விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு விருந்தினராகத் தேர்தல் வியூக வகுப்பாளரும் பீகார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.
இவ்வாறிருக்க, இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவரை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம், “தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி.
. @TVKVijayHQ இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி. பத்திரிகையாளர்களை தாக்கியவர்களை பாதுகாக்கும் தவெக நிர்வாகிகளை வன்மையாக கண்டிக்கிறோம் pic.twitter.com/7MXH92n0ej
— Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் (@MadrasJournos) February 26, 2025
பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களைப் பாதுகாக்கும் த.வெ.க நிர்வாகிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க மன்றம் உறுதுணையாக இருக்கும்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.