அறிவிப்பு என அரசுக்கும் மக்களுக்குமான அந்த இடைவெளியை ‘ஸ்பீக்கர் சத்தத்தை ஏத்தி’ குறைக்கத் தொடங்கினார்.
அதனால், தினமும் மக்கள் பஞ்சாயத்து தலைவரின் குரல் மூலம் அவருடன் நெருக்கமாக உணர்ந்தார்கள். இதனால் ஏற்பட்ட பலன்குறித்து ஒரு நேர்காணலில் பேசிய ஹேமன்ஸூ பட்டேல், “அந்த ஸ்பீக்கரில் நான் பேசியதன் மூலம், எங்கள் கிராமத்தில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பென்ஷன், வங்கி கணக்கு, விவசாயிகளுக்கான மானியம் தொடர்பான அறிவிப்பு என எந்தத் தேவையுடையவர்களும் விடுபடாமல் அவர்களுக்கான உதவிகள் 100 சதவிகிதம் செய்துமுடிக்க முடிந்தது. ஒவ்வொரு குடும்பத்தின் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்படியான ஒரு வாட்ஸ் ஆப் குரூப் இருக்கும். அதன் மூலம் தேவையான தகவல்களை அந்தக் குடும்பங்களுக்கு தெரிவிப்போம்.
ஒரு கோரிக்கையை முன்வைத்து பால்வளத்துறை அமைச்சரை சந்தித்தபோது, அவர் எங்கள் கிராமத்தைப் பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது வாட்ஸ் ஆப்-பில் நாங்கள் வருகிறோம் என்ற செய்திமட்டும்தான் அனுப்பினேன். அமைச்சரை வரவேற்க 500 பேர் எங்கள் அலுவலகத்தில் திரண்டிருந்தார்கள்” என்கிறார். இப்படி மக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார் ஹேமன்ஸூ பட்டேல்.
பஞ்சாயத்துத் தலைவரிடம் முதன்முதலில் ஹேமன்ஸூ பட்டேல் கேட்ட கேள்விகளில் ஒன்று ‘நல்லக் குடிநீர் கூட இல்லையே’ என்பதுதான் அதற்கான தீர்வைத் தேடத் தொடங்கினார் ஹேமன்ஸூ. பூமியைத் தோண்டினால் தண்ணீர் இல்லாமல் இல்லை. ஆனால் அந்தத் தண்ணீர் உப்பாக இருக்கிறது. அதை சுத்தப்படுத்தி RO Watter ஆக கொடுத்தால் என்ன? என்ற திட்டம் 2010-ம் ஆண்டு செயல்வடிவமானது. ஐந்து போர்வெல் அமைத்து, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, அங்கிருந்து ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் கணெக்ஷன் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டது.
பொது – தனியார் கூட்டாண்மை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த பிஸ்னஸ் மூலம் கிராமத்துக்கு குடிநீர் பிரச்னை தீர்ந்தது. 20 லிட்டர் தண்ணீருக்கு 4 ரூ எனவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பத்தாருக்கு இலவசமாகவும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இந்த தண்ணீர் விற்றதின் மூலம் கிடைத்தப் பணத்தில் தண்ணீர் லாரிகள் வாங்கப்பட்டு, சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குடிநீர் சப்ளை செய்து பொருளீட்டப்பட்டது. இந்த இந்தத் திட்டத்தின் கீழ் 77 போர்வெல் கிணறுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து கவனம் செலுத்த வேண்டிய முக்கிய சிக்கல் ஆரோக்கியம். அதற்காக primary healthcare center (PHC) எனும் மருத்துவமனை அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் 24/7 மணி நேரமும் இருக்கும்படி 2 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மருத்துவமனைக்கென தனி வாகனம் இருக்கிறது. அதன்மூலம் கர்பிணிகள், வயதானவர்களை சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்கள். மேலும், Accredited Social Health Activist எனக் கூறப்படும் சமூக சுகாதார ஆர்வலர்கள் எப்போதும் செயல்பாட்டிலேயே இருக்கவைக்கப்பட்டார்கள். அதன்மூலம், சுகாதார சேவைகளுக்கான அணுகலையும், நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சைப் பெறுவதையும் உறுதி செய்தார்.
