1
February, 2026

A News 365Times Venture

1
Sunday
February, 2026

A News 365Times Venture

RTI: `மக்களாட்சி Vs மர்ம ஆட்சி' – திறக்கப்படாத கதவுகளும், மறைக்கப்படும் உண்மைகளும்!

Date:

மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசுகள் முறையாகச் செயல்படுகின்றனவா என்பதை அறிந்துகொள்வது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை. அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவது இந்த ஆர்.டி.ஐ சட்டம்தான். இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் நாட்டில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்பாக மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், மக்களால் கேட்கப்படும் ஆவணங்களை வழங்கவும் வழிவகை செய்கிறது இந்த ஆர்.டி.ஐ சட்டம்.

மன்மோகன் சிங்

ஆர்.டி.ஐ சட்டப்பிரிவு 8(1)(j)-ன்படி, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை சார்ந்த ரகசியத் தகவல்கள், நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட தகவல்கள், நாடாளுமன்ற, சட்டமன்றச் சிறப்புரிமையை மீறக்கூடிய தகவல்கள், வர்த்தக ரகசியங்கள் உள்ளிட்ட தகவல்களை மக்கள் ஆர்.டி.ஐ சட்டத்தின் மூலம் பெற முடியாது.

அதேபோல பொதுநலனுக்குத் தொடர்பில்லாத, தனிநபரின் தனியுரிமையை மீறக்கூடிய தகவல்களையும் ஆர்.டி.ஐ மூலம் பெற முடியாது. ஆனால், சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ கொடுக்க மறுக்க முடியாத தகவல்களை மக்களுக்கும் மறுக்கக் கூடாது என்கிறது இந்தச் சட்டப்பிரிவு.

இதற்கிடையில், தனியுரிமையைக் காப்பது, அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21-ன் கீழ் அடிப்படை உரிமை என்று 2017-ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது. அதன் அடிப்படையில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம் DPDP சட்டம் பிரிவு 44 (3) உருவாக்கப்பட்டு, 2023 ஆகஸ்ட் 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் இது மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு அடுத்த ஒரே வாரத்தில் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டு சட்டமாக்கப்பட்டது.

சமூக செயற்பாட்டாளர்களும், சமூக அமைப்புகளும் DPDP சட்டம் பிரிவு 44 (3) திருத்தத்தைத் திரும்பப்பெறுமாறும் / முழுமையாக நீக்குமாறும் மத்திய அரசை வலியுறுத்தினர். அரசியல் களத்தில் காங்கிரஸ் எதிர்ப்புக் குரல் எழுப்பியது. ஆனால், எதையும் காதில் வாங்காத மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அந்தச் சட்டத்தை அமல்படுத்தியது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் அரசு நாட்டுக்கு என்ன செய்தது என்பதை விளக்கும் விதமாக, பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு நாட்டின் நிலை என்ன என்பதை மக்களுக்கு விளக்கும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை மூலம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு தயாரித்தது. அந்த ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த ஆய்வறிக்கையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. அதற்குக் காரணங்களாகச் சிலவற்றைத் தெரிவித்திருக்கிறது. அதில், ”அரசின் உள்விவாதங்கள் உடனுக்குடன் வெளியாவதால், அதிகாரிகள் தயக்கமின்றி முடிவெடுக்க அஞ்சுகின்றனர். அதனால் நிர்வாகத் திறன் பாதிக்கிறது.

தனிப்பட்டப் பழிவாங்கல் மற்றும் அதிகாரிகளைத் துன்புறுத்த இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆர்.டி.ஐ விண்ணப்பங்கள் அதிகம் வருவதால் நிர்வாகப் பணிச்சுமையும் அதிகரிக்கிறது. எனவே, பொதுநலனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதும் தகவல் வெளியே செல்லாமல் இருக்க அமைச்சருக்கு வீட்டோ பவர் கொடுப்பது போன்ற ஆர்.டி.ஐ சட்டத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைக்காமல், அதே சமயம் அரசின் செயல்பாடுகள் முடங்காமல் இருக்க சீர்திருத்தங்கள் தேவை” என அதில் குறிப்பிட்டுள்ளது.

