பிக் பாஸ் சீசன் பத்து இன்னமும் கூட சுவாரசியமாகவும் பரபரப்பாகவும் மாறவில்லை. ஆகவே என்னவாவது அதிரடியான மாற்றங்களைச் செய்து பிக்அப் ஆக வைக்கும் முயற்சியில் பிக் பாஸ் டீம் இருக்கிறது. விளைவு LP, சவின்யா, ஜாவித் ஆகியோரின் ரீஎன்ட்ரி.
மக்களின் வாக்குகளால் அல்லாமல், Leader’s Exit Task மற்றும் சக போட்டியாளர்களின் வாக்குகள் மூலம் வெளியேறிய மூவரையும் உள்ளே மீண்டும் அழைப்பதின் மூலம் ஷோ பரபரப்பாகும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.
வீட்டிற்குள் முன்னர் நிகழ்ந்த விஷயங்களுக்கு ரீஎன்ட்ரி நபர்கள் ஆவேசமாக பழிவாங்குவார்கள் என்கிற கணக்கு இது. சரியாக நடக்குமா என்று பார்ப்போம்.
நாள் 15:
தனது அடாவடித்தனங்களைத் தாண்டி ஒவ்வொரு நாளையும் சுவாரசியமாக்குவதில் முனியம்மாளின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்கிறது. தலைவர் பதவிக்கு ஓட்டு கேட்கும் போது மற்றவர்கள் நின்றபடி கேட்க, எதையுமே வித்தியாசமாக செய்யும் ஜேசன் அமர்ந்தபடி வாக்கு கேட்டார். “நீங்க நின்னா.. நானும் நிப்பேன். உக்காந்தா நானும் உக்காருவேன்” என்று விநோதமாக ஏதோ காரணம் சொன்னார். ஜேசன் அமர்ந்தபடி வாக்கு கேட்பதை முனியம்மாள் ஆட்சேபித்தார். ஆச்சா?
ஆனால் வாக்களிக்கும் போது ஜேசனுக்குத்தான் வாக்களித்தார் முனியம்மாள். “நீ கல்கத்தா டாக்சின்னா. நான் சென்னை ஆட்டோடா.. லெஃப்ட் கை காட்டி, ரைட் இண்டிகேட்டர் போட்டு ஸ்ட்ரையிட்டா வண்டி ஓட்டுவேன்’ என்கிற விவேக்கின் நகைச்சுவை மாதிரி முனியம்மாளின் ஆட்டம் கோக்குமாக்காக இருக்கிறது. அவர் வாக்களித்தது ஜேசனின் மீதுள்ள பாசத்தால் இல்லை. ஜேசன் வீட்டின் தலைவரானால் எப்படி சமாளிக்கிறார் அல்லது எப்படி மாட்டிக் கொண்டு விழிக்கிறார் என்பதை வேடிக்கை பார்க்கும் நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த வார தலைவராக அவினாஷ தேர்வானார். பாவம். போதாத நேரம். “டீமை வித்தியாசமா அமைப்பேன். கிச்சன் டீம்ல பாய்ஸ் மட்டும் போடுவேன்” போன்ற வித்தியாசமான உறுதிமொழிகளைச் சொல்லி அவினாஷ் வாக்கு கேட்டதால் ‘அட.. நல்லா இருக்கே?” என்று வியந்து பலரும் அவரை ஆதரித்தார்கள். அதன் பலனை பிறகு அனுபவித்தார்கள்.
எப்படியோ, இந்த வார கிச்சன் டீமில் அனைவரும் ஆண்கள். அன்சர் சமையல் அணி தலைவர். உப்பில்லாத சுடுகஞ்சி, தண்ணி சாம்பார் என்று வித்தியாசமான உணவுகளை செய்து அசத்தினார்கள்.
