கர்நாடக அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் அறிக்கையில், கர்நாடக அரசியல் நிலப்பரப்பையே அசைக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கையில், “2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் கீழ் மொத்தம் 5.98 கோடி குடிமக்கள் இணைக்கப்பட்டனர். அவர்களில், 4.16 கோடி, அல்லது 70 சதவீதம் பேர், பல்வேறு OBC பிரிவுகளின் கீழ் வருகின்றனர்.
OBC பிரிவு-2B-ன் கீழ் முஸ்லிம்களும் வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த இடத்தில்,1.52 கோடி அதாவது 25 சதவிகிதம் SC/ST பிரிவைச் சேர்ந்தவர்கள். மொத்த மக்கள் தொகையில், SC/ST, OBC பிரிவினர் மட்டும் 94 சதவீதம் பேர் உள்ளனர். ஆனால், 70 சதவிகிதம் இருக்கும் OBC பிரிவினருக்கு தற்போது 32 சதவிகித இடஒதுக்கீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, மீதமிருக்கும் 38 சதவிகித இடஒதுக்கீட்டில் பாதி (19 சதவிகிதம்) தற்போதுள்ள இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும். மீதிபாதி (19 சதவிகிதம்) பொதுப் பிரிவின் கீழ் தக்கவைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது ஓபிசி இடஒதுக்கீட்டை 32 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக அதிகரிக்கும். இது எல்லா வகையிலும் பொருத்தமானது.

அதைத் தொடர்ந்து SC-க்களுக்கு 17 சதவீதமும், ST-களுக்கு 7 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்த முடியும்.” என பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
முதல்வர் சித்தராமையா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.
இது தொடர்பாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் லாட், “ஏற்கெனவே 10 சதவீத EWS ஒதுக்கீட்டின் மூலம், மத்திய அரசு 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீறியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது. இந்த சாதி கணக்கெடுப்பு அறிக்கையின் மூலம், நமது மாநிலத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்கலாம்.” என வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத், “ இடஒதுக்கீடு தகுதியை பாதிக்கிறது என்ற வாதமும் முன்வைக்கப்படும். அது உண்மையக இருந்திருந்தால், 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய தமிழ்நாடு மனிதவள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக இருந்திருக்காது.
ஆனால், குறைந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவதாக கூறப்படும் ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற உள்ள மாநிலங்கள் நோய்வாய்ப்பட்ட மாநிலங்களாகதான் இருக்கிறது.” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