அதுமட்டுமல்லாமல், ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டிற்கான குழு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கிராமவாசிகள் அனைவரும் கொண்டுவரப்பட்டார்கள். 18 முதல் 60 வயது வரையிலான ஒவ்வொரு கிராமவாசிக்கும் ரூ1 லட்சம் விபத்து காப்பீடு, ரூ25,000 மருத்துவ உரிமைகோரல் காப்பீடு வழங்கப்பட்டது. விவசாயிகள் RSBY15 திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறார்கள். விபத்து ஏற்பட்டால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் மருத்துவமனைகளில் ரூ 1.2 – 2 லட்சம் வரை காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படி மருத்துவ விழிப்புணர்வு காரணமாக 2013-ம் ஆண்டு எந்த தொற்றுநோயும் பரவாத கிராமமாக மாறியது.
ஆரோக்கியத்துக்கு அடுத்து மிகவும் கவனம் செலுத்தப்பட்டது கல்வி நிலையங்கள். எட்டு அங்கன்வாடி மையங்கள், ஐந்து தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப் பள்ளி, ஒரு மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளிகளில் கணினியுடன் கூடிய ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளன. ப்ரொஜெக்டர்களுடன் கூடியவகுப்பறைகள் நிறுவப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கான லாக்கர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மாணவர்கள் அனைத்து புத்தகங்களையும் சுமக்கும் சுமைகள் குறைக்கப்பட்டது.
மேலும், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல வாகன வசதி, வகுப்பறைகளில் சிசிடிவி கேமரா, தொடு திரையின் மூலம் ஸ்மார்ட் கிளாஸ், வகுப்பறை சிசிடிவி கேமரா மூலம் பெற்றோர்கள் வகுப்பை கண்காணிக்கும் வாய்ப்பு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த மாணவர்களுக்கு கிராம பஞ்சாயத்தில் உதவித்தொகை திட்டம், மாநில அரசின் மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, அதைக் கண்காணிக்க ஒரு மேலாளர், தரமான குடிநீர், பாதுகாப்பான, சுத்தமான கழிவறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் அனைத்தும் 100 சதவிகிதம் கண்காணிப்புக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது.
மேலும், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தினங்களில் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக கட்டளையின்படி கற்பித்தல் நடத்தப்பட்டது. மொபைல் பயன்பாடு மூலம் அணுகக்கூடிய மொபைல் நூலகத்திற்கான அணுகலும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சிறப்பான திட்டங்களால் பள்ளி இடைநிற்றல் விகிதம் பூஜ்ஜியமாகக் குறைந்தது.
மாநில அரசின் “ஷக்ஷார்த்தா மிஷன்” கீழ் பெரியவர்களுக்கும் எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்த இரண்டு பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
நடமாடும் நூலகத்தை உருவாக்குவதற்காக BRGF28 நிதிக்கு விண்ணப்பித்து செயல்படுத்தியது. இந்த நூலகம் கிராமம் முழுவதும் பயணிக்கச் செய்து மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தது.
புன்சாரி கிராமத்தின் முக்கிய வருமானம் விவசாயமும் பால் உற்பத்தியும்தான். அதனால் விவசாய வளர்ச்சியிலும், விவசாயிகளுக்கான உதவிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. விவசாயிகளுக்கான உதவித் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், நல்ல விளைச்சலுக்கான வழிகாட்டல்கள், உரம் உள்ளிட்ட உதவிகள் அனைத்தும் சீராக, அனைவருக்கும் கிடைக்கும்படி திட்டமிடப்பட்டது. மற்றொரு துறையான பால் உற்பத்தியிலும் இதேப் போல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக பாலை பால் பண்ணைக்கு எடுத்துச் செல்ல Atal Express என்ற பேருந்து திட்டம் பஞ்சாயத்திடம் இருந்தது.
அதன் மூலம், பால் எடுத்துச் செல்பவர்கள், விவசாயிகள், கல்லூரி, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் வசூலிக்கப்பட்ட குறைவான கட்டணம் மூலம், ஓட்டுநர் நடத்துனருக்கான ஊதியம், பேருந்து பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பேருந்து வாங்குவதற்கான திட்ட அனுமதியின் போதுதான் பால்வளத்துறை அமைச்சர் அந்த கிராமத்துக்கு வந்திருந்தார். மேலே குறிப்பிட்ட அந்த வாட்ஸ் ஆப் செய்தி சம்பவம் நடந்தது.
2006-ம் ஆண்டு புன்சாரி கிராமம் முழுமையாக ரிலையன்ஸின் வைஃபையுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம், முழு கிராமத்தின் ஒவ்வொரு தரவும் முழுமையாக சேகரிக்கப்பட்டது. ஒவ்வொரு பயனருக்கும் சிசிடிவி பதிவுகளைக் காணும் அணுகல், மொபைல் நூலகம், புகார் பதிவுகள் போன்றவற்றை அணுக அனுமதிக்கும் தனித்துவமான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டது. இந்த வைஃபை இணைப்பு தன்னார்வலர்கள் மற்றும் பஞ்சாயத்தின் மின் பொறியாளர்களால் பராமரிக்கப்பட்டது. வரம்பற்ற பயன்பாடுக்காக பரிந்துரைப்பவர்களிடம் மாதத்திற்கு ரூ.50 என்ற மானிய விலையில் கிராம மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கிராம நிர்வாகத்தை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
புன்சாரி கிராமம் முழுவதும், சாலையோரங்களில் கழிவு நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசின் தூய்மை இயக்கத்தை கிராமம் ஏற்றுக்கொண்டதால் அதற்காக வழங்கப்பட்ட நிதியின் மூலம் கிராமத்தின் சுகாதாரம் பாதுகாப்பட்டது. குடிசை வீடுகளை கான்கிரட் வீடாகவும், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கழிப்பறை திட்டத்துடனும் மத்திய அரசின் நிதி உதவியுடன் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வீட்டிற்கும் குப்பைத் தொட்டிகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. 2009-ல் வாங்கப்பட்ட ஒரு டிராக்டர், தள்ளுவண்டி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கழிவுகளை சேகரிக்கும்.
அதற்காக ஆண்டுக்கு ரூ.30-ம், மாத கட்டணமாக ரூ2 வசூலிக்கப்படும். அந்தக் கட்டணங்களை ஓட்டுநர், 5 துப்புரவு பணியாளர்கள், டிராக்டர் எரிபொருள் மற்றும் பராமரிப்புக்கான செலவினங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும், திடக்கழிவு மேலாண்மைக்கு தனி குப்பை கிடங்கு உள்ளது. சிசிடிவி கேமரா மூலம் கிராமத்தின் தூய்மை பணிகள் கண்காணிக்கப்படும். வீட்டுக் கழிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மின்சார உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு மாநில அரசு ரூ.85 லட்சம் வழங்கியது. இதைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை மாநில அரசுக்கு விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக அருகிலுள்ள கிராமங்களிலிருந்து கழிவுகளை சேகரிக்க சூரிய சக்தியால் இயங்கும் டிராக்டர் வாங்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
பெண்களுக்கான சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டு அவர்களை தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம், கைவினைத் தொழில்கள், தையல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள், படித்து முடித்த இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இது தவிர தெருவெங்கும் சோலார் லைட்கள், மாதம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கப்பட்ட கிராம செய்தித்தாள், மழைநீர் சேமிப்புத் திட்டம், மரம் வளர்ப்புத் திட்டம் என மத்திய – மாநில அரசுகளின் திட்டங்களை மிகச் சரியாகப் பயன்படுத்தி இத்தனை திட்டங்களையும் செயல்படுத்தினார் ஹேமன்ஸூ பட்டேல்.
இத்தனை திட்டங்களையும் செயல்படுத்தியதில் எந்த என்.ஜி.ஓ உதவியோ, மக்களிடம் வசூலிக்கப்பட்ட நன்கொடையோ அல்ல. இது முழுக்க முழுக்க அரசுகளின் திட்டங்களை சரியாக கவனித்துப் பெற்று செயல்படுத்தியதால் விளைந்தவை என நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். சாதாரண பஞ்சாயத்துத் தலைவரால் என்ன செய்துவிட முடியும் என்றக் கேள்விக்கு 10 ஆண்டுகள் பதவியில் இருந்து சாதித்துக் காண்பித்து இந்தியாவின் முதல் ஸ்மார்ட் வில்லேஜ் என்றப் பெருமையையும் அந்த கிராமத்துக்கு தேடித் தந்திருக்கிறார் ஹேமன்ஸூ பட்டேல்.
சரியாக திட்டங்களை செயல்படுத்தும் பஞ்சாயத்துத் தலைவராலேயே இவ்வளவு நலத் திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்த முடிகிறது என்றால், ஒரு ஊராட்சி மன்ற, நகராட்சி மன்றத் தலைவர்கள் தொடங்கி இந்தியாவின் பிரதமர் வரை எத்தனைத் திட்டங்களை மக்களின் நலனுக்காக கொண்டு சேர்க்க முடியும் என்பதை நேயர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம். ஆனால், அந்த அதிகாரம் தவறான கைகளுக்குச் சென்றால், அல்லது திட்டங்கள் கண்காணிக்கப்படாமல் விடப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கும் புன்சாரி கிராமமே முன்னுதாரணமாக நிற்கிறது.
ஹேமன்ஸூ பட்டேல் 2016-ம் ஆண்டு பதவி காலம் முடிந்து விலகி, பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டார். அவருக்கு ஜல்சக்தித் துறையின் ஆலோசனைக் குழுவில் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, ஹேமன்ஸூ பட்டேலுக்குப் பிறகு புன்சாரி கிராமத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ள புன்சாரி கிராமத்தின் நிர்வாக செக்ரட்ரி ஹிடெஷ் தாலாடி மஹேஷ்கலை தொடர்பு கொண்டோம். ஆங்கிலம் புரியவில்லை எனத் தெரிவித்தவரிடம் இந்தியில் சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்.
அதற்குப் பதிலளித்த அவர், “ஹேமன்ஸூ பட்டேல் பதவி விலகியப் பிறகும் அவரால் தொடரப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், காலப்போக்கில் அவரின் திட்டங்களில் பாதி திட்டங்கள் காணாமல் போய்விட்டது. இப்போது RO குடிநீர் ஆலை, பள்ளியில் தொடரும் கற்பிக்கும் முறை, சுகாதாரம், மின்சார உற்பத்தித் திட்டம் போன்ற சில திட்டங்கள்தான் செயல்படுத்தப்படுகிறது. சிலப் பள்ளிகளில் பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்திருக்கிறது. பால் பண்ணையுடன் மக்களை இணைக்கும் மினி பஸ், வைஃபை போன்ற திட்டங்கள் தேய்வடைந்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து, குழு தலைவர் இல்லாததால் செயல்படவில்லை. எனக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை என்னால் முடிந்தளவு செயலாற்றி வருகிறேன். இதற்கு மேல் அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.
சாதாரண பஞ்சாயத்து தலைவர் பதவி தானே… என குறைவாக மதிப்பிடப்படும் இந்தப் பதவியின் மூலம் உள்ளூரை மட்டுமல்ல உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஹேமன்ஸூ பட்டேல். நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய அதிபராக வேண்டுமென்பதோ, பிரதமராக வேண்டும் என்பதோ அல்ல. கிடைத்தப் பதவியில் அனைத்தையும் சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு முழு முதற் உதாரணமாக மாறி நிற்கிறது புன்சாரி கிராமம்.
பஞ்சாயத்து தலைவராலேயே இவ்வளவு நல்லது செய்ய முடியும் என்றால், ஊராட்சி மன்றத் தலைவரால், நகராட்சி மன்றத் தலைவரால், ஒரு முதல்வரால், பிரதமரால் எவ்வளவு செய்துவிட முடியும் என்பதும் இங்கு தெளிவாக புரிகிறது. அதேப் போல, தகுதியற்ற தலைவரிடம் புன்சாரி மாதிரியான கிராமத்தை ஒப்படைப்பதோ, அல்லது அந்தக் கிராமத்தையே கண்டுகொள்ளாமல் இருப்பதோ எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்பதற்கும் புன்சாரி கிராமமே சான்று.

எனவே, உங்களை ஆட்சி செய்யும் அதிகாரத்தை, உங்கள் பகுதி முன்னேற்றத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை தேர்வு செய்வது உங்கள் அதி முக்கிய கடமை என்பதை மட்டும் விரலில் மை வைப்பதற்கு முன்பே தீர்க்கமாக முடிவு செய்யுங்கள்.!