‘உங்களாலதான் வித்தியாசமா யோசிக்க முடியுமா. நானும் சிந்திப்பேன்டா’ என்று களத்தில் இறங்கிய எதிரணித் தலைவர் ராகவ், ‘நல்லா செயல்படற டீமுக்கு நாலு ஸ்டார் கொடுப்பேன். எங்க எதிர்பார்ப்பை தாண்டி சூப்பரா செயல்பட்டா அஞ்சாவது ஸ்டாரை கொடுப்பேன்’ என்று அவர் சொன்னதற்கு ஆளும் அணியில் பயங்கர எதிர்ப்பு. ‘அந்த அஞ்சாவது ஸ்டாருக்கு என்னதான் அர்த்தம். சொல்லுங்க பாஸ்’ என்று அவர்கள் கெஞ்சிக் கதறியும் கூட ‘அடிச்சுக் கேட்டா கூட சொல்ல மாட்டேன்’ என்று கெத்து காட்டினார் ராகவ்.
இந்த வார நாமினேட் லிஸ்டில் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார் ஆனந்தி. வீட்டிலுள்ள பல போ்களை எரிச்சலூட்டியிருக்கிறார் என்பது புரிகிறது. லட்சுமிபிரியா, தன்யா, அன்சர், ஷமா, முனியம்மாள், சாந்தினி மற்றும் ராகவ் ஆகியோரும் எவிக்ஷன் பட்டியலில் இருக்கிறார்கள்.

நாள் 16:
காலையில் சீரகத்தண்ணியெல்லாம் கொடுத்து அசத்தியது ஆண்கள் கிச்சன் டீம். டைனிங் ஏரியா முனியம்மாள் கண்ட்ரோலில் இருக்கிறது. விதிமீறல் செய்த வினோத்தை “முட்டி போட்டிக்கிட்டே ஒரு ரவுண்டு சுத்தி வாங்க’ என்று டாஸ்க் கொடுத்தார் முனி. வினோத் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டாலும் ‘இது Fun டாஸ்க்கா இல்ல. தண்டனை மாதிரி இருக்கு’ என்று பலரும் ஆட்சேபித்தார்கள். ‘உடலை வருத்தி செய்யற மாதிரி இருக்கு’ என்று பிருத்வி சொன்னதும் “உடம்பை வருத்தித்தானே எக்சர்சைஸ் பண்றீங்க. இதுவும் அதே மாதிரிதானே?” என்றொரு பாயிண்ட்டை அசால்ட்டாக எடுத்து வைத்தார் முனியம்மாள். (வக்கீலுக்கு படிச்சிருந்தா கலக்கியிருப்பாங்க!)
பாயிண்ட் பாயிண்டாக பேசினாலும், மற்றவர்கள் சுட்டிக் காட்டும் வேலையை மட்டும் முனியம்மாள் செய்வதில்லை. அடாவடியாக மறுக்கிறார். இது தொடர்பாக ஷாதிகாவுடன் பயங்கர சண்டை. ஷாதிகாவிற்கு ஏதாவதொன்றால் சப்போர்ட செய்ய லட்சுமிபிரியா உத்தரவாதமாக வந்து விடுவார். அப்படியொரு பலமான கூட்டணியில் இருக்கிறார்கள். “முகரையைப் பாரு.. முகரைய’ என்று கிராமத்து ஸ்டைலில் இவர்களைப் பார்த்து கோபப்பட்டார் முனியம்மாள்.
நாயகன் படத்தின் காட்சியை அன்சரும் வினோத்தும் இணைந்து நடித்துக் காட்டியது அருமை. சண்டையும் சச்சரவுமாக சென்று கொண்டிருக்கும் போது அன்சரின் காமெடிதான் சற்றாவது பார்வையாளர்களைக் காப்பாற்றுகிறது.
Content Creators என்கிற தலைப்பில் ஒரு டாஸ்க். சுவாரசியமாக செய்பவர், அடுத்த வார தலைவர் போட்டியில் இருப்பார்கள். போரடிப்பவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான். முகேஷூம் ஷாதிகாவும் காதலர்கள் போல் நடித்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருக்க “அவளைத் தொடாம நடிடா” என்று LP பொசசிவ்வுடன் கோபப்பட்டது ஜாலியான காட்சி.
‘சிம்ப்ளி வேஸ்ட்’, ‘மிக்சர் மாமா’ என்பது போன்ற ஏடாகூடமான டைட்டில்களை வைத்து போட்டியாளர்களுக்குள் சிண்டு மூட்டி விடுவது பிக் பாஸின் வழக்கமான ஸ்டைல். இதை போட்டியாளர்கள் அழுகிணித்தனமாக ஆடினார்கள். எனவே இவர்களை எச்சரித்த பி்க் பாஸ், “இந்த ஆட்டத்தை நேர்மையா ஆடுங்க” என்று மீண்டும் ஆட வைத்தார்.
டிராமா க்வீன் என்கிற பட்டம் ஆனந்திக்கு சரியான பொருத்தம். ‘நான் ஒரு சோம்பேறி’ பட்டத்தை பரிதாபத்துடன் வாங்கிக் கொண்டார் தன்யா. மிக்சர் மாமா, குமரனுக்கு கிடைத்தது. பாவம். ‘நான் ஒரு யோக்கியன்’ பட்டத்தை வேறு வழியின்றி சிரித்தபடி ஏற்றார் ராகவ். சிம்ப்ளி வேஸ்ட், சாந்தினி. இப்படியாக இந்த டாஸ்க் சென்றது.
இரண்டாவது முறை ஆடினாலும் பல போட்டியாளர்கள் மீண்டும் சொதப்பினார்கள். ஒருவரின் பெயரைச் சொல்வதற்கு மிகவும் தயங்கினார்கள். அல்லது பொருத்தமற்ற பெயரை சொன்னார்கள். பிக் பாஸ் மீண்டும் தலையிட வேண்டியிருந்தது. ஆனால் முனியம்மாள் மட்டும் ஒவ்வொரு பட்டப் பெயருக்கும் பொருத்தமான நபர்களை சட்சட்டென்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். “பேசும் போது காது அசையுது.. பார்த்தியா.. இவன் நம்ம ஆளுடே’ என்று பிக் பாஸ் கூட உள்ளிருந்து மகிழ்ந்திருப்பார்.

நாள் 17:
“பாய்ஸ்லாம் ஒரு டீமா இருக்காங்க. நம்மள டார்கெட் பண்ணி வெளியே அனுப்பிடுவாங்க” என்று ஷாதிகாவிடம் கோபமாக ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தார் LP. அது பிறகு உண்மையானது. ஸ்பாட் லைட் டாஸ்க்கிற்கு, பாய்ஸ் டீமில் உள்ள தனது நண்பர்களை அனுப்பாமல் தலைவர் அவினாஷ் ஆடுவது போங்காட்டம்.
‘பாத்ரூம்ல முடி அப்படியே கிடக்குது. முனியம்மாதான் கடைசியா குளிச்சிட்டு வந்தாங்க. அவங்கதான் அதை எடுக்கணும்’ என்று க்ளீனிங் டீம் அஷ்மிதா ஊரைக் கூட்டி புகார் செய்த போது “அது என் முடிதான்னு லேப்ல கொடுத்து ப்ரூவ் பண்றீங்களா?” என்று கேட்குமளவிற்கு முனியம்மாளின் லாஜிக் திறமை வளர்ந்திருக்கிறது. இது போன்ற அடாவடித்தனங்களை அவர் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால் அதுவும் சேர்ந்ததுதானே முனியம்மாள்? ‘பாத்ரூம் சென்று விட்டு வந்தால் ஃபிளஷ் செய்து விட்டு வர வேண்டும்’ என்கிற அடிப்படையைக் கூட பிக் பாஸ் வீட்டில் சிலர் பின்பற்றாதது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
முயல் வேடம் அணிந்து ஆடிய டாஸ்க்கிலும் ஷமா – ஜேசன் மோதல் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஷமாவிற்கு தலை கிறுகிறுக்க, அதை ‘ஸ்ட்ராட்டஜி’ என்று வர்ணித்தார் ஜேசன். “ஆமாய்யா.. நான் பண்ணது ஸ்ட்ராட்டஜி’தான் என்று நொந்து போய் சொன்னார் ஷமா.
“பயந்தாங்கொள்ளி.. வளர்ந்து கெட்டவனே.. நான் இருக்கற வரைக்கும் உனக்கு பயம் இருக்கும்’ என்றெல்லாம் ஜேசனைப் பார்த்து எரிச்சலான ஷமா, த்தூ.. என்று உமிழ்ந்தது தவிர்த்திருக்க வேண்டிய செயல். ‘எனக்கு உண்மையாவே மயக்கம் வந்தா கூட அது நடிப்பான்னு கேட்டா, என்னதான் பண்றது?’ என்று பிறகு புலம்பினார் ஷமா. தன்னை பலவீனமான நபராக வெளியில் காட்டிக் கொள்ளக்கூடாது என்று ஷமா நினைப்பது சரிதான். ஆனால் எப்போதும் வேலைக்கு ஆகாது.
முயல் டாஸ்க்கில் நண்பர்களின் உதவியுடன் அவினாஷ் வெற்றி பெற்றார். ஸ்பாட் லைட் டாஸ்க்கில் ‘லவ் டிராக்’ டிராமாவை முகேஷூம் ஷாதிகாவும் இணைந்து நடத்தியது மிக மிக சுவாரசியம். முனியம்மாளை கரெக்ட் செய்யும் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆணாக, சாந்தினி திறமையாக நடித்தது ஆச்சரியம். இத்தனை நாட்களில் சாந்தினியின் அடையாளம் வெளிப்பட்டது, இந்த டாஸ்க்கில் மட்டும்தான். அம்மா – பிள்ளையாக நடித்த பிருத்வி- தன்யாவின் நடிப்பும் நன்று.
Leader Exit Task-ல் முனியம்மாளின் புகைப்படத்தை வைத்து தவறு செய்தார், தலைவர் அவினாஷ். சாந்தினிக்கு Supporting character-ஆக முனியின் நடிப்பு நன்றாகத்தான் இருந்தது. போலவே முகேஷின் புகைப்படத்தை வைத்ததற்கு ஷாதிகா மிகவும் அப்செட் ஆகி பாத்ரூமிற்குச் சென்று அழுதார். இந்த டாஸ்க்கில் அஷ்மிதா – ஆனந்தி கூட்டணியின் ஃபர்பாமன்ஸ்தான் மிக மிக சுமாராக இருந்தது. இதில் ஆனந்தியின் புகைப்படத்தை மட்டும் வைத்தார் அவினாஷ்.
‘மெயின் டோரை திறங்க பிக் பாஸ். நான் வீட்டுக்குப் போகணும்’ என்று வழக்கம் போல் கண்ணீரும் கம்பலையுமாக புலம்பினார் ஆனந்தி. இந்தத் திறமையை டாஸ்க் நடிப்பில் காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
நாள் 18: ‘ஆண்கள் க்ரூப்பிஸம் பண்றாங்க… ஜேசனை ஏன் ஸ்பாட்லைட் டாஸ்க்கிற்கு ஏன் தேர்ந்தெடுக்கலை?” என்று LP-ம் முத்தழகியும் பேசிக் கொண்டிருந்தது உண்மை. ஜேசன் மட்டுமல்ல குமரன், அன்சர், வினோத் போன்றவர்களையும் அவினாஷ் ஏன் ஸ்பாட்லைட் டாஸ்க்கில் சேர்க்கவில்லை?
ஆண்களைப் போலவே பெண்கள் டீமிலும் க்ரூப்பிஸம் இருக்கத்தான் செய்கிறது. LP, ஷாதிகா, முத்தழகி ஆகிய மூவரும் ஒரு வலுவான கூட்டணியில் இருக்கிறார்கள். இன்று நடந்த ஸ்பாட்லைட் டாஸ்க்கில் ராகவ்-ஷமா இணைந்து நடத்திய நிகழ்ச்சி நன்று. LP-ம் முத்தழகியும் சேர்ந்த நடித்த டிராமா பயங்கர போராக இருந்தது.
Leader Exit Task-ல் இருந்த வரிசையை மாற்றினார் அவினாஷ். முனியையும் முகேஷையும் தூக்கி விட்டு LP மற்றும் முத்தழகியின் புகைப்படத்தை வைத்தது சரியான தேர்வு. இதற்கான விளக்கத்தை ஷாதிகா கோபமாக கேட்ட போது ‘நேத்திக்கு வெச்சது ஃபர்பாமன்ஸ் பார்த்து.. இன்னிக்கு வெச்சது கன்டென்ட் பார்த்து’ என்று காரணத்தை உளறிக் கொட்டினார் அவினாஷ்.
ரெவ்யூ நேரம். ராகவ் ஐந்தாவது ஸ்டாரை கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. கிச்சன் டீமிற்கு தர அவர் தயாராக இருந்த போது ஜேசனின் உடல்மொழி எரிச்சல் தந்ததால் நான்கு ஸ்டார் மட்டுமே கொடுத்தார். அந்த ஐந்தாவது ஸ்டார் எதற்கு தருவார் என்கிற சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் தெரியவில்லை.

நாள் 19:
Leader Exit Task-ல் இருந்த ஆனந்தி, முத்தழகி, LP ஆகிய மூவரும் தங்களுக்காகப் பேசி வாக்கு சேகரிக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை வலுவாக பயன்படுத்திக் கொண்டார் ஆனந்தி. தான் ஏமாந்த கதை, பரிதாபக் கதையையெல்லாம் உருக்கமாகப் பேசி போட்டியாளர்களின் கவனத்தைக் கவர்ந்தார். LP-க்கு அப்போதே தெரிந்து போயிற்று. “கதை நேரத்துல ஆனந்திக்கு வாய்ப்பு கிடைக்கலை. இதை சரியா பயன்படுத்திக்கிட்டாங்க”.
மூவரின் பேச்சையும் வைத்து சக போட்டியாளர்கள் வாக்களிக்கும் போது ஆனந்தியின் பேச்சை ஆய்வு செய்த முனியம்மாள் “கடன் கொடுத்த பணம் திரும்பி வராத போது அதை பிச்சை போட்டதா நெனச்சிக்கிட்டேன்னு ஆனந்தி சொன்னது எனக்கு சரியாப்படல” என்று சொன்னது ஷார்ப் அப்சர்வேஷன்.
சக போட்டியாளர்கள் வாக்களித்தபடி LP வெளியேற நேர்ந்தது. “நீயெல்லாம் ஒரு லீடரா.. மோசமானவன். மக்களே. இவன் ஜெயிக்கக்கூடாது. பார்த்துக்கங்க” என்று அவினாஷிற்கு சாபம் விட்டுச் சென்றார் LP. இவருடைய எவிக்ஷன் காரணமாக ஷாதிகாவும் முத்தழகியும் டென்ஷன் ஆனார்கள். குற்றவுணர்வினால் தலைகவிழ்ந்து கிடந்தார் அவினாஷ். அவர் நியாயமான தேர்வுகளைச் செய்திருந்தால் இப்படி தலைகுப்புற விழத் தேவையில்லாமல் இருந்திருக்கும்.
ஸ்பாட்லைட் டாஸ்க்கில் சிறப்பான பங்கேற்பாளராக தேர்வு செய்யப்பட்ட ராகவ், அடுத்த வார தலைவருக்கு போட்டியிடுவார். இவர் முனியம்மாவிடம் ஆதரவு கேட்கச் சென்ற போது, முனியம்மாள் தந்த பதில் அட்டகாசமானது. “நீங்க பாதுகாப்பா வண்டி ஓட்டற ஆளு. யார் பெயரையும் சொல்றதுக்கு தயங்குவீங்க. நீங்க லீடர் ஆனா வீடு சுவாரசியமா இருக்காது. ஆனா நான் கல்லு முள்ளு இருக்கிற பாதைல ஓடி ஜெயிக்க விரும்பறவ. அப்படிப்பட்ட ஆளைத்தான் தேர்ந்தெடுப்பேன்” என்று முனியம்மாள் சொன்ன விளக்கத்தைப் பார்த்து “யாரு சாமி இவன்.. என்னையே மிஞ்சிடுவான் போல” என்று பிக் பாஸ் அகம் மகிழ்ந்திருப்பார்.
நாள் 20: வீக்கெண்ட் பஞ்சாயத்து நாள்.
உள்ளே வந்தவுடனேயே எவிக்ஷன் கார்டுடன் வந்து அதிர்ச்சி கொடுத்தார் விசே. அது ஆனந்தியின் எவிக்ஷன். சரியான தேர்வாகவே இது இருந்தது. அந்த அளவிற்கு சுவாரசியமற்ற, எல்லாவற்றிற்கும் கண்ணீர் சிந்தி எரிச்சலூட்டும் டிராமா க்வீனாகத்தான் ஆனந்தி இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு சொல்லப்பட்ட தனிப்பட்ட காரணம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
“நான் எதைப் பத்தியெல்லாம் கேள்வி கேட்டா நல்லாயிருக்கும்.. நீங்களே சொல்லுங்க.. பார்க்கலாம்” என்று பந்தை போட்டியாளர்களிடமே எறிந்தார் விசே. ‘இந்த வார லீடர்ஷிப் எப்படியிருந்தது, க்ரூப்பிஸம்….’ போன்ற விஷயங்களை மக்கள் சொன்னார்கள்.
ஸ்டோர் ரூமில் இருந்து உப்பை கொண்டு வரச் சொன்ன விசே “இந்த வீட்ல யாருக்கு ரோஷமே இல்ல.. அவங்களுக்கு இதை கொடுங்க’ என்றார். இப்படியாக போட்டியாளர்களை டிரிக்கர் செய்து அவர்களுக்குள் ஆவேசமாக சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது பிக் பாஸின் வழக்கமான செய்கைகளில் ஒன்று. “பாவிகளா.. உப்பில்லாம சமைச்சு நாக்கு செத்துப் போன போதெல்லாம் இதை கொடுக்காம.. இப்ப வந்து வாயில கொட்றாங்களே?’ என்பது போட்டியாளர்களின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கும்.
தப்பு செஞ்சவனுக்கு உப்பு கொடு’ என்கிற இந்த டாஸ்க்கில், எதிரணித் தலைவராக இருந்த ராகவ்விற்குத்தான் கிலோ கணக்கில் உப்பு கிடைத்தது. ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவராக அவரால் செயல்பட முடியவில்லை. போலவே தனது அணியையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியவில்லை. அவரின் இயல்புப்படி பிரச்சினைகளை மென்மையாக அணுகுபவராக இருந்து விட்டார். ரோஷமாக ஆட வேண்டிய இந்த டாஸ்க்கையும் போட்டியாளர்கள் வழக்கம் போல் சொதப்பியதால் “எனக்குத்தான் உப்பு தேவை. ரோஷமே இல்லாம உங்க கிட்ட பேசிட்டிருக்கேன்’ என்று நொந்து போனார் விசே.
‘முருகேசா.. பேய் இருக்கா.. இல்லையா.. நம்பலாமா கூடாதா?’ என்கிற வசனத்தைப் போல ‘ஷமாவிற்கு உண்மையிலேயே மயக்கம் வந்ததா, அல்லது ஸ்ட்ராட்டஜியா’ என்கிற விஷயமும் அலசப்பட்டது. ஷமாவிடம் தொடர்ந்து ஒரண்டை இழுக்கும் ஜேசனை எழுப்பி “ஏன்.. அவங்க ஸ்டாம்ப்பை தூக்கிப் போட்டீங்க.. அப்படின்னா ஷமா மீது பயமா.. டாஸ்க்கை ஒழுங்கா ஆட மாட்டீங்களா?” என்று இந்த நாளை முடித்துக் கொண்டார்.

நாள் 21்: வீக்கெண்ட் பஞ்சாயத்து நாள் இரண்டு. சட்டையில் சேவல் படத்துடன் வந்த விசே, ‘பத்தா’ படத்தின் பிரமோஷனிற்காக சில நிமிடங்களை செலவழித்தார். “இந்தப் படத்துல நான் வில்லன். இந்தப் பையன்தான் ஹீரோ” என்று ஒரு சிறுவனை அறிமுகப்படுத்தியது சுவாரசியம்.
“கேள்வி புரிஞ்சா மாதிரியே மூஞ்சை வெச்சுக்கறீங்க.. ஆனா பதில் கேட்டா பிளாங்க் ஆயிடறீங்க.. என்னதான் கதை உங்களுது?’ என்று ஜேசனின் ஓவர் கான்பிடன்ஸை அவ்வப்போது உடைத்துப் போட்ட விசேவின் பாணி நன்று.
