இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் ஆகிய இருவரில் ஞானேஷ் குமார் (61) புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய கமிட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையை மோடி அரசு மாற்றியது.
இதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், மாற்றப்பட்ட நடைமுறையின்படி தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுக்கப் பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய கமிட்டி நேற்று கூடியது.

இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் மறுப்பு தெரிவித்த நிலையில், 1 : 2 என்ற அடிப்படையில் ஞானேஷ் குமார் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. நாளை ஞானேஷ் குமார் பதவியேற்பார்.
யார் இந்த ஞானேஷ் குமார்?
1964-ல் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவரான ஞானேஷ் குமார், கான்பூர் ஐ.ஐ.டி-யில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும், இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் இன்ஸ்டிடியூஷனில் (ICFAI) Business Finance படித்திருக்கும் இவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரமும் (Environmental Economics) படித்துள்ளார். பின்னர், 1988-ம் ஆண்டு பேட்ச் கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கிய ஞானேஷ் குமார், 2007 முதல் 2012 வரை யு.பி.ஏ அரசாங்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சியில் 2019-ல் ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை உருவாக்குவதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக முக்கிய பங்காற்றினார்.
அமித் ஷாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ஞானேஷ் குமார், அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் ஓய்வுபெற்று, அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அடுத்த 11 மாதங்களில் தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவரின் பதவிக்காலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்கள்!
2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்.
2026 தமிழ்நாடு, மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தல்.
2027 குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்.
2029 மக்களைவைத் தேர்தல் முன்னேற்பாடுகள்.
2029 ஜனவரி 26 வரை இவர் பதவியில் இருப்பார் என்பதால், மொத்தம் 20 சட்டமன்றத் தேர்தல்கள் இவரின் தலைமையில் நடைபெறக்கூடும்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play