24
July, 2026

A News 365Times Venture

24
Friday
July, 2026

A News 365Times Venture

தூத்துக்குடி இளைஞர் லாக்கப் மரணம்: "பதவி மமதை கண்ணை மறைக்கிறதா முதல்வரே?" – சீமான் கண்டனம்

Date:

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் அருணாச்சலம் (24) தலையில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (ஜூலை 23) உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்தச் சம்பவத்தில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அருணாச்சலம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தூத்துக்குடி, தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இறப்பதற்கு முன்பு, மரண வாக்குமூலமாகத் தான் தாக்கப்பட்டது குறித்து அருணாச்சலம் கூறும் காணொளி நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது.

சிறைக்குள் சபரிவர்மன் எனும் சிறைவாசி அடித்துக் கொல்லப்பட்ட ரணத்தின் சுவடு மறைவதற்குள்ளாகவே, அருணாச்சலம் எனும் விசாரணை சிறைவாசி காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

மூன்று மாதத்தைக்கூட நிறைவுசெய்யாத தவெகவின் ஆட்சியில் நான்கு சிறைவாசிகளின் காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பது மாநில அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. முந்தைய திமுகவின் ஆட்சியில், காவல்துறை மரணங்களின்போது ஆளும் வர்க்கத்துக்கு எதிராகச் சீறிய இன்றைய முதல்வரான விஜய் அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் காவல்நிலைய மரணங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவோ செய்யாதிருப்பது அதிகாரத்திமிரின்றி வேறென்ன?

இது வாக்குச் செலுத்தி, ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யப்படும் சனநாயகத் துரோகமில்லையா? தன்னுடைய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் நிறுத்தி வைத்த முதல்வர் விஜய் அவர்களுக்கு, அநியாயமாய் போன ஒரு உயிருக்கான நீதியைப் பெற்றுத்தர மனமில்லையா?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

ஆட்சியதிகாரமும், பதவி மமதையும் கண்ணை மறைக்கிறதா முதல்வரே? ஏழை எளிய மக்களின் அழுகுரல்களும், ஒப்பாரியும், ஓலமும் உங்கள் செவிகளுக்கு வந்து சேரவில்லையா? திமுகவின் ஆட்சியில் காவல்நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குக்கூட நீதியைப் பெற்றுத் தருவதாகத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிவிட்டு, உங்களது ஆட்சியில் பறிபோன உயிருக்கான நீதியைப் பெற்றுத் தராது, குற்றவாளிகளைக் காப்பாற்றுவதுதான் மிக இழிவான செயல் இல்லையா? ஆளும் தவெக அரசின் இத்தகையப் போக்கு ஒருபோதும் ஏற்புடையதில்லை. இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எப்பேர்ப்பட்ட குற்றவாளியாக, கொலையாளியாக இருந்தாலும் அரிதினும் அரிதான வழக்குகளுக்கே மரணத்தைத் தண்டனையாக நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அப்படியிருக்க, காவல்துறை எதேச்சதிகாரப்போக்கோடு குற்றஞ்சாட்டப்பட்டவரின் மீது கோரத் தாக்குதல் தொடுத்து, அடித்தே கொன்று, மரணிக்கச் செய்வதை ஒருநாளும் ஏற்க முடியாது.

நாதக தலைவர் சீமான்
நாதக தலைவர் சீமான்

எந்தக் குற்றமிழைத்தவராயினும் அவருக்கான தண்டனையை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுத் தர வேண்டுமே ஒழிய, காவல்துறையினரே குற்றஞ்சாட்டப்பட்டவரின் கை, கால்களை உடைப்பதும், உயிரைப் போக்குவதுமான கொடுஞ்செயல்கள் குடிமைச்சமூகத்தில் நிகழக்கூடாத அவலம்! ஆகவே, காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறைவாசி அருணாச்சலம் மரணத்தைக் கொலைவழக்காகப் பதிவுசெய்து, அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்” என்று சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பெரம்பூர்: பிரசித்தி பெற்ற கோயில் எதிரே இயங்கும் டாஸ்மாக்; பட்டியல் `717'-லிருந்து தப்பியது எப்படி?

`பள்ளிக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே அமைந்திருக்கும் மதுபானக் கடைகள்...

களம் : தில்லி அதிரும் போராட்டங்கள் – 'ஜென் ஜி தலைமுறையின் இன்னொரு முகம்' | இரா.சிந்தன்

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள்...

CJP Protest: `2 கோரிக்கைகள் ஏற்பு; நாளையும் தொடரும் பேச்சுவார்த்தை!' – ஜே.பி.நட்டா

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் காக்ரோச் ஜனதா...

தேவையான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லை; வினாத்தாள் கசிவு விசாரிக்க விரைவு நீதிமன்றம்? – சிதம்பரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளதாக...