சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையிலான கொதிப்பான உரையாடல் ஒரு சங்கடமான அரசியல் நிகழ்வு மட்டுமல்ல, உலக அரசியலின் மிக முக்கிய திருப்புமுனை. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தவிருக்கிறது, முக்கியமாக இந்தியாவில்!
சர்வதேச அளவில் மாறிவரும் புவிசார் அரசியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பெரும் வரலாறு தொடங்குவதற்கு முதல் புள்ளியாக அமைந்த இந்த நிகழ்விலிருந்து இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டிய 5 முக்கிய பாடங்கள் இதோ…
பலவீனமாகும் மேற்கு கூட்டணி
பல தசாப்தங்களாக உலக அரசியல் நிலையுடன் இருப்பதில் ஐரோப்பிய நாடுகளுடனான அமெரிக்காவின் கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. ட்ரம்ப் அரசின் கொள்கைகள் இந்த பிணைப்புக்குச் சவாலாக உள்ளன.
ஐரோப்பாவின் பொருளாதார கொள்கைகளை ட்ரம்ப் அரசு வெளிப்படையாக விமர்சித்துள்ளது. உலக வெப்பமயமாக்கல் முதல் எல்.ஜி.பி.டி.க்யூ வரை பல விஷயங்களில் முரண்கள் எழுந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான அரசியலில் அமெரிக்கா தலையிடத் தொடங்கியுள்ளது.
இதில் மிகவும் நம்மை எச்சரிக்கும் நிகழ்வு என்னவென்றால் ஐரோப்பிய நாடுகளில் தலையீடு இல்லாமலேயே அமெரிக்கா உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டதுதான்.
ஐரோப்பாவைத் தள்ளிவைக்கும் இந்த செயல், ஐரோப்பிய நாடுகளை முதுகில் குத்தப்பட்டதாக, பலவீனமாக்கப்பட்டதாக உணர வைப்பதுடன், எதிர்காலத்தில் ‘நாட்டோ’ நாடுகளின் கூட்டணி பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது.
விழித்தெழும் ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு நீண்டகாலம் நிலைக்காது என்பதை ஐரோப்பியத் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். இதனால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாகத் தனிப்பட்ட கொள்கைகளை வகுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
ஐரோப்பியத் தலைவர்கள் அதிக அளவு இந்தியாவுக்கு வருகை தருவது அவர்களின் முன்னுரிமை மாறுவதற்கான சிறிய வெளிப்பாடு.
மனித உரிமைகள் மற்றும் மக்களாட்சி குறித்து பாடம் எடுப்பதைத் தாண்டி, வணிகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளில் இந்தியா உடனான பிணைப்பை ஆழப்படுத்திக்கொள்வதில் ஐரோப்பிய நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

உக்ரைன் விஷயத்தில் இந்தியாவின் சரியான முடிவு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது முதல், இந்தியா இரண்டு நாடுகளுக்கும் நடுநிலையாக இருந்ததுடன், ராஜா தந்திர பேச்சுவார்த்தை மூலம் முடிவெடுக்க வலியுறுத்தியது.
இப்போது இந்த போர் ராணுவ வெற்றியின் மூலம் அல்லாமல் பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கும்போது, இந்தியாவின் நிலைப்பாடு சரியானது என நிறுவப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்தியா மேற்கு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவைக் கண்டித்திருந்தால் முக்கியமான நட்பு சக்தியை இழக்க நேரிட்டிருக்கும். அத்துடன் அதிக இழப்பும் குறைந்த பலன்களுமே கிடைத்திருக்கும்.
ட்ரம்ப்பின் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கை!
கூட்டணி நாடுகளைக் கூட ஓரங்கட்டி, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள அமெரிக்கா (Trump) காட்டும் ஆர்வம், சீனாவை அவர் எப்படி அணுகுவார் என்பது குறித்து கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவால் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் வலுவான உறவை இந்தியா ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையில் உள்ளது.
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போருக்கான அறைகூவல் இருந்தாலும், புதிய அதிபர் அமெரிக்கர்களுக்கான லாபகரமான முடிவுகளை நோக்கியே காய்களை நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா இன்றைய பரிவர்த்தனை ஜாம்பவான்!
ட்ரம்ப் தலைமையிலான அரசானது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதார, மூலோபாய சலுகைகளை வழங்குவதை விடப் பரிவர்த்தனை சலுகைகளைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டுகிறது.
அதன் கூட்டணி நாடுகள் மேல் பொருளாதார அழுத்தம் செலுத்தி, மிரட்டி உக்ரைன் பிரச்னையைக் கையாள்வதன் மூலம் பணத்திற்காக விளையாடும் போட்டியாளராகப் பரிணமிக்கிறது.
இதுவரை அமெரிக்காவின் கோரிக்கைகளை இந்தியா சிறப்பாக நிறைவேற்றியிருந்தாலும், இதன் அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க இன்னும் சவாலானதாக மாறும்.
உலகளாவிய சக்திகள் மாறும்போது, பாரம்பரியமான கூட்டாளிகள் எப்போதும் கூட்டாளிகளாக இருப்பார்கள் என நம்ப முடியாத உலகுக்கு இந்தியா தயாராக வேண்டும்.
சுருக்கமாக இந்தியாவின் எதிர்காலத்துக்குத் துரிதமான ராஜ தந்திர மாற்றங்களும், போர் திறம் வாய்ந்த சுதந்திரமும் அவசியம் என்பதையே ட்ரம்ப் – ஜெலென்ஸ்கி இடையிலான பேச்சுவார்த்தை காட்டுகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