ஆர்.டி.ஐ அவலங்கள்
ஆர்.டி.ஐ அவலங்கள்

ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட DPDP சட்டம் பிரிவு 44 (3)-க்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்கள் கொடி பிடித்திருக்கும்போது, ஆர்.டி.ஐ சட்டத்தின் அஸ்திவாரத்தையே அசைக்கும் விதமாக பொருளாதார ஆய்வறிக்கைக் குழு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் பேசினோம்.

அவர், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயல்வது இது முதல் முறையல்ல. ஆர்.டி.ஐ சட்டம் இயற்றப்பட்ட அடுத்த ஆண்டே (2006), அமைச்சரவை ஒரு திருத்தத்தைப் பரிந்துரைத்தது. அதில் கோப்புக் குறிப்புகளை (File Notings) பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என விரும்பியது. ஆனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, அப்போது அந்தத் திருத்தம் கைவிடப்பட்டது.

மறுபடியும் 2009-ல், “தனிநபர் விவரங்கள்” (Personal Information) மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கும்போது அதிகாரிகளுக்கு இடையே நடக்கும் விவாதங்கள் ஆகியவற்றை வெளியிடத் தேவையில்லை என்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயம்

அப்போது அரசு முன்வைத்த வாதங்கள் இப்போதுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ள வாதங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. இந்தத் திருத்தங்களுக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்தச் சட்டமே மன்மோகன் சிங் அரசின் ஒரு மைல்கல் சாதனையாகப் பார்க்கப்பட்டதால், அதை அவர்களே பலவீனப்படுத்துவது கட்சிக்கு அவப்பெயரைத் தரும் என்று கருதி, அந்தத் திருத்த மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் திரும்பப் பெற்றது. தற்போது மீண்டும் அதே போன்ற வாதங்களை அரசு முன்வைத்திருக்கிறது.

இந்தப் புதிய ஆலோசனை, அதிகாரிகளின் தயக்கத்தைப் போக்குவதற்காக அல்ல, மாறாகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் ஊழல் தொடர்பான உண்மைகளை மறைப்பதற்காக என்றே கூறமுடியும்.

சூரிய வெளிச்சம் இருளில் வாழும் விஷப்பூச்சிகளுக்கு ஆபத்து. அதுபோலத்தான் இந்த ஆர்.டி.ஐ, ஊழல் பெருச்சாலிகளுக்கு ஆபத்து. அதனால்தான் இதை முடக்கத் தொடர்ந்து திட்டமிடப்படுகிறது. மக்களால் மக்களுக்காகத் தேர்வு செய்யப்பட்ட அரசு, மக்களிடம் மறைக்க என்ன இருக்கிறது? அப்படி மறைக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

பொருளாதார ஆய்வறிக்கை குழு
பொருளாதார ஆய்வறிக்கை குழு

ஒரு திட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், அந்தத் திட்டத்தை முன்மொழித்தவர், அதைச் செயல்படுத்தியவர், அப்போது நடந்த விவாதங்கள் போன்றவற்றை மக்களிடம் சொல்வதில் என்ன சிக்கல்? இதை மறைக்க வேண்டும் எனத் திட்டமிடுவதை என்னவென்று சொல்வது?

இன்னும் விரிவாக, தெளிவாகச் சொல்வதென்றால், பொருளாதார ஆய்வறிக்கை குழுவுக்கு அரசு நிர்வாகம் தொடர்பாக ஆலோசனை சொல்ல என்ன இருக்கிறது? எனவே, இது ஆலோசனைக்குழுவுக்கு வெளியிலிருந்து சேர்க்கப்பட்ட ஒரு ஆலோசனை.

ஜனநாயக நாட்டில் தவறு நடந்தால் மக்கள் அமைச்சரைக் கேள்வி கேட்கலாம். ஆனால், அந்தத் தவறுக்குக் காரணமான அதிகாரிகளின் ஆலோசனைகள் ரகசியமாக வைக்கப்பட்டால், உண்மையான குற்றவாளி யார் என்பது தெரியாமலேயே போய்விடும்.

