நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக… மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இடையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20-ம் தேதி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
இதை தடுக்க பேரணி நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் தடியடி நடத்தினர், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசினர் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.
இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது?
இதையடுத்து, ‘இந்த நடவடிக்கை ஏன்?’ என்று எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஆளும் பாஜக தரப்போ, “மாணவர்கள் மீது தடியடி நடத்த உள்துறை அமைச்சர் சொல்லவில்லை. அப்படி உத்தரவிடுவதற்கான அதிகாரம் அவரிடம் இல்லை.
இந்த முடிவு டெல்லி போலீசாரிடமே உள்ளது” என்று வாதாடுகிறது.
இதற்கு எதிர்க்கட்சிகள், “அமித் ஷாவிற்கு தெரிந்து இந்த வன்முறை நடந்திருந்தால் அது தவறு. அவருக்கு தெரியவில்லை என்றால், அது நிர்வாகக்கேடு. இப்படி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒருவர் உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை.
எது எப்படி இருந்தாலும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று பதிலடி தருகின்றன.
ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்கிற கேள்வியைக் கேட்டு தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.
பாஜகவின் கண்டிஷன்
வருகிற 13-ம் தேதியோடு முடிவடையும் கூட்டத்தொடரில் இதுவரை 16 அமர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், ஜூன் 20-ம் தேதியை தவிர்த்து, ஒரு நாள் கூட அமித் ஷா அவைக்கு வரவில்லை.
எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வே அமித் ஷாவின் ஆப்சென்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று, “மாணவர்கள் போராட்டம் குறித்து முழுமையாக விவாதிக்க அரசு தயார். ஆனால், உள்துறை அமைச்சரின் விளக்கத்தின் போது, எதிர்க்கட்சிகள் அமளியோ, அவை நடவடிக்கையை தடுப்பதுபோலவோ எதுவும் செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




