தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளது தி.மு.க தலைமை. அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்துள்ளது. பெண் விவாகரமும், கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு மல்லுக்கட்டியதுமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்கிற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தி.மு.க முகாமிற்கு வந்தார் ராஜீவ் காந்தி. தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கிவந்தார். துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வந்தார். அதன்மூலம் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு நெருக்கமானவராக மாறினார். ஒருகட்டத்தில் தி.மு.க-வின் பேச்சாளர்கள் முகங்களில் ஒருவராகவும் ராஜீவ் காந்தி உயர்ந்தார்.
இதன் பிறகு, கடந்த ஆண்டு தி.மு.க-வின் மாணவர் அணி என்கிற முக்கிய அணியின் மாநிலச் செயலாளராக ராஜீவ் காந்திக்கு பொறுப்பு வழங்கியது தி.மு.க தலைமை. பொறுப்புக்கு வந்த பிறகு மாணவர் அணியின் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்திவந்தார்.
இந்நிலையில் இவர் குறித்து தொடர்ந்து தி.மு.க தலைமைக்குப் புகார் சென்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த பத்து நாள்களுக்கு முன்பாக இவரது பதவிக்கு ஆபத்து என்கிற தகவல், தி.மு.க மேல்மட்டத்தில் கசிந்தது.
இந்நிலையில், மாணவர் அணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி நீக்கப்பட்டு, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்கிற பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.
“கட்சிக்கு வந்தபோது கொள்கைக்காகச் செயல்படும் கொள்கைவீரர் போல ராஜீவ் காந்தி இருந்தார். ஆனால் அடுத்த சிலமாதங்களிலேயே அவரின் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. ராஜீவ், இராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். அந்த மாவட்ட அமைச்சரும் இவரும் ஒரே சமூகம் என்பதால் அவரும் ஆரம்பத்தில் ராஜீவ் காந்திக்கு கேட்டதையெல்லாம் செய்து கொடுத்தார். ஒருகட்டத்தில் போக்குவரத்து துறையில் சத்தமில்லாமல் ராஜீவ் ஒரு ராஜ்யம் நடத்தும் அளவுக்கு செல்வாக்குடன் வலம்வந்தார்.
தி.மு.க-விற்காக பல்வேறு மேடைகளில் ஏறி களமாடி வந்தார். தலைமை கவனிக்கும் அளவுக்கு முக்கிய முகமாகவும் மாறிவந்தார். அதுவே அவருக்கு சிக்கலாகவும் மாற ஆரம்பித்தது.
போக்குவரத்து துறைக்கு புதிய அமைச்சர் வந்த பிறகு அவருடன் ராஜீவ் காந்தி இணைந்து போனார். இதற்குப் பின்னால் துணை முதல்வர் மற்றும் அன்பில் மகேஸ் ஆகிய இருவருடன் ராஜீவ் காந்தி காட்டிய நெருக்கமே இவரை பிற அமைச்சர்கள் மத்தியில் கடுமையாக லாபி செய்ய வைத்தது.
இவர் மனைவியின் ஊர் கோயம்புத்துார் என்பதால், தற்போது குடும்பத்துடன் கோவைக்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு ஒரு தொகுதியில் போட்டியிடவும் ராஜீவ் காந்தி திட்டமிட்டார். கோவை மண்டலத்திற்கு பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருடனே இவர் ஒரு கட்டத்தில் மோதல் போக்கைக் கையாண்டுள்ளார்.

எனக்கான தொகுதிகளை தலைமையிலிருந்தே வாங்கி வந்துவிடுவேன் என்று பந்தாவாகச் சொல்லிவந்துள்ளார்.
மற்றொருபுறம் கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலருக்கும் இரவு நேரத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் வழியாக தேவையற்ற முறையில் மெசேஜ் செய்துவந்திருக்கிறார். அவர்கள் சொல்லிப் பார்த்தும், இவர் நிறுத்தவில்லை. அதையடுத்து அந்தப் பெண் நிர்வாகிகள், இந்த விவகாரம் குறித்து மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
மற்றொருபுறம் செந்தில் பாலாஜியும் கோவையில் தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார் ராஜீவ் காந்தி என்று, முதல்வர் காதில் விஷயத்தைப் போட்டுடைத்தார். சில அமைச்சர்கள், தேவையில்லாமல் பல டெண்டர் விவகாரங்களில் தலையிட்டு, தனக்கு வேண்டியவர்களுக்காக ராஜீவ் காந்தி மல்லுக்கட்டுகிறார் எனப் பற்றவைத்தனர்.
இது ஒருபுறம் இருக்க கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடலாம் என ராஜீவ் திட்டமிட்டார். இந்த நிலையில்தான், பாஜக-வினர் ராஜீவ் காந்தி குறித்த தகவல்களைச் சேகரித்து இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கின்றனர்.
பாஜக ராஜீவ் காந்தி விஷயத்தில் கவனம் செலுத்தும் தகவல், திமுக தலைமையின் காதுகளுக்கும் சென்றிருக்கிறது. தலைமையும் நாசுக்காக ராஜீவ் காந்தியிடம் சொல்லிப்பார்த்தது. ஆனால், உதயநிதியுடன் இவருக்கு இருந்த நெருக்கத்தைக் காட்டி, இந்த விவகாரங்களை எப்படியும் சமாளித்துவிடலாம் என நினைத்தார்.

ஆனால் தொடர்ந்து தலைமைக்கு அழுத்தம் வரவே, அவருக்கான பொறுப்புகளை முழுமையாக பிடுங்க தலைமை திட்டமிட்டது. அப்படி செய்தால் அது பேசுபொருளாக மாறிவிடும் என்று கருதி, கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்கிற பதவிக்கு அவரை நியமித்துள்ளனர்” என்றனர் விரிவாக.
மாணவர் அணிச் செயலாளர் பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் அந்தப் பதவியைப் பிடிங்கியுள்ளது தி.மு.க தலைமை. புதிய பொறுப்பையும் தனக்கான பாணியிலேயே வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ராஜீவ் காந்தி. “தி.மு.க-வின் முக்கிய முகமாக வரவேண்டியவர் இப்படி அவசரப்பட்டு தனது இருப்பை காலி செய்துகொண்டாரே” என்று வருத்தப்படுகிறார்கள் மூத்த நிர்வாகிகள் சிலர்.




