மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றுக் காலத்திற்கு முன்பு 135 கிலோ எடை இருந்தார். ஆனால் இப்போது அவரது எடை 89 கிலோவாகக் குறைந்து இருக்கிறது. எப்படி இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்தார் என்பது குறித்து பாலிவுட் இயக்குனர் பரா கானின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நிதின் கட்கரி தனது ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது பேட்டியில், ”இரவில் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் காலையில் 7 மணிக்கு எழுந்துவிடுவேன். அதிக பணிச்சுமை இருந்தாலும் காலையில் தினமும் 2.30 மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறேன்.
உடற்பயிற்சி என்பது அவ்வப்போது செய்யப்படும் ஒரு செயலாக இல்லாமல், தற்போது எனது அன்றாட வழக்கத்தின் முக்கியப் பகுதியாக மாறிவிட்டது. எனது முந்தைய வாழ்க்கை முறை திட்டமிடப்படாததாகவும் ஒழுக்கமற்றதாகவும் இருந்ததது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உடல்நலம் குறித்த எனது அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது.
உடல் எடை குறைப்பு வெறும் தோற்றத்தை மாற்றியமைக்கும் விஷயமாக மட்டும் பார்க்காமல், ஆரோக்கியம் குறித்த எனது ஒட்டுமொத்த அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமாகப் பார்க்கிறேன்.
எனக்கு நெருக்கமான நண்பர்களை கொரோனா காலத்தில் இழந்த பிறகு, பெருந்தொற்று காலம் தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு கட்டத்தில் எனது உடல் எடை சுமார் 135 கிலோவாக அதிகரித்தது. தற்போது எடை சுமார் 89 கிலோவாக உள்ளது.
இந்த மாற்றம் பெருந்தொற்றுக்குப் பிந்தைய வாழ்க்கை முறை மாற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற விருப்பத்தால் மட்டும் இந்த மாற்றம் ஏற்படவில்லை.
மாறாக, கோவிட் பெருந்தொற்று மற்றும் அக்காலகட்டத்தில் நான் சந்தித்த தனிப்பட்ட இழப்புகளுக்குப் பிறகு எனது முன்னுரிமைகள் மாறிவிட்டது”என்றார்.

அனைவருக்கும் பொருந்துமா?
இது குறித்து உடற்பயிற்சி நிபுணர்களிடம் பேசியபோது, உணவுப் பழக்கவழக்கங்கள், தூக்கம், மன அழுத்தம், உடல்நலப் பிரச்னைகள், மருந்துகள் மற்றும் ஒட்டுமொத்த கலோரி நுகர்வு ஆகியவை உடல் எடையைப் பாதிக்கக்கூடியவை. எனவே, 46 கிலோ எடையைக் குறைப்பதற்கான ஒரு பொதுவான வழிமுறையாக கட்கரியின் தனிப்பட்ட நடைமுறையைக் கருதக்கூடாது. தினமும் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் ஏற்றதாகவோ அல்லது அவசியமானதாகவோ இருக்காது.
குறிப்பாக உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கோ அல்லது உடற்பயிற்சி செய்ய புதிதாகத் தொடங்கியவர்களுக்கோ இது பொருந்தாது. குறிப்பிடத்தக்க அளவு உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், ஒரு நிபுணருடன் தகுந்த உடற்பயிற்சித் திட்டம் குறித்து கலந்தாலோசித்து, படிப்படியாகத் தங்கள் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது சிறந்தது. உடல் எடையைக் குறைக்கத் தேவைப்படும் உடற்பயிற்சியின் அளவு ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்” என்று தெரிவித்தனர்.