மேலும், அமைச்சருக்கு ‘narrowly defined’ வீட்டோ கொடுக்கலாம் எனப் பரிந்துரைக்கிறது. அவர் தன் ஊழலை மறைக்க அதைப் பயன்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? நாடாளுமன்றக் கண்காணிப்பு இருந்தாலும், ஆளும் கட்சி பெரும்பான்மையாக இருக்கும்போது அது வெறும் காகிதமாகிவிடும். எனவே, இந்த வீட்டோ பவர் ஊழலுக்குப் பாதுகாப்பு வழங்குவதாக மாறும்” என்றார்.

அறப்போர் இயக்கம் ஜெயராமன்
அறப்போர் இயக்கம் ஜெயரான்

அதைத் தொடர்ந்து ஆர்.டி.ஐ மூலம் பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த அறப்போர் இயக்கம் ஜெயராமனிடம் பேசினோம்.

அவர், “அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவரும்போது, அதை ஏன் கொண்டு வந்தார்கள்? எந்தக் கருத்தின் அடிப்படையில் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார்கள் என்பதை அறிந்துகொள்வது மக்களின் உரிமை. அப்போதுதான் ஒரு திட்டம் யாருக்காகப் போடப்பட்டது என்பது தெரியும்.

அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை ஆர்.டி.ஐ மூலம் அறிய முடியாவிட்டால், பரந்தூர் விமான நிலையம் போல, முடிவு எடுக்கப்பட்ட பிறகு தெரியவரும்போது மக்கள் போராட்டம் தவிர்க்க முடியாததாகிறது.

வரைவுக் குறிப்புகள், உள் விவாதங்கள் மறைக்கப்பட்டால், தவறுகளை முன்கூட்டியே தடுக்க முடியாமல் போய்விடும். இதற்கு ஆர்.டி.ஐ ஒரு விலைமதிப்பற்ற கருவி. சாதாரணமாக அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும். அரசுக்குத் தெரிந்த பல விஷயங்கள் மக்களுக்குத் தெரியாது.

ஆர்.டி.ஐ இந்த இடைவெளியைக் குறைத்து, மக்களையும் அரசுக்குச் சமமாக மாற்றுகிறது. எங்கே மக்கள் கேள்வி கேட்டுவிடுவார்களோ என்ற பயம் அதிகாரிகளுக்கு இருக்கும்வரை ஓரளவு வேலைகள் நடக்கும். அந்தக் கேள்விக்கு அங்கீகாரம் கொடுப்பதுதான் ஆர்.டி.ஐ.

மகா கும்பமேளா
மகா கும்பமேளா

இதுமட்டுமல்ல பெரிய பெரிய ஊழல்கள் இந்தச் சட்டத்தால்தான் வெளிச்சத்திற்கு வந்தன. இது வெறும் தகவல் தரும் கருவி மட்டுமல்ல, நிர்வாகத்தில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்யும் கருவியும் கூட. சமீபகாலமாக இந்தச் சட்டத்தின் கூர்மை மழுங்கடிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் இறந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? வினாத்தாள் கசிந்தது எப்படி? விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை என்ன? கும்பமேளாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை போன்ற கேள்விகளுக்கு, “எங்களிடம் கணக்கு இல்லை” என்று கூறி மத்திய அரசு தப்பிக்கப் பார்க்கிறது.

மேலும், அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது போன்ற முடிவுகள் எடுக்கப்படும்போது, அதிகாரிகளுக்கிடையே நடந்த விவாதங்கள் மற்றும் “கோப்புக் குறிப்புகள்” மிக முக்கியமானவை.

இந்த விவாதங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டால், எந்த ஒப்பந்தம் யாருக்காக, எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற உண்மையை மக்கள் அறியவே முடியாமல் போய்விடும். இது “குரோனி கேபிடலிசம்” எனப்படும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் உதவும் போக்கை மறைக்க வழிவகுக்கும்.

அம்பானி அதானி!
அம்பானி அதானி!

