14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

Exclusive: ’நான் அரசியலுக்கு வருவேனா?’ – வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் பளிச் பதில்

Date:

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல் நலம் பாதிப்பினால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ஆதர்ஷ் (27) மற்றும் லண்டனில் சட்டப்படிப்பு மேல்படிப்பு படித்து வரும் கைலாஷ் (23) என மகன்கள் இருவரும், தங்களின் அம்மாவுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருவது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே வானதி சீனிவாசனின் மூத்த மகன் ஆதர்ஷ் நமக்கு அளித்த பிரத்யேக நேர்காணல்

வானதி சீனிவாசனின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது?

”அம்மாவின் உடல் நிலை நன்றாக தேறி வருகிறது. ஏற்கெனவே டைரியில் இனி யாரை எல்லாம் சந்திக்க வேண்டும்?, போகாத இடங்கள் என்னென்ன? எங்கெல்லாம் செல்ல வேண்டும்? என்பதை நோட் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். போனில் பகுதிச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்களிடம் பேசி வருகிறார். நாளை அல்லது நாளை மறுநாள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”

தேர்தல் பரப்புரை அனுபவம் எப்படி இருக்கிறது?

”இது புது அனுபவம் கிடையாது. அம்மா முதன் முதலில் 2011ல் மயிலாப்பூரில் தேர்தலில் நிற்பதற்கு முன்பாகவே கட்சி தெருமுனைக் கூட்டத்திற்கு செல்லும்போது, எங்களையும் அழைத்துச் செல்வார். அதனால் கட்சிக்காரர்களிடம் பேசிப் பழகி நல்ல அறிமுகம் இருக்கிறது. 2011 தேர்தலில் அவர் நிற்கும்போது எனக்கு 12 வயது, தம்பிக்கு 8 வயது. அந்த வயதில் நாங்கள் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து தாமரைக்கு ஓட்டுப் போடுங்கள் எனப் பேசிக்கொண்டே செல்வோம். 2016ல் அம்மா கோவைக்கு வந்தபோது, முழுக்க பின்னணியில் இருந்து வேலை செய்தோம். நாங்க அம்மாவிற்கு பில்லராகவும், ஸ்ட்ராங் சப்போர்ட்டாகவும் இருக்க விரும்புகிறோம். இப்போது தவிர்க்க முடியாத சூழலில், வேட்பாளர் இல்லை என்ற வெற்றிடம் உருவாகாமல் இருக்க, அப்பா, தம்பி, மாமா என குடும்பமாக அம்மாவிற்காக வேலை செய்கிறோம். வீட்டில் எந்தளவு சப்போர்ட் பண்ணுகிறோமோ, அந்தளவு அவர் மக்களுக்கு நிறைய வேலை செய்ய முடியும். அப்படித்தான் நாங்க வளர்ந்திருக்கிறோம்.அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்”

ஆதர்ஷ்

வாக்காளர்களிடம் வரவேற்பு எப்படி உள்ளது?

”மக்களைச் சந்திப்பது எப்போதும் நெகிழ்ச்சியான விஷயம்தான். எங்கு சென்றாலும் அம்மா எப்படி இருக்கிறார் என்று தான் முதலில் கேட்கிறார்கள். அந்தளவு அம்மா செல்வாக்கை சம்பாதித்து வைத்துள்ளார்கள். மக்களோட நட்பு, பிரார்த்தனை சம்பாதிப்பது இருப்பதிலேயே சிரமமான விஷயம். இதை சம்பாதித்து வைத்திருக்கிறார் என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். அம்மா ரெண்டு நாளில் வந்துவிடுவார்கள் என்பதையும், அம்மா செய்துள்ள திட்டங்களை எடுத்துச் சொல்லியும் தாமரைக்கு வாக்கு கேட்கிறோம். அவர்களும் எங்கள் ஓட்டு தாமரைக்கு என சொல்வதைக் கேட்பது எங்களுக்கு சந்தோசம் தருகிறது. இதேபோல அம்மா செய்த திட்டங்களை வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறோம். இதனை கூடுதல் பொறுப்பாக தான் பார்க்கிறோம், சுமையாக பார்க்கவில்லை”

வானதி சீனிவாசனுக்காக யார் எல்லாம் பரப்புரை செய்ய வர உள்ளார்கள்?

”அம்மா மருத்துவமனையில் இருந்து வந்தாலும் எல்லா வீட்டிற்கும் சென்று வாக்கு கேட்க முடியாது. அதனால் நாங்கள் சென்று பார்க்கிறோம். தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் மக்கள் சந்திப்பு, வாக்கு சேகரிப்பு, நட்சத்திர பேச்சாளர்களை அழைத்து வருவது எனத் திட்டமிட்டு தொடர்ந்து செய்து வருகிறோம். சரத்குமார், அண்ணாமலை, டெல்லி சி.எம். ரேகா குப்தா, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் பிரசாரத்திற்கு வர உள்ளார்கள். கேண்டிடேட் இல்லையென்றாலும் இத்தனை பேர் பிரசாரத்திற்கு வருவது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். அம்மா மருத்துவமனையில் இருந்து வந்ததும் வண்டியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்று மக்களை சந்திக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அம்மாவின் வெற்றி 100 சதவிகிதம் உறுதி. கடந்த முறையைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்

ஆதர்ஷ்
ஆதர்ஷ்

இளைஞரான நீங்கள் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்?

”நடிகர்கள் நடிகர்கள் தான். ஆனால் அரசியலில் விஜய் நடிப்பதாகச் சொல்லவில்லை. மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அவர் வந்துள்ளார். அவரது ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவது இயற்கை தான். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளுக்கு இருக்கும் கட்டமைப்பு பலம், கொள்கை இல்லையென்றால், கட்சியாக நிலைத்திருக்க முடியாது. த.வெ.க. தான் விஜய், விஜய் தான் த.வெ.க. அடுத்த கட்டத்தில் வேறு தலைவர்கள் யாரும் இல்லை. அக்கட்சியினருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. பெரும்பாலான இளைஞர்களிடம் த.வெ.க.விற்கு ஆதரவு உள்ளது. அவர்களிடம் நாங்கள் செய்தவற்றை சொல்லி புரிய வைத்து தாமரைக்கு வாக்களிக்க செய்து வருகிறோம்”

எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?

”ஐய்யோ. அப்படி எனக்கு என அரசியல் இருந்தது கிடையாது. வீட்டில் அம்மா அரசியலில் இருக்கிறாங்க. அனைவருக்கும் தெரியும், அப்பா தான் முதலில் அரசியலுக்கு சென்றார். அம்மா அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தனது அரசியலை விட்டுக் கொடுத்து, தொழிலை பார்த்துக் கொள்கிறேன் என வக்கீலாகத் தொடர்ந்தார். அம்மாவை அரசியலில் பார்த்து பார்த்து அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று தான் எங்களுக்கு உள்ளது. பின்னணியில் என்ன சப்போர்ட் பண்ணவும் தயார். நான் அரசியலுக்கு வருவேனா என்பது கேள்விக்குறி தான். மக்கள் பணி செய்வதற்கு குடும்பத்தில் ஒருவர் தான் வர வேண்டும் என கிடையாது. தர்மத்தை பொறுத்தவரை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் உதவி பண்ணலாம். அம்மா மட்டும் அதை பண்ணுவார்கள் என்றால், அதற்கு சப்போர்ட் பண்ண நாங்க தயார். இல்லை இன்னும் வர வேண்டும் என்றால், அதற்கும் தயார். இது ஓப்பன் எண்டாக தான் உள்ளது, கிளோஸ் கிடையாது”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related