கத்தாரில் உள்ள ஒரு மாபெரும் எரிவாயு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில், 12 இந்தியர்கள் உட்பட 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 66 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான ‘ராஸ் லஃப்பான்’ (Ras Laffan) தொழிற்துறை நகரில் உள்ள பர்சான் கேஸ் சப்ளை ஆலையில்தான் இந்தத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில், வழக்கம்போல ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக, இந்த ஆலையின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அதன்பின்னர், மீண்டும் பணிகளைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத விதமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என்பதையும், ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதையும் கத்தார் நாட்டின் எரிசக்தித் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்த 66 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர்களுடைய உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து எந்தவொரு சதிவேலையோ அல்லது திட்டமிட்ட தாக்குதலோ அல்ல என்றும், முற்றிலும் எதிர்பாராமல் நடந்த ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இந்தியத் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் அதிகாரிகள், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தாயகம் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




