இந்தியப் பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டுக்கு வந்ததையொட்டி, பல்வேறு சலசலப்புகள் அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. முதல்வரும், பிரதமரும் பங்கேற்ற விழா மேடையில் எம்.எல்.ஏ வாக கூட இல்லாத நயினார் நாகேந்திரன் இடம்பெற்றது எப்படி என தவெக அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், முதல்வரை சந்தித்த நயினார் நாகேந்திரன் போர்த்திய பொன்னாடையும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “பிரதமர் வரும்போது மாநில முதலமைச்சர் நேரில் சென்று வரவேற்பது மரபு. அந்த ஜனநாயக மரபைத் தான் தற்போதைய முதல்வர் கடைப்பிடித்துள்ளார். அதில் அரசியல் சாயம் பூசக் கூடாது. பிரதமரும் முதலமைச்சரும் கைகளைக் கோத்து நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதே தமிழகத்தின் வளர்ச்சிக்குச் சான்றாகும். மேடையில் என்னை எப்படி அமரவைத்தாரக்ள் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. சிறப்பு விருந்தினர்களாக யாரை அழைக்கிறார்களோ, அவர்கள் கலந்துகொள்ளலாம்.
மேலும், இது நாட்டிற்கு அவசியமான பிரச்னையுமல்ல.
இதற்கு முன் பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன; அவற்றை நான் விரிவாகக் கூற விரும்பவில்லை. அப்படிப் பேசினால், முதலமைச்சர் சார்ந்தவர்களை நான் தொடர்ந்து ஒருசார்பாக விமர்சிப்பது போல் தோன்றிவிடும். எனவே, அந்த விவாதங்களை இதோடு விட்டுவிடலாம். எனவே, இதுபோன்ற விவகாரங்களில் கவனம் செலுத்துவதைவிட்டுவிட்டு, மாநிலத்தில் நிலவும் மின்தடைப் புகார்களைச் சரிசெய்யும் பணிகளில் கவனம் செலுத்தலாம். தேவையில்லாத விவாதங்களால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.

முந்தைய ஆட்சியைப் போல இந்த ஆட்சியிலும் அதிகாரிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமாகிக்கொண்டே போகிறது. தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகளைக் குறைப்போம் என்று கூறிவிட்டு, வெள்ளை அறிக்கை கூட வெளியிடவில்லை. தடைசெய்யப்பட்ட 11 மதுபான நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியதன் காரணம் என்ன?. அதேபோல, தேர்தல் வாக்குறுதிகளான ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவசச் சிலிண்டர்கள், மாணவர்களுக்கு ரூ.30,000 நிதியுதவி ஆகியவற்றை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. நான் முதலமைச்சரை நேரில் சந்தித்துச் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம்முடைய முதலமைச்சரை நாம் கௌரவிக்க வேண்டும்.
அணிவித்த பொன்னாடை குறித்து யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முதலமைச்சர் என்பவர் நமது மாநிலத்தின் தலைவர். ஒரு கட்சித் தலைவராக நான் அவருக்குரிய மரியாதையைச் செலுத்தியுள்ளேன். சந்திப்பின் போது, தமிழ் மரபுப்படி நலம் விசாரித்துக் கொண்டோம். ஒப்பந்தச் செவிலியர்கள் போராட்ட விவகாரத்தில், முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதரவு அளித்த அமைச்சர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்தவுடன் செவிலியர்களைக் கைது செய்து அராஜகம் செய்கின்றனர். தலைமைச் செயலகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் மின்தடையில் இருண்டுவிடும் நிலை உருவாகியுள்ளது” என்றார்.




