ஜெர்மனி நாட்டில் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவந்தது. ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் பெரும்பான்மையை இழந்து தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.
ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அமெரிக்கா அதிபர் தேர்தலில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் வேட்பாளராக களமிறங்கிய ட்ரம்பை ஆதரித்தது போல, இந்தத் தேர்தலில் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவளித்தார். அதற்கான எக்ஸ் தளத்தில் ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, வெறும் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 28.5 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக, பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். எலான் மஸ்க் ஆதரவளித்த வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி. 20 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 10 சதவிகிதம் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஜெர்மனியிலும் தன் பலத்தை மெல்ல நிறுவத் தொடங்கியிருக்கிறார் எலான் மஸ்க் என்கிறார்கள் சர்வதேக பார்வையாளர்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
