தெலுங்கானா அரசு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.இ, ஐ.சி மற்றும் அனைத்து போர்டு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தெலுங்கு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவித்திருக்கிறது.
புதிய கல்விக் கொள்கை 2020, தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் பிராந்திய மொழியைக் கற்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதன் அடிப்படையில் இந்த திட்டத்தைக் கொண்டுவந்துள்ளனர்.
இதுகுறித்து பிப்ரவரி 25ம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டாக்டர் யோகிதா ராணா வெளியிட்ட அரசு அறிவிப்பில், 2025-26ம் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் தெலுங்கு பாடத்திட்டம் மாறும் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக 9ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் சிங்கிடிக்கு (பழைமையான தெலுங்கு) பதிலாக ‘வென்னெலா’ (எளிமையான தெலுங்கு) கற்றுக்கொடுக்கப்படும் என்றும் 2026-27 கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கும் பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும் கூறியுள்ளனர்.
சிங்கிடி என்பது பாடங்களில் கற்றுக்கொடுக்கப்படும் தூய தெலுங்கு. வென்னெலா என்பது குழந்தைகள், மாணவர்களுக்கு எளிதாக மொழியை கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை 2020ன் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு குரலெழுப்பியிருக்கும் நிலையில், தெலங்கானாவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மும்மொழிக் கொள்கையின் படி மாணவர்கள் பிராந்திய மொழி, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக மற்றொரு மொழியை கற்றுகொள்ள வேண்டும்.