“நம்ம பக்கம் இன்னும் லைட் திரும்பாம இருக்கே?’ என்கிற பீதியிலேயே அமர்ந்திருந்த அவினாஷிடம் அடுத்ததாக வண்டியைத் திருப்பினார் விசே. “ஏன் பாய்ஸ் டீம்ல இருந்து சிலரை ஸ்பாட்லைட் டாஸ்க்கிற்கு போடலை?” என்கிற கேள்விக்கு மாற்றி மாற்றி காரணங்களை அடுக்கிய அவினாஷிடம் “நீங்களே அவருக்கு புரிய வைங்க.. என்னால முடியல ” என்று சக போட்டியாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பிரேக்கில் சென்றார் விசே.
எவிக்ட் ஆன LP மேடைக்கு வந்து அவினாஷிற்கு பலத்த அர்ச்சனை செய்து விட்டு வீட்டுக்குப் போக திரும்பும் போது டிவிஸ்ட். அவரோடு சேர்த்து சவின்யா, ஜாவித் ஆகிய மூவரும் ரீஎன்ட்ரி. உள்ளே சென்றவர்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் கையோடு சோ்த்து கயிறு கட்டிக் கொள்ள வேண்டுமாம். உண்பது, உறங்குவது, சுச்சா செல்வது என்று எந்தச் சமயத்திலும் கழற்றக்கூடாதாம். இதைப் பின்பற்ற முடியவில்லையென்றால் கயிற்றைக் கழற்றி விட்டு வீட்டுக்குச் செல்லலாமாம். இது யாருக்கான தண்டனை என்று தெரியவில்லை.
சவின்யா அஷ்மிதாவையும் LP குமரனையும் ஜாவித் தன்யாவையும் கயிறு கட்டி தங்களின் ஒரு வாரத்திற்கான இணைபிரியா தோழர்களாக தேர்ந்தெடுத்தார்கள். “பாடி ஷேமிங் நடந்தா அதை உடனே பொதுவுல சொல்லியிருக்கணும்” என்று அஷ்மிதாவை தேர்ந்தெடுத்த காரணத்தைச் சொன்னார் சவின்யா. தன்னை நாமினேட் செய்த போது ‘பொய்யான காரணத்தைச் சொன்ன முனியம்மாளுக்கும் ஜெர்க் தந்தார். (உன்னைத் தட்டிக் கேட்க ஒருத்தன் வருவான்டா மோமெண்ட்!)
தனக்குப் பிடித்தமான போட்டியாளர்களிடம் மட்டும் ஜாலியாகப் பேசி ஒரண்டை இழுப்பது பிக் பாஸின் வழக்கம். அந்த வகையில் “இந்த டாஸ்க்கின் போதுதான் முனியம்மா பேசவே இல்லை” என்று சொல்லி சபையை கலகலக்க வைத்தார் பிக் பாஸ்.
“இன்னமும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்ற விசே எவிக்ஷன் ஃப்ரீ பாஸை அறிமுகப்படுத்தினார். இது பத்து வாரத்திற்கு செல்லுபடி ஆகுமாம். மூன்று பாஸ்கள் இருக்கிறதாம். ஒரு முறை பயன்படுத்திக் கொள்ளலாமாம். இந்த பாஸை பெறுவதற்கான போட்டிகளின் மூலம் இந்த வாரம் பயங்கரமான குடுமிப்பிடி சண்டைகள் இருக்கும் என்று தெரிகிறது.
“பாய்ஸ் டீம்ல மட்டுமில்ல. கேர்ஸ் டீமிலும் க்ரூப்பிஸம் இருக்குது. பார்த்துக்கங்க” என்று வார்னிங் தந்த விசே, ஜேசனின் பாடி லேங்வேஜை ஜாலியாக கிண்டலடித்தபடி விடைபெற்றார்.
இந்த மூவரின் ரீஎன்ட்ரி ஆட்டத்தை சுவாரசியப்படுத்துமா அல்லது முற்றிலும் புதிய போட்டியாளர்களை உள்ளே இறக்கியிருக்க வேண்டுமா? கமெண்ட்டில் சொல்லுங்க மக்களே..!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…




