புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆனால் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. இந்த நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு அனுப்பிய வீடியோ பதிவில், “பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று, தங்கள் மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்கள், நிதி போன்றவை குறித்து தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
மிக முக்கியமான இந்த கூட்டத்தில் புதுச்சேரிக்கு தேவையான மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுவையை இணைப்பது, மாநிலத்தின் கடன்களை தள்ளுபடி செய்வது, சிறப்பு நிதி வழங்குவது போன்ற கோரிக்கைகளை முதலமைச்சர் ரங்கசாமி வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம். என்.ஆர்.காங்கிரஸுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே நிலவும் விரிசலால் முதல்வர் ரங்கசாமி டெல்லிக்கு செல்லவில்லையா? பிரதமர் தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளாரா என தெரியவில்லை. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பேச வேண்டிய சிறந்த வாய்ப்பை முதல்வர் ரங்கசாமி இழந்துவிட்டார்.
அதன்மூலம் புதுவை மாநில வளர்ச்சிக்கு ரங்கசாமி மிகப்பெரும் துரோகம் இழைத்துள்ளார். ரங்கசாமி கட்சி தொடங்கியது முதல் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறி வருகிறார். ஆனால் மத்தியில் உள்ள மோடி அரசு அவர் கோரிக்கையை நிராகரித்துள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அழுத்தம் கொடுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முயற்சி செய்திருக்கலாம். முதலமைச்சர் ரங்கசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தால் பிரதமர் பதில் கூறியிருப்பார். நல்ல வாய்ப்பை ரங்கசாமி தவறவிட்டுள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. பா.ஜ.க-வை புறக்கணிக்கவும், தனது எதிர்ப்பைக் காட்டவும், இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருக்கிறார் ரங்கசாமி.
ஆனால் இந்த நிதி ஆயோக் கூட்டம் எதிர்ப்பை பதிவு செய்யும் கூட்டம் அல்ல. மாநிலத்தின் பிரச்னைகளை எழுப்ப வேண்டிய கூட்டம். புதுவை மக்கள் மத்தியில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததற்கு பகிரங்கமாக ரங்கசாமி மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஒரு கூட்டத்துக்கும் ரங்கசாமி செல்வதில்லை. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு ரங்கசாமி உறுதுணையாக இல்லை. அதை புதுச்சேரி மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி ஆரம்பத்திலேயே மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. முதல்வர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது உண்மையில் கண்டனத்துக்குரியது” என்று பேசியிருக்கிறார்.




