தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “தமிழ்நாடு எதிர்காலத்திற்காகக் காத்திருக்கவில்லை; நாங்களே அதை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். Single-window approvals, அதிவேகக் அனுமதிகள் முதல் AI cities, Space economy வரை, கண்டுபிடிப்புகளும் செயல்பாடுகளும் ஒன்றிணையும் ஒரு சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பைத் தமிழ்நாடு உருவாக்கி வருகிறது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழ்நாட்டை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் அதிகார மையமாக மாற்றுவதற்கு நாங்கள் உறுதியுடன் உள்ளோம். எதிர்காலம் இங்கேதான் உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்” என அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த ரீல்ஸ் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயல் தலைவரும், ஆந்திர பிரதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்பிற்குரிய கீர்த்தனா காரு, முதலீட்டாளர்களை நோக்கிய உங்களது இந்தச் செயலூக்கமான அணுகுமுறையைப் பாராட்டுகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு தொழில் துறை அமைச்சரும் தங்களது மாநிலத்தைத் தீவிரமாகச் சந்தைப்படுத்தவும், முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவும், வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது.

மாநிலங்கள் தங்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சிச் சக்கரத்தை வேகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பலமுறை ஊக்குவித்துள்ளார். நிச்சயமாக, ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாட்டிற்கு ஒரு ஆரோக்கியமான போட்டியை வழங்கும்!
மேலும், தேவையில்லாத சத்தங்களைப் புறக்கணியுங்கள் – இணையப் பக்க ட்ரோல்கள் (Trolls) வேலைவாய்ப்புகளை உருவாக்காது, முதலீடுகள் மட்டுமே உருவாக்கும்!” என்று அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார்.




