12
August, 2026

A News 365Times Venture

12
Wednesday
August, 2026

A News 365Times Venture

E20 பெட்ரோல்: `கிரீன் நேஷன் முன்னெடுப்பா… வாகனங்களுக்கு பேராபத்தா?' – கள நிலவரம் என்ன? | ஓர் அலசல்

Date:

மத்திய அரசு 2014 முதல் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேற்கொண்டு வருகிறது. தற்போது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த பெட்ரோலால் ‘வாகனங்களின் மைலேஜ் குறைவு, இன்ஜின் கோளாறுகள் மற்றும் வாகன பொருந்தாமை’ காரணமாக வாகன ஓட்டிகள் இடையே எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மேலும் `காக்ரோச் ஜனதா கட்சி’ என்ற அமைப்பு உருவானது போல, பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை எதிர்த்து ‘E20 ஜனதா கட்சி’ அமைப்பும் உருவாகியுள்ளது.

E20 Blend Gasoline

‘100% தூய்மையான பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும், நுகர்வோருக்கு எரிபொருள் தேர்வு உரிமை வழங்க வேண்டும்’ எனக் கோரும் இந்த அமைப்பு, ‘நிதின் கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும்’ எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த பெட்ரோல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு மக்களவையில் பதிலளித்த நிதின் கட்கரி, “BS-3, BS-4 ரக வாகனங்களில் E20 எரிபொருளின் தரம் மற்றும் வீரியத்தை இந்தியன் ஆயில் கார்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து பரிசோதித்தன. இந்த சோதனையில் வாகனத்தின் வகை மற்றும் பழமையை பொறுத்து, வாகனங்களின் எரிபொருள் தேவை 2 முதல் 6 சதவீதம் வரை குறையக் கூடும் என கண்டறியப்பட்டது.

இதன் மூலம் நாட்டின் எரிபொருள் செலவினம் 6 சதவீதம் வரை குறையும் வாய்ப்பு உள்ளது. மேலும் டைனமோமீட்டரில் செய்யப்பட்ட இன்ஜின் ஆயுள் சோதனைகளிலும், சாலையில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனைகளிலும் E20 பெட்ரோல் காரணமாக எந்த கோளாறுகளும் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.” என்றார்.

இந்த நிலையில், இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. அதில், “குளோரைடு பிரச்னையால் வாடிக்கையாளர்களின் வாகனப் பாகங்கள் பழுதாவது மற்றும் அவற்றை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுவது சமீபகாலமாகப் பெருமளவில் அதிகரித்துள்ளது. E20 எரிபொருள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த குளோரைடு பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

E20 எரிபொருளில் அதிகப்படியான ஈரப்பதம் (Moisture) இருக்கிறது. இதனால் பெட்ரோல் போட்ட உடனே வாகனம் வழியிலேயே நின்றுவிடும். காலப்போக்கிலோ இன்ஜின் பாகங்களை முற்றிலும் பாழ்படுத்திவிடும். எனவே, எரிபொருள் தரக்கட்டுப்பாட்டு விதிகளில் குளோரைடு அளவைச் சேர்ப்பதும், வாடிக்கையாளர்களின் வாகனங்கள் பழுதைத் தடுக்கத் தரக்கட்டுப்பாட்டை அமல்படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

E20 பெட்ரோலால், பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்து பேச, தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளியை தொடர்புகொண்டோம். அவர், “2025 ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசின் உத்தரவுப்படி, அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் விநியோக மையங்களிலும் E20 பெட்ரோல் மட்டுமே சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்-களிலும் தற்போது எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

கே.பி. முரளி
கே.பி. முரளி

ஆரம்பத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குத் தாங்கள் பயன்படுத்துவது E20 பெட்ரோல் என்பது பற்றிய போதிய விழிப்புணர்வு இருக்கவில்லை. ஆனால், வாகனங்களில் மைலேஜ் குறையும் போது, பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளவு குறைவாக ஊற்றப்படுவதாகவே தவறாகக் கருதி வந்தனர். ஊடகங்கள் வாயிலாக E20 பற்றியும், அதனால் மைலேஜ் 3% முதல் 6% வரை குறைய வாய்ப்புள்ளது என வெளிவந்த பிறகே மக்களுக்கு உண்மை நிலை தெரியவந்தது.

எத்தனால் பெட்ரோலால் இன்ஜின் கோளாறுகள் அல்லது மைலேஜ் குறைவு ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு வாகன உற்பத்தி நிறுவனங்களே பதில் சொல்ல வேண்டும். அதேபோல, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் (Dealers) வெறும் சப்ளையர்கள் மட்டுமே.

எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் எரிபொருளை, அரசு நிர்ணயிக்கும் விலையில் மக்களுக்கு விநியோகிப்பது மட்டுமே அவர்களின் பணி. அவர்களுக்கு இதன் தரத்தை முழுமையாகச் பரிசோதிக்கும் தொழில்நுட்ப வசதிகள் இன்னும் வழங்கப்படவில்லை.

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

E20 பெட்ரோலினால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சவால் மழைக்காலம். எத்தனால் இயல்பாகவே தண்ணீருடன் எளிதில் கரையும் தன்மை கொண்டது. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிலத்தடி சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படும். அதில் ஏதேனும் கசிவு ஏற்பட்டு, சிறியளவில் மழைநீர் உள்ளே சென்றாலும், தொட்டியில் உள்ள மொத்த எத்தனாலும் தண்ணீராக மாறிவிடும்.

இதனால், பெட்ரோலின் நிறம் மங்கி மாசடைவதுடன், டிஸ்பென்சர் வழியாக வாகனங்களுக்குத் தண்ணீர் செல்லும் அபாயமும் ஏற்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், டீலர்களுக்கு லட்சக்கணக்கில் நிதி இழப்பையும் ஏற்படுத்தும்.

இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அரசிடம் சில முக்கியக் கோரிக்கைகள் முன்வைத்திருக்கிறோம்.

  • பெட்ரோல் பம்புகளில் வெறும் “பெட்ரோல்” என்று மட்டும் குறிப்பிடாமல், இன்வாய்ஸில் உள்ளவாறு “EBMS” (Ethanol Blended Motor Spirit) அல்லது E20 பெட்ரோல் என்றே பலகைகளில் குறிப்பிட வேண்டும்.

மெக்கானிக்
  • பெட்ரோலில் 20% எத்தனால் சரியாக உள்ளதா என்பதையும் அதன் தரத்தையும் சரிபார்க்க டீலர்களுக்கு உரிய உபகரணங்களும், பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும்.

  • நிலத்தடி தொட்டிகளை முழுமையாக நீர்புகா (Waterproof) கட்டமைப்பாக மாற்ற வேண்டும். தொட்டிக்குள் தண்ணீர் சென்றால் தானாகவே பம்ப் இயங்குவதை நிறுத்தும் “Auto Cut-off” தொழில்நுட்பத்தைப் பொறுத்த வேண்டும்.

  • எண்ணெய் நிறுவனங்களின் டேங்கர் லாரிகளில் இருந்து எரிபொருள் அனுப்பப்படும்போதே, அதில் தண்ணீர் கசிவு எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்து அனுப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய அரசின் விளக்கமும் – வாகன உற்பத்தியாளர்களின் கடிதமும் முரண்படும் நிலையில், இது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள, ஆட்டோமொபைல் பொறியியல் துறை (IRTT)-யின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஈ.ராஜசேகரிடம் பேசினோம்.

அவர், “தற்போது உருவாக்கப்படும் புதிய வாகனங்கள் அனைத்தும், E20 பெட்ரோலுக்கு ஏற்றவாறு வடிவமைப்பு மற்றும் இன்ஜின் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், சுமார் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்கள் தூய்மையான பெட்ரோலை (Pure Gasoline) மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.

பேராசிரியர் டாக்டர் ஈ.ராஜசேகர்
பேராசிரியர் டாக்டர் ஈ.ராஜசேகர்

இந்த பழைய வாகனங்களில் E20 பெட்ரோலை ஊற்றும்போது இன்ஜின் சார்ந்த பல தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எத்தனாலின் ஆற்றல் அடர்த்தி (Energy Density) சாதாரண பெட்ரோலை விடக் குறைவு. பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படும் போது அதன் ஒட்டுமொத்த ஆற்றல் குறைவதால், வாகனங்களின் மைலேஜ் சுமார் 6% முதல் 8% வரை குறைய வாய்ப்புள்ளது.

மேலும், எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் எத்தனாலை தோராயமாக ரூ.70-க்குக் கொள்முதல் செய்தாலும், பொதுமக்களுக்கு E20 பெட்ரோலாக விற்கும்போது முழுப் பெட்ரோலுக்கான விலையிலேயே விற்கின்றன. இதனால் நுகர்வோருக்குச் செலவு குறையாமல், மைலேஜ் மற்றும் இன்ஜின் பவர் மட்டுமே குறைகிறது.

இந்தியாவில் இப்போதும்கூட நடுத்தர வர்க்க மக்கள் 15 முதல் 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களையும் கூட புதுப்பித்து பயன்படுத்துவதை பார்க்க முடியும். புதிய வாகனங்களில் ‘ஃபியூவல் இன்ஜெக்டர்’ (Fuel Injection) தொழில் நுட்பம் உள்ளதால் பாதிப்பு குறைவு. ஆனால், பழைய வாகனங்களில் ‘கார்புரேட்டர்’ (Carburetor) அமைப்பே உள்ளது. காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் (Hygroscopic) தன்மை கொண்ட எத்தனால், வாகனத்தை நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கும்போதுகூட, பெட்ரோல் டேங்க் வென்ட் ஹோல் வழியாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, நீரையும் பெட்ரோலையும் தனித்தனியாகப் பிரித்துவிடும். இதனால் பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் மற்றும் இன்ஜின் பாகங்களில் துருப்பிடித்தல் மற்றும் சேதங்கள் ஏற்படுகின்றன.

Ethanol Petrol
Ethanol Petrol

தற்போதைய சூழலில் E20 பெட்ரோலால் ஏற்படும் பாதிப்பை குறைக்க பழைய வாகனம் வைத்திருப்பவர்கள் சில நடைமுறைகளைப் பின்பற்றலாம்:

  • வாகனத்தை நீண்ட நாட்கள் இயக்காமல் நிறுத்தி வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  • தேவைப்படும்போது அவ்வப்போது புதிய பெட்ரோலை போட்டுக்கொள்வது நல்லது.

  • எரிபொருள் தொட்டியை (Fuel tank) காலியாக வைத்திருக்காமல் ஓரளவுக்கு நிரப்பி வைத்திருப்பது நல்லது. டேங்க் காலியாக இருந்தால், உள்ளே காற்று சேர்ந்து கண்டன்சேஷன் மூலம் நீர் துளிகள் உருவாகி கரோஷனை அதிகப்படுத்தும்.

மேலும், ஒவ்வொரு வாகனத்திற்கும் அதன் எரிபொருள் Compatibility குறித்து வாகன உற்பத்தியாளர்கள் தெளிவான தகவல்களை வழங்க வேண்டும். நுகர்வோருக்கும் சரியான தகவல்கள் கிடைக்க வேண்டும். எரிபொருளின் தரம் மற்றும் சேமிப்பு முறைகள் முறையாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.” என்றார்.

பைக்குகள்

E20 எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டம், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சுமையைக் குறைக்கவும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் ஒரு முக்கியமான முயற்சியாகும். இருப்பினும், பழைய வாகனங்களில் ஏற்படும் இன்ஜின் கோளாறுகள், மைலேஜ் குறைவு மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பராமரிப்புச் சவால்கள் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை. எனவே, அரசு, வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இணைந்து கடுமையான தரக்கட்டுப்பாட்டை அமல்படுத்தி, தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

அதேவேளையில், நுகர்வோருக்குத் தூய்மையான பெட்ரோலைத் தேர்வு செய்யும் உரிமையையும், வெளிப்படையான விழிப்புணர்வையும் வழங்குவதே இத்திட்டத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிசெய்வதற்கான நிலையான தீர்வாக அமையும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"தொகுதி மறுவரையறைக்கு எதிரான தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது"- நயினார் நாகேந்திரன்

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் திமுக, காங்கிரஸ்...

‘சுத்தமான பெட்ரோல் உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்?’ – E20 விவகாரத்தில் பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

இந்தியாவில் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன....

பனியன், டவுசருடன் குறைகளைக் கேட்ட ஆம் ஆத்மி MLA; "பதவியைப் பறிக்கணும்" – டெல்லி முதல்வர் கண்டனம்

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள கிராரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி...