27
November, 2026

A News 365Times Venture

27
Friday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம்: முதலைக் கண்ணீர், CRPF வசம் மலை – வாதங்களும் உச்ச நீதிமன்ற அதிரடி உத்தரவுகளும்!

Date:

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்:

“முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்கள், இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்!” – அறங்காவலர் குழுவைக் கலைத்து, சி.ஆர்.பி.எஃப் வசம் மலையை ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உத்தரவை நிறைவேற்றத் தவறிய தமிழக அதிகாரிகளுக்குக் கடும் கண்டனம்; 24-ம் தேதி ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சுடரை எடுத்துத் தூணில் தீபம் ஏற்ற ஆணை; தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 13 பேருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வு அதிரடி!

வழக்கின் பின்னணி:

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 06.01.2026 தேதியிட்ட உத்தரவைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 20, 2026 அன்று உச்ச நீதிமன்றம் முக்கிய இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

உச்ச நீதிமன்றம்

அதன்படி, தற்காலிக நடவடிக்கையாக அந்தக் குறிப்பிட்ட தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நோடல் அதிகாரியாகச் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று, உச்சிப் பிள்ளையார் கோயில் அருகிலுள்ள வழக்கமான தீப மண்டபத்தில் மட்டுமே தீபம் ஏற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இது உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல் எனக் கூறி மூல மனுதாரர் ராம ரவிக்குமார், கார்த்திகேயன், வி. ராமசுப்பு உள்ளிட்டோர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர் 27, 2026) விசாரணைக்கு வந்தன.

திருப்பரங்குன்றம்

மனுதாரர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள்:

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்த மூல மனுதாரர் ராம ரவிக்குமார் , மற்றும் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ஜெ. சாய் தீபக் ஆகியோர் காரசாரமான வாதங்களை முன்வைத்தனர்:

மதுரை மாவட்ட ஆட்சியரின் அத்தனை செயல்பாடுகளும், ‘எக்காரணத்தைக் கொண்டும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தி விடக்கூடாது’ என்ற ஒரே ஒரு விஷயத்தை மையமாக வைத்தே இருந்துள்ளன.

உத்தரவை நிறைவேற்றுவதற்கும் தேவஸ்தான (அறங்காவலர் குழு) அதிகாரிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதைச் சென்னை உயர் நீதிமன்றமும் தனது உத்தரவின் போது தெளிவாகக் கூறியுள்ளது. தேவஸ்தான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் மாவட்ட ஆட்சியருக்குக் கிடையாது.

உச்ச நீதிமன்ற உத்தரவு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் (நவம்பர் 13, 2026) திருப்பரங்குன்றம் கோயிலுக்கு 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டது. இத்தகைய உத்தரவு வரும் என எதிர்பார்த்து, அதை யார் எதிர்ப்பார்களோ அவர்களாகப் பார்த்துச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் இடம்பெற்றுள்ள கே. ரெஜினா என்பவர் இந்து மதத்தைச் சேராதவர்; மற்றொரு உறுப்பினர் இந்தத் தூணில் தீபம் ஏற்றக்கூடாது எனப் போராட்டம் நடத்தியவர். மாநில அரசு மீது வரும் தாக்குதல்களைத் தாங்குவதற்கும், இவர்கள் தோளில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கும் இக்குழு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இவர்களை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

5 முக்கியக் குற்றச்சாட்டுகள்:

  1. உச்ச நீதிமன்ற உத்தரவை ஆட்சியர் செயல்படுத்தவில்லை.

  2. தேவஸ்தான உறுப்பினர்களின் தீர்மானத்தை எதையும் சரிபார்க்காமல் ஆட்சியர் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளார்.

  3. தொல்லியல் துறையுடன் அதிகாரிகள் முழுமையாக இணைந்து செயல்படவில்லை.

  4. கோயில் ஸ்தானிகர்களிடம் (அர்ச்சகர்கள்) அறங்காவலர் குழுவின் முடிவு குறித்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.

  5. கடந்த 25-ஆம் தேதி ஆட்சியர் தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கை என்பது அனைத்தையும் மூடி மறைப்பதற்கான திட்டமிடப்பட்ட செயல். 

நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவில் அறங்காவலர்கள் சுயமாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. தீபம் ஏற்ற வேண்டிய மாலை 6 – 6.30 மணி நேரத்தைக் கடந்து, இரவு 7.30 மணிக்குத் தீர்மானம் நிறைவேற்றி, அதில் செயல் அலுவலர் கையொப்பமிட்டுள்ளார்.

மேலும், மறுநாளே சீராய்வு மனுத் தாக்கல் செய்துவிட்டு, அதையும் ஒரு காரணமாகக் காட்டி உத்தரவை மீறுவது தமிழக அரசின் தந்திரப் போக்கு. தீபத் திருநாளுக்கு முன்பே தமிழக அமைச்சர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாது எனப் பேசியுள்ளதால், அவர்களுக்கு உத்தரவைச் செயல்படுத்தும் எண்ணமே இல்லை என்பது உறுதியாகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும் என்பதாலும், டிசம்பர் 15-ஆம் தேதி வரை கார்த்திகை மாதம் நீடிப்பதாலும், தினமும் விளக்கு ஏற்றும் மரபின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் (டிசம்பர் 15-க்குள்) அந்தக் குறிப்பிட்ட தீபத்தூணில் தீபம் ஏற்ற உடனடியாக அனுமதிக்க வேண்டும் என வாதங்களை முன்வைத்தனர்.

மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த அதிரடி வாதங்கள்:

“உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், இது நிர்வாகத்துறையின் உச்சபட்ச வரம்பு மீறல் மற்றும் நிர்வாக ஆணவத்தின் வெளிப்பாடு.

அறங்காவலர்கள் அரசு நியமித்தவர்கள்; அவர்கள் மத நம்பிக்கை இல்லாதவர்கள். நவம்பர் 24-ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்குத் தொல்லியல் துறை அதிகாரிகள் தர்கா அருகில் சென்றபோது, அங்கிருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு செல்ல வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தினர். மீண்டும் 4.15 மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல் தூணை அடையவோ, ஆய்வு செய்யவோ முடியவில்லை.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்

மாலை 5 மணிக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்த தகவல் கிடைத்ததும், மலையிலிருந்து வெளியேறுமாறு காவல் கண்காணிப்பாளர் (SP) அறிவுறுத்தினார். இருப்பினும், அடுத்தகட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொல்லியல் துறையினர் மலைப்பகுதியிலேயே காத்திருந்தனர். அறநிலையத் துறையோ, பிற துறைகளோ எந்த ஏற்பாடும் செய்யாத நிலையில், இரவு 7.45 மணியளவில் ஆய்வு செய்யாமலேயே அடிவாரத்திற்குத் திரும்பினர்.

இது சாதாரண அவமதிப்பு அல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட மிகத் தீவிரமான கிரிமினல் நீதிமன்ற அவமதிப்பு. அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்பதற்கு முன்பாக, முதலில் அந்தத் தூணில் தீபம் ஏற்றி தங்களது அவமதிப்பைத் துடைக்க உத்தரவிட வேண்டும்.இனி இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட எந்த விஷயத்திலும் தலையிடக் கூடாது. உச்ச நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை அமைத்து, வெளியில் இருந்து வரும் குழுவின் கண்காணிப்பில் தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.”

தமிழக அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பு வாதங்கள்!

மதுரை மாவட்ட ஆட்சியர் (மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன்) :

“உச்ச நீதிமன்றம் வழங்கிய மூன்று நாள் கால அவகாசம் இன்றுடன் தான் நிறைவடைகிறது. அதற்குள்ளாகவே, தீபம் ஏற்றப்படாததற்கான காரணத்தைத் தெரிவிக்க முதற்கட்டப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். உச்ச நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுவேன் என்றுதான் சொன்னேனே தவிர, நானே சென்று தீபம் ஏற்றுவேன் என்று சொல்லவில்லை. தீபம் ஏற்றுவது எனது வேலை கிடையாது; எனது அதிகாரமும் அதற்குள் செல்லாது.

தொல்லியல் துறை அதிகாரிகளைத் தடுக்கவில்லை; அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றதற்கான புகைப்பட ஆதாரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். எஸ்பி தடுத்ததாகச் சொல்பவர்கள், யார் அந்த எஸ்பி, அவர் பெயர் என்ன என்பதைக் குறிப்பிடாமல் மொட்டைக் கடிதாசி போலக் குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்ட காவல் ஆணையர் / காவல்துறை தரப்பு:அன்றைய தினம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வந்தனர். சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம்.பாதுகாப்புப் பணிக்காக 24 சிறப்புக் கம்பெனி படை வீரர்கள் (1,755 பேர்), 2,400 காவலர்கள், 1,200 ஆயுதப்படை வீரர்கள், 332 ஹோம் கார்டு வீரர்கள், 61 டிஎஸ்பிக்கள், 130 இன்ஸ்பெக்டர்கள் எனப் மிகப்பெரிய படை களம் இறக்கப்பட்டது. அமைதியைச் சீர்குலைக்க முயன்ற 300-க்கும் குறைவானவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு, 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கோயில் செயல் அலுவலர் (மூத்த வழக்கறிஞர் ஜெயதீப் குப்தா):

அறங்காவலர் குழு மதரீதியில் எடுக்கும் முடிவுகளில் நிர்வாக அதிகாரி தலையிட முடியாது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் (மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி):

உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழக்கின் தகுதி அடிப்படையில் (Merit) இறுதி முடிவு எடுக்கவில்லை. இதனால், மரபுகள் மற்றும் ஆகம விதிகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளில் சில தளர்வுகளை அறநிலையத் துறையும் அறங்காவலர் குழுவும் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வழிவகை இருப்பதாகக் கருதிவிட்டோம்; ஒருவேளை புரிதலில் தவறு ஏற்பட்டிருக்கலாம்.

தர்கா நிர்வாகம் (மூத்த வழக்கறிஞர் ஹுசேஃபா அகமதி):

மலை உச்சியில் உள்ள முழுப் பகுதியும் தர்காவிற்குச் சொந்தமானது. அங்கே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது.

விசாரணையின் போது நீதிபதிகளின் குறுக்கீடுகளும் கேள்விகளும் விசாரணையின் போது நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அதிகாரிகளின் வாதங்களைக் கேட்டுக் கடும் கோபமடைந்தனர்:

நீதிபதிகள் (மாவட்ட ஆட்சியரிடம்): “எங்களது உத்தரவைச் செயல்படுத்தினீர்களா, இல்லையா? ஒரே வார்த்தையில் பதில் சொல்லுங்கள்.

ஆட்சியர் தரப்பு: “ஆம், செயல்படுத்தினோம்.”

நீதிபதிகள்: “இல்லையே! அப்படிச் செய்திருந்தீர்கள் என்றால் எதற்காக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் வரப்போகின்றன? நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா அல்லது முதலைக்கண்ணீரா என்பதை நாங்கள் விசாரித்துத் தெரிந்து கொள்கிறோம்.”

நீதிபதிகள் (தேவஸ்தானம் குறித்து): “யார் யார்தான் இந்த தேவஸ்தான உறுப்பினர்கள்? அறங்காவலர் குழு எந்த அடிப்படையில் கூடியது?

செயல் அலுவலர் தரப்பு: “அவர்களாகவே கூடினார்கள்.

நீதிபதிகள்: “இல்லை, அவர்களாகக் கூட முடியாது. அதற்கென்று ஒரு அதிகாரி முறைப்படி அழைப்பு விடுத்து, அதன்படிதான் அவர்கள் கூடி முடிவெடுக்க முடியும். உங்கள் சட்டம் அதைத்தான் சொல்கிறது.”

நீதிபதிகள் (அபிஷேக் மனு சிங்வியிடம்): “நாங்கள் அப்படியெல்லாம் எதுவுமே சொல்லவில்லை! அந்த ஒரு குறிப்பிட்ட தூணில் தற்காலிக நடவடிக்கையாகத் தீபம் ஏற்ற வேண்டும் என்றுதான் நாங்கள் சொன்னோம். அறங்காவலர்களுக்கு நாங்கள் எந்தச் சுதந்திரமும் வழங்கவில்லை. இதில் நீங்களாகப் புரிந்து கொண்டு உத்தரவை மாற்ற முயற்சிக்காதீர்கள்.”

நீதிபதிகள் (தர்கா நிர்வாகத்திடம்): “ஒரு நாளைக்கு எத்தனை பேர் தர்காவிற்கு வழிபட வருவார்கள்?

தர்கா தரப்பு: “100 முதல் 200 பேர் வருவார்கள்.”

நீதிபதிகள்: “வேறு எந்தக் காரணமும் இல்லை, தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறோம். யாராவது அரசியல் சாசனப் பிறழ்வுகளைச் செய்ய முயற்சித்தால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்; கடுமையாகத் தடுத்து நிறுத்துவோம்.”

விசாரணையின் இடையே, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் மற்றும் காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரது பெயர்களைக் கேட்டு வாங்கி நீதிபதிகள் எழுதி வைத்துக் கொண்டனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு கூடிய நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வு, மிகக் கடுமையான வார்த்தைகளுடன் தங்களது உத்தரவை வாசித்தனர்:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, எங்கள் மனதில் முதலில் தோன்றுவது ‘ஐயோ’ என்ற வார்த்தையே. மிகுந்த வேதனையோடும் மனத்துயரத்தோடும் இதனைத் தெரிவிக்கிறோம்.

இத்தகைய சூழல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது; இல்லையெனில் அது அரசியலமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்.”உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல;

அது மாநில அரசையும், அதிகாரிகளையும், மத நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும். இந்திய ஆட்சிப்பரப்பிற்குள் உள்ள அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்திற்குத் துணை நின்று செயல்பட வேண்டும் என அரசியலமைப்புப் பிரிவு 144 ஆணையிடுகிறது.

பிரிவு 129 மற்றும் 1971 நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் எவ்வித தவறான அனுதாபமும் இன்றி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் நீதித்துறையின் நீரோட்டத்தை மாசுபடுத்தும் முயற்சி சகித்துக்கொள்ளப்படாது.”மதுரை மாவட்டத்தில் ஒரு நிர்வாகச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தங்களது அரசியல் எஜமானர்களின் கட்டளைப்படி செயல்பட்டது போல் தெரிகிறது.

மாவட்ட மாஜிஸ்திரேட்டாகவும் உள்ள ஆட்சியரின் அதிகாரங்கள் விரிவானவை; அவரது கைகள் மிக நீளமானவை. ஆனால், அவர் முதலைக்கண்ணீர் வடித்து, பழியைக் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயன்றுள்ளார். ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கையை நிராகரிக்கிறோம்.”

திருப்பரங்குன்றம்

கடந்த நவம்பர் 24-ஆம் தேதி உச்சிப் பிள்ளையார் கோயிலில் எந்தத் தீபம் ஏற்றப்பட்டதோ, அந்தத் தீபத்திலிருந்து சுடரை எடுத்துக்கொண்டு போய், நாளை (நவம்பர் 28, 2026) மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள்/தடைகள் நீக்கப்படுகின்றன.

தர்காவின் அனைத்துப் பக்கங்களிலும் குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் உள்ள தீபம் ஏற்றும் இடங்கள் மற்றும் பிற இடங்களில் ஒவ்வொரு பக்தரும் விளக்கு ஏற்றவும், வழிபடவும் அனுமதிக்க வேண்டும்.

இதற்கான பாதுகாப்பை வழங்க வேண்டும். திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழுப் பகுதியையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தர்காவைப் பாதுகாக்க சி.ஆர்.பி.எஃப் படைக்கு முழு சுதந்திரம் உள்ளது. தர்காவிற்கு வரும் பக்தர்கள் தொழுகை நடத்துவதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சி.ஆர்.பி.எஃப் உறுதி செய்ய வேண்டும். மேலும், தர்கா மற்றும் கோயில் பகுதியை வேறுபடுத்தும் விதமாக அப்பகுதியில் வேலி அமைக்கலாம்.

நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த இடையூறு விளைவித்த திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு உடனடியாகக் கலைக்கப்படுகிறது (இடைநீக்கம் செய்யப்படுகிறது).

மறு உத்தரவு வரும் வரை அவர்கள் செயல்படத் தடை விதிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய தனிப் பொறுப்பாளர் (Receivers) குழு அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட 13 பேருக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது:

உச்சநீதிமன்றம்

எம். சாய் குமார் – தலைமைச் செயலாளர், தமிழ்நாடு

மகேஷ் குமார் அகர்வால் – காவல்துறை இயக்குநர் (DGP), தமிழ்நாடு

ராஜாராம் – செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை

டி.ஜி. வினய் – ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை

நிஷாந்த் கிருஷ்ணா – மாவட்ட ஆட்சியர், மதுரை

எல். தேவநாதன் – காவல் கண்காணிப்பாளர் (SP), மதுரை

ஆர். பொன் சுவாமிநாதன் – இணை ஆணையர், இந்து சமய அறநிலையத் துறை, மதுரை

ஜி. செல்வி – செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

வி. சண்முகசுந்தரம் – தலைவர், அறங்காவலர் குழு

சி. ராஜபாண்டியன் – அறங்காவலர்

கே. அழகப்பன் – அறங்காவலர்

கே. ரெஜினா தேவி – அறங்காவலர்

கே. சித்ரா – அறங்காவலர்

மேற்கண்ட 13 பேருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 3 நாட்களுக்குள் நேரில் நோட்டீஸ் வழங்கப்படுவதை தமிழகத் தலைமைச் செயலாளர் உறுதி செய்து, தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் அவர் நேரில் ஆஜராக வேண்டும்.

மேலும், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி காணொளி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டிசம்பர் 15, 2026 அன்று நடைபெறும் என அறிவித்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

BREAKING: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது!

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக்...

'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்; வேறு வழியின்றி TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்'- ஸ்டாலின்

மாவட்ட பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக்...

`21-ம் நூற்றாண்டு எட்டப்பர்கள்' Vs `மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல மாட்டோம்' திமுக – காங் வார்த்தை போர்

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பைத் தொடர்ந்து, 'தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத்...

Delimitation: `மக்களவை தொகுதிகள் சமமாக 50% உயர்வு; 2051 வரை மாற்றமில்லை'- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளைச் சரிசமமாக 50% உயர்த்தும்...