விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. இந்த முடக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்திருந்தது. அதில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் மு.குணசேகரன், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மிக முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.
பத்திரிகையாளர் மு.குணசேகரன் பேசியதாவது, “ஐடி சட்டம் 69(A) -ன் படி பார்த்தால் ஒரு இணைய தளத்தை முடக்குவதற்கு முன் தெளிவான ஆணையை பிறப்பித்த பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் இயற்கை நீதிக்கு மாறாக விகடன் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவினுடைய தேசத்தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக கார்ட்டூன் போடப்பட்டிருக்கிறது. மேலும் மிகப்பெரிய தலைவர்களான காமராஜர், அண்ணா ஆகியோருக்கு எதிராகவும் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது. இப்படி கேலிச்சித்திரங்களுக்கு இரையாகாத இந்திய பிரதமர்களே இல்லை.
மன்மோகன் சிங் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரைக்கும் பிரதமருடைய செயல்பாடுகளை கேலிச்சித்திரங்கள் மூலம் கண்டிப்பதென்பது இந்திய ஊடகங்கள் பின்பற்றி வரக்கூடிய ஒரு முக்கியமான வழக்கம். அதைச் சட்டமும் அனுமதிக்கிறது. பிரதமரை விமர்சிப்பது இந்திய நாட்டை விமர்சிப்பதாகாது. அமெரிக்காவிலேயே மற்ற நாட்டு மக்கள் வெளியேற்றப்படும் நடவடிக்கையைக் கண்டிக்கிறார்கள். இந்தியர்களையோ எந்த ஒரு நபரையோ சட்டவிரோத குடியேறிகள் என்று சொல்வதே தவறு என்று அந்த நாட்டு பத்திரிகைகளே குரல் கொடுக்கின்றன. அந்த நாட்டு அதிபரைக் கண்டித்து அங்கே இருக்கக்கூடிய ஊடகங்கள் எழுதுகின்றன.

ட்ரம்ப் குறித்து வெளியான கேலிச்சித்திரங்கள் போன்று வேறு யாருக்குமே வெளியாகியிருக்காது. இங்கேதான் இப்படி கேலிச்சித்திரத்துக்கு ஒடுக்குமுறையை ஆயுதமாக கையிலெடுக்கிறார்கள். இந்த கார்ட்டூனை வரைந்த ஹாசிப் கான் பாராட்டப்பட வேண்டியவர். அவர் தமிழ்நாட்டினுடைய ஆகச்சிறந்த கார்ட்டூனிஸ்ட்களில் ஒருவர். அவர் பெயரை வைத்து அவர் இன்று குறிவைக்கப்படக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கிறோம். விகடன் நிறுவனம் அவரை பாதுகாக்க வேண்டும். விகடன் இதில் உறுதியாக நின்று சமரசத்திற்கு இடமில்லாமல் மன்னிப்பு கேட்காமல் இந்த சட்ட போராட்டத்தை நடத்த முன் வந்ததற்காக விகடன் நிறுவனத்தின் துணிச்சலை பாராட்டவேண்டும். அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.” என்றார்.