29
May, 2026

A News 365Times Venture

29
Friday
May, 2026

A News 365Times Venture

சரிவை நோக்கி மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம்? – போர்க்கொடி தூக்கும் மூத்த தலைவர்கள்!

Date:

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி சந்தித்த எதிர்பாராத தோல்வி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் அடங்கிக்கிடந்த அதிருப்தியை வெளிக்கொண்டுவந்திருக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சுகேந்து சேகர் ராய், மம்தா பானர்ஜிக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்னும் சில நாட்களில் முழுமையாக அழியப்போகிறது. தேசிய அரசியலிலும் கட்சி தன் நம்பிக்கையை இழந்துவிட்டதால், இனி எந்தவொரு கட்சியும் கூட்டணி வைக்கப் போவதில்லை.

மம்தா பானர்ஜி

ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு. குற்றவாளிகளைக் காப்பாற்றத் திரைமறைவில் தெளிவான முயற்சிகள் நடந்தன. அதற்கு காவல்துறையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த விவகாரத்தில் மக்கள் கொதித்தெழுந்தபோதே, பொதுமக்களின் செல்வாக்கை நாம் இழந்துவிட்டோம் என்பது எனக்குப் புரிந்தது. ஆனால், கட்சித் தலைமை அதை உணராமல் கண்மூடித்தனமாக இருந்தது. கட்சித் தலைவர்கள் சிலர் சேர்த்துள்ள ஊழல் பணம், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மலைபோல் குவிந்துள்ளது.

அதைத் தடுத்து நிறுத்த மம்தா பானர்ஜி தவறிவிட்டார். இதுமட்டுமன்றி, மும்மத நல்லிணக்கம் பேச வேண்டிய மம்தா, இந்து மதத்தை விமர்சித்ததும், குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்துப் பேசியதும் பெரும் தவறு. இது நம் அரசியல் கோட்பாட்டிற்கே எதிரானது. இந்தத் தோல்விக்கு அடிமட்டத் தொண்டர்கள் முதல் டெல்லி வரை இருக்கும் உச்சக்கட்டத் தலைமை வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். திரிணாமுல் காங்கிரஸின் இந்தத் தரைமட்ட வீழ்ச்சிக்கு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் I-PAC நிறுவனமே முக்கியக் காரணம் என்ற குமுறலும் கட்சிக்குள் பலமாக ஒலித்து வருகிறது.

சுகேந்து சேகர் ராய்
சுகேந்து சேகர் ராய்

மம்தாவின் மருமகனும், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவருமான எம்.பி அபிஷேக் பானர்ஜியின் சிபாரிசின் பேரில்தான், கடந்த 2018-ல் ஐபேக் நிறுவனம் கட்சியின் பிரச்சாரங்களை வழிநடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது மூத்த தலைவர்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டாலும், 2021 தேர்தலில் கட்சி பெற்ற இமாலய வெற்றி மூத்தவர்களின் வாயை அடைத்தது.

ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கட்சியை வேரோடு அழிப்பதற்காகவே ஐபேக் நிறுவனத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறார்கள். தலைமைகளின் தலைக்கனம், பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சிப் பதவிகளை விற்பனை செய்தது என ஐபேக் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, மம்தா பானர்ஜியை யாரும் எளிதில் சந்திக்க முடியாதபடி, அவரைச் சுற்றி ஒரு பெரும் சுவரை எழுப்பித் தனிமைப்படுத்தியதே இந்த ஐபேக் நிறுவனம்தான் என்று தலைவர்கள் குமுறுகின்றனர்.” என்றார்.

இதற்கிடையில் கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகிய எம்.பி ககோலி கோஷ், தனது ராஜினாமா கடிதத்தில், “கட்சியின் பாரம்பரியத்திற்குச் சற்றும் தொடர்பில்லாத, வெளிப்படைத்தன்மையற்ற ஒரு வெளி நிறுவனத்தின் (I-PAC) ஆதிக்கம், கட்சியின் ஜனநாயக அமைப்பையே குலைத்துவிட்டது. ரேஷன் விநியோகம், ஆசிரியர் நியமனம் ஆகியவற்றில் நடந்த ஊழல்களும், பெண் மருத்துவர் கொலை வழக்கை மூடிமறைக்க நடந்த முயற்சிகளும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தலைவராக என் மனசாட்சி உறுத்தியதால்தான் நான் பதவிகளை ராஜினாமா செய்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி
மம்தா பானர்ஜி – அபிஷேக் பானர்ஜி

முன்னாள் அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி, “கட்சியில் நடந்த அத்தனை ஊழல்களையும் மம்தா பானர்ஜி கண்டும் காணாமல் கண்மூடி வேடிக்கை பார்த்தார். இந்த படுதோல்விக்கு மம்தாவும், அபிஷேக் பானர்ஜியும்தான் முழுப் பொறுப்பு. கட்சி இப்போது மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டு நிற்கிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சிக்குள்ளேயே மம்தாவுக்கு எதிராகத் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது திரிணாமுல் காங்கிரஸை நிலைகுலையச் செய்துள்ளது. இதையடுத்து, தங்களைப் பகிரங்கமாக விமர்சிக்கும் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை கட்சித் தலைமை அமைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா கட்சியை விட்டு 6 ஆண்டுகளுக்கு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தாவின் அரசியல் சாம்ராஜ்யம் சரிவை நோக்கிச் செல்வதைத்தான் இந்த உட்கட்சி மோதல்கள் காட்டுகின்றன என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருச்செந்தூர்: `சுவாமி தரிசனமா, ரூ.4,000 ஜிபே.!' – அமைச்சரிடமே வசூல் வேட்டை நடத்திய அர்ச்சகர்கள்!

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர், அருள்மிகு...

அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்: “ட்ரோல்களைக் கண்டுக்கொள்ளாதீர்கள்" – தெலங்கானா அமைச்சர் ஆதரவுக் குரல்

தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்...

'புதிய தலைமுறை' சேனல் நிறுத்தம்: "கரூர் துயரத்தின்போது ஓட்டம் பிடித்தவர்தானே விஜய்" – அதிமுக கண்டனம்

நேற்று அரசு கேபிள் டிவி சேவையில் 'புதிய தலைமுறை' சேனல் இருட்டடிப்பு...

காங்கிரஸ் நிர்வாகி மீது தாக்குதல்: "திமுகவின் ரவுடித்தனம் தோற்கடிக்கப்பட வேண்டும்"- மாணிக்கம் தாகூர்

தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜை நேற்று இரவு திமுக ஆதரவாளர்கள் கொடூரமாகத்...