ஊழல் வழக்குகள் எல்லாமே வெறும் விசாரணையால் மட்டும் வெளியாகவில்லை. அந்த முடிவை எடுக்கும்போது அதிகாரிகள் எழுதிய “எதிர்க்கருத்துக்கள்” அல்லது “வரைவுக்குறிப்புகள்” மூலமாகவே உண்மை வெளிச்சத்திற்கு வந்தன. இப்போது பொருளாதார ஆய்வுக்குழு பரிந்துரைக்கும் “வரைவுக் குறிப்புகளுக்கான பாதுகாப்பு” என்பது, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க அதிகாரவர்க்கத்திற்கும் அரசியல் தலைமைக்கும் வழங்கப்படும் ஒரு கேடயம்.

எனவே, ஆர்.டி.ஐ சட்டத்தையும் பலவீனப்படுத்துவது அரசின் மீதான வெளிப்படைத்தன்மையை முழுமையாகச் சிதைத்துவிடும்.

ஆர்.டி.ஐ சட்டத்தின் 4(2) பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா? “ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும், பொதுமக்கள் தகவல்களைப் பெறுவதற்கு ஆர்.டி.ஐ பயன்படுத்துவதைக் குறைக்கும் வகையில், தாமாகவே முன்வந்து தகவல்களை இணையதளங்கள் வாயிலாக வெளியிட வேண்டும்.

அதாவது, நாம் கேட்பதற்கு முன்பே அரசு தகவல்களைப் பொதுவெளியில் போட்டுவிட வேண்டும் என்பதுதான் சட்டத்தின் அடிப்படை நோக்கம். அரசு தன்னுடைய எல்லா முடிவுகளையும், அதற்கான காரணங்களையும் இணையதளத்தில் ஏற்றிவிட்டால், ஆர்.டி.ஐ விண்ணப்பங்களால் நிர்வாகம் முடங்காது.

அப்போது நிர்வாகச் சுமை தானாகவே குறைந்துவிடுமே. எல்லாம் வெளிப்படையாக இருந்தால், மக்கள் ஏன் விண்ணப்பம் போட்டு, பணம் செலுத்தி, 30 நாட்கள் காத்திருக்கப் போகிறார்கள்?

RTI
RTI

நல்ல அதிகாரி திடீரென இடமாற்றம் ஆனால், அதற்கு ஊழல் அல்லது அரசியல் அழுத்தமா என்பதை மக்கள் அறிய வேண்டாமா? சேவைப் பதிவுகள், இடமாற்ற காரணங்கள் ‘நிர்வாகக் காரணம்’ என்ற பெயரில் மறைக்கப்பட்டால், ஊழல் செய்பவர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. எனவே, ஆர்.டி.ஐ இல்லாமல் பொறுப்புக்கூறல் எப்படி சாத்தியமாகும்?.

நிர்வாகம் வேகமாகவும் திறமையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக ரகசியம் தேவை என்று அரசு கூறுகிறது. ஆனால், உண்மையான ஜனநாயகத்தில் ‘நிர்வாகத் திறன்’ என்பது ‘பொறுப்புக்கூறலுடன்’ பிணைக்கப்பட்டது.

எங்கே கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறதோ, அங்கே நிர்வாகம் ‘திறமையானதாக’ மாறாது, மாறாக ‘சர்வாதிகாரத் தன்மை’ கொண்டதாக மாறிவிடும். ஜனநாயகத்தைப் புரிந்துகொண்டவர்கள், வெளிப்படைத்தன்மை என்பது ஒரு இடையூறு அல்ல, அது ஒரு பாதுகாப்பு வளையம்” என்றார் அழுத்தமாக.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Budget 2026: “இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார்....

"மேடையில் அமர வேண்டாம்" – தொண்டாமுத்தூரில் கண் சிவந்த செந்தில் பாலாஜி; கலக்கத்தில் உடன்பிறப்புகள்

திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில்...

Budget 2026: இனி 'இதற்கு' வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன?

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறித்து வெளியாகி உள்ள...

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் – தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு...