31
August, 2026

A News 365Times Venture

31
Monday
August, 2026

A News 365Times Venture

`சம்பளம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம்' – அதிமுக-வுக்கு தேர்தல் பணியாற்றிய நிறுவன ஊழியர்கள் வேதனை!

Date:

சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் மெய்நிகர் மீடியா நிறுவனம், நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரங்களை செய்து தரும் நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது. சத்யமூர்த்தி என்பவர்தான் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், அதிமுக-வின் சமூக வலைதளப் பக்கப் பிரசார பணிகளையும் இந்த நிறுவனம்தான் கவனித்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

Sathyamoorthy – Meinigar Media

முறையான புகார்கள் தந்தாலும், பொய்யான நம்பிக்கையைக் கொடுத்து மெய்நிகர் மீடியாவின் நிர்வாக இயக்குநர் தங்களை ஏமாற்றுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த மாதமே அலுவலகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிர்வாக இயக்குநர் மிரட்டியதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பிறகு காசோலை கொடுத்து தொடர்ந்து பொய் நம்பிக்கை தந்து ஏமாற்றியிருக்கிறாராம் சத்யமூர்த்தி.

ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் பேசினோம்.

நம்மிடையே பேசிய மெய்நிகர் மீடியாவின் ஊழியர் ஒருவர் , “எங்களிடம் ஆரம்பத்தில் அதிமுகவின் சோஷியல் மீடியா பிரசாரங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் பக்கங்களைக் கவனித்துக் கொள்ளும் வேலைகள் சொல்லப்பட்டன.

சத்யமூர்த்தி என்பவர்தான் மெய்நிகர் மீடியாவின் நிர்வாக இயக்குநர். கடந்த ஆண்டு இதே நேரத்திலிருந்து நடந்து முடிந்த தேர்தல் வரை நாங்கள்தான் இரவு பகலாக உழைத்தோம்.

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் வரை சம்பளம் சரியாக வந்தது. ஆனால், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் வேலைகள் உச்சத்தில் இருந்தபோது, வாடிக்கையாளர்களிடம் கம்பெனிக்கு முழு பேமெண்ட்டும் வந்து சேர்ந்துவிட்டது.

Meinigar Media
Meinigar Media

ஆனால், நிர்வாகம் அந்தப் பணத்தை ஊழியர்களுக்குக் கொடுக்கவில்லை. ‘தேர்தல் முடியட்டும், இரண்டு மாதச் சம்பளத்தையும் சேர்த்து மொத்தமாகத் தருகிறோம். இன்னும் பேமண்ட் வரவில்லை.’ என்று பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து எங்களை வேலை வாங்கினார்கள்.

ஏப்ரல் மாதத்திலேயே இது சரியாக வராது என்று சிலர் வேலையை விட்டு விலக முயன்றபோது, ‘பாதியில் சென்றால் உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடுவோம்.

வேறு எங்குமே வேலை கிடைக்காதவாறு செய்துவிடுவோம்’ என்று நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, நிறுவனத்தின் நிதி பங்குதாரர் பிரசன்னா, சி.இ.ஓ கரிஷ்மா மற்றும் ராம்ஜி ஆகியோர் நேரடியாக மிரட்டினார்கள். ஊழியர்களுக்குச் சேர வேண்டிய 4 மாதச் சம்பளம் நிலுவையில் இருந்த நிலையிலும், இடைவிடாமல் சினிமா விளம்பர வேலைகளையும் எங்களை வைத்து வாங்குவதை நிறுத்தவில்லை.

சமீபத்தில் வெளிவந்த ‘அந்தாரன்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளை நாங்கள்தான் செய்தோம். ஜூலை மாதத்தில் சம்பளப் பிரச்சனை தீவிரமடைந்தபோது, காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

பின்னர், நிர்வாகம் அதைச் சமாளிப்பதற்காக எங்களுக்குக் காசோலைகளை வழங்கினார்கள். ஆகஸ்ட் 10 மற்றும் 25 தேதியிட்ட காசோலைகளை வழங்கினார்கள். ஆனால், வங்கிக்குப் போகும் முன்பே ‘வங்கிக் கணக்கில் பணமில்லை, செக்கைப் போடாதீர்கள், பணமாகத் தருகிறோம்’ எனக் கூறி ₹2,000, ₹3,000 எனச் சில்றையாகக் கொடுத்து ஏமாற்றி வந்தார்கள்.

கடைசியாக, ஆகஸ்ட் 28-ஆம் தேதி அனைவரும் அலுவலகத்திற்கு வாருங்கள், செட்டில் செய்கிறோம் என்றார்கள். நாங்கள் 28-ஆம் தேதியிலிருந்து 3 நாட்களாக அலுவலகத்திலேயே காத்திருந்தோம்.

மெய்நிகர் மீடியா ஊழியர்கள்
மெய்நிகர் மீடியா ஊழியர்கள்

குளிக்காமல், பசியோடு இருந்தோம். இத்தனைக்கும் சத்தியமூர்த்திக்கு உடம்பு சரியில்லை என்றதும், நாங்களே பணம் திரட்டி அவருக்கு உணவும் வாங்கிக் கொடுத்தோம்.

ஆனால், அந்த இடைவெளியில் அவர் தனக்கு ஆதரவானவர்களைத் தொடர்புகொண்டு, ‘ஊழியர்கள் என்னை வீட்டுக்காவலில் வைத்து கொலை செய்யப் பார்க்கிறார்கள்’ எனப் பொய்யான குரல் பதிவு மெசேஜை அனுப்பியுள்ளார்.

நேற்று மாலை அவரது ஆதரவாளர்கள், வழக்கறிஞர் மற்றும் காவல் துறையுடன் வந்து அவரை மீட்டுச் சென்றனர். அவரை தேனாம்பேட்டை ‘E3’ காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த காவல் நிலையத்தில் நாங்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று புகார் அளித்தும், நிர்வாகத் தரப்பிற்குச் சாதகமாகவே காவல்துறையினர் நடந்துகொண்டனர்.

சத்தியமூர்த்தியை ஏசி அறையில் அமர வைத்து, தொலைபேசி பயன்படுத்த அனுமதித்தனர். எங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தினார்கள். பிறகு, சத்யமூர்த்தி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 1 மணி நேரத்தில் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

நாங்கள் நள்ளிரவு 2 மணி வரை காவல் நிலைய வாசலில் நின்றபோது, ‘இங்கிருந்து கிளம்பாவிட்டால் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம்’ என எங்களைத்தான் மிரட்டினார்கள்.

இன்னொரு பக்கம், எங்களுடைய க்ளைண்ட் ‘பிரமாணியா’ நிறுவனத்திடம் விசாரித்தபோது, ‘ஜிஎஸ்டி தொகையான ₹36 லட்சம் உட்பட மொத்தம் ₹70 லட்சத்திற்கும் அதிகமாகச் சத்தியமூர்த்திக்குக் கொடுத்துவிட்டோம்’ என ஆதாரங்களைக் காட்டுகிறார்கள். சத்தியமூர்த்தி அந்த ஜிஎஸ்டி தொகையைக் கட்டாததால், அபராதத்துடன் சேர்த்து ₹40 லட்சத்தைப் பிராமணியா நிறுவனமே செலுத்தியுள்ளது.

மெய்நிகர் மீடியா ஊழியர்கள்
மெய்நிகர் மீடியா ஊழியர்கள்

தற்போது பிராமணியா நிறுவனம், ‘ஊழியர்களுக்கான சம்பளத்தைத் தர நாங்கள் தயார், ஆனால் சத்தியமூர்த்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்’ என்கிறது. ஆனால், தான் கையாடல் செய்த பணம் வெளியாகிவிடும் என்ற பயத்தில் சத்தியமூர்த்தி அதைச் செய்யாமல் தட்டிக்கழிக்கிறார்.

நான்கு மாதங்களாகச் சம்பளம் இல்லாததால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். நேர்மையாக உழைத்த எங்களுக்குச் சேர வேண்டிய ஊதியமும் கிடைக்காமல் தவிக்கிறோம்.” என்றார் வருத்தத்துடன்.

ஊழியர்கள் புகாரளித்தும் சத்யமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து தேனாம்பேட்டை ‘E3’ காவல் நிலையத்தில் விளக்கம் கேட்டோம். அதற்கு, “நீங்கள் சொல்வது போல் ஊழியர்களிடம் கூறியிருக்க மாட்டார்கள்.

இன்று சென்னை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணியன் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதால், அங்கு முக்கியப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனால் உதவி ஆணையர் மற்றும் துணை ஆணையர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் தற்சமயம் அங்குப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் அளித்த மனு குறித்து ஏற்கனவே இங்கு விசாரித்து வருகிறார்.

பாதுகாப்புப் பணிகளை முடித்துக் கொண்டு அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொன்றாகக் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

E3 Teynampet Station
E3 Teynampet Station

அவர்கள் வந்தவுடன், புகார் அளித்தவர் மற்றும் எதிர்த்தரப்பு ஆகிய இரண்டு தரப்பினரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்துவார்கள். இதில் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை.

மேலும், வழக்கத்திற்கு மாறான நேரத்தில் யாரையும் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்பது விதிமுறை. ஒருவேளை நாங்கள் யாரையேனும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தால் கூட, ஆணையர் அளவிலான உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்காகவே அவர்களை அனுப்பி வைத்தோம். மற்றபடி அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தும் நம்மிடம் உள்ளதால், விசாரணைக்கு அழைத்துக் கொள்ளலாம் என்றுதான் அவர்களை அனுப்பியுள்ளோம்.

எனவே, இதை ஒரு பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டாம். புகாரளித்தவர்களின் ஆதங்கமும் வேதனையும் எங்களுக்கு புரிகிறது.” என முடித்துகொண்டனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Nepal Flood : '84 தமிழர்களை காணவில்லை' – நேபாள வெள்ளம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதற்கிடையே நேபாள...

'அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்'- எதிர்க்கட்சி வரிசையில் தாரகை; மாணிக்கம் தாகூர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின்...

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு:“அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது"- அரசு பதில்

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த...

பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் ரொக்கப் பணம் பற்றி தெரிவிக்க வேண்டும்! கலெக்டர் உத்தரவின் காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள அலுவலர்கள் மற்றும்...