13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

சர்ச், பள்ளி, டாஸ்மாக் மூணும் அடுத்தடுத்து.! 'எப்ப சார் கடையை மூடுவீங்க?' கேட்பது பெரம்பூர் மக்கள்!

Date:

“பள்ளிகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்துக்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும்” என தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதும் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், அரசாணை வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், முதலமைச்சரின் சொந்தத் தொகுதியிலேயே இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“சாயங்காலம் ஆனால் குடித்துவிட்டுக் கூட்டமாக வந்து, தேவாலய வாசலிலும் பள்ளிக்கூடத்துக்குப் போகும் பாதையிலும் நிதானமின்றி நிற்கிறார்கள். அந்தப் பாதையைக் கடக்கும் பொதுமக்களும் பெண்களும் அச்சத்துடனே கடந்து செல்கிறார்கள்” என்று சென்னை பெரம்பூர் தொகுதிக்குள் வரும் கொடுங்கையூரிலிருந்து ஒரு ஆதங்கக் குரல் நம் அலுவலகத்தை அடைந்தது.

புகார்தாரர் குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட கடை இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்த்தோம். மூலக்கடை மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூருக்குள் செல்லும் சாலை முடிவடையும் இடத்தில் வலதுபுறம் திரும்பினால், நான்கைந்து கடைகள் தாண்டி எண் 18, காமராஜர் நகர், கொடுங்கையூர் என்ற விலாசத்தில் அந்த இரண்டாம் எண் டாஸ்மாக் கடை இருக்கிறது.

அக்கடையிலிருந்து மேலும் நான்கு கட்டடங்கள் கடந்தால், ஒரு தேவாலயமும் அதன் எதிரே விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளியும் இருக்கின்றன.

CM Vijay

டாஸ்மாக் கடை வாசலில் இருந்து பார்த்தாலே தேவாலயமும் பள்ளியும் கண்ணில் படுகின்றன.

“உடனடியாக அகற்றப்படும் என்று சொன்ன அந்த 717 கடைகளில் இந்தக் கடை இல்லையா?” என அக்கம்பக்கத்தினரிடம் கேட்டோம்.

“அதெல்லாம் செய்தியில தான் பார்த்தோம். இந்த கடை அந்த பட்டியலில் இருக்கானு நாங்க எப்படி தெரிஞ்சிக்கிறது?

இந்தக் கடையில் தினமும் பன்னிரண்டு மணி ஆனாலே குடிக்கக் கூட்டம் கூடிவிடும். சாயங்காலம் கேட்கவே தேவையில்லை. முதலமைச்சர் அறிவிப்பு வந்தபோது, ‘அப்பாடா, ஒருவழியாக இந்தத் தொல்லை ஒழிந்தது’ என்று நினைத்தோம். ஆனால், நேற்றும் கடை இருந்தது. இன்றும் இருக்கும். கடை காலியாகும் அறிகுறியே தெரியவில்லை.

தேவாலயம் சாயங்கால நேரத்தில் பூட்டியிருந்தால், சில குடிமகன்கள் குடித்துவிட்டு அதன் வாசலிலேயே போய்ப் படுத்துக்கொள்கிறார்கள். பள்ளிகளைப் பொறுத்தவரை இப்போது விடுமுறை. ஆனால், பள்ளி நாட்களில் பள்ளி முடிந்து இந்த வழியாகத் தனியாகச் செல்லும் மாணவிகளும், குழந்தைகளின் தாய்மார்களும் ஒருவித பயத்துடனேயே இந்தப் பகுதியைக் கடந்து செல்கிறார்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு அடுத்த வாரம் பள்ளி திறக்க இருக்கிறது. அதற்குள்ளாவது இந்தக் கடை மூடப்பட்டால் மிகவும் நிம்மதியாக இருக்கும்” என்கிறார் டாஸ்மாக் கடைக்கு இரண்டு கடை தள்ளி காய்கறி வியாபாரம் செய்யும் நபர் ஒருவர்.

tasmac

தேவாலயம் எதிரே இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் இருந்த சில ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசியபோது,

“இந்தக் கடை உடனடியாக மூடப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம். முதலமைச்சரின் தொகுதி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் என்று எண்ணினோம். பட்டியலிடப்பட்ட 717 கடைகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நம்பினோம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

இப்போது மக்களிடம் இன்னொரு சந்தேகமும் எழுகிறது. முதல்வரின் சொந்தத் தொகுதியிலேயே அரசு உத்தரவு காற்றில் பறக்கும்போது, மற்ற இடங்களில் ஒழுங்காக அமல்படுத்தப்பட்டிருக்கும் என்று எப்படி நம்புவது? ” என்றார்கள் அவர்கள்.

டாஸ்மாக் ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.

“புதிய அரசு பொறுப்பேற்றதும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் புதியவர்கள் என்பதால், அதிகாரிகள் யதார்த்தத்தை அவர்களுக்கு புரியவைத்து, அவகாசம் கேட்டு சற்று பொறுமையாகச் செயல்பட்டிருக்கலாம். சென்னையில் ஒரு சுற்று வாருங்கள், இதுபோன்று இன்னும் நிறையக் கடைகள் பள்ளி, கோயில் அருகில் இருக்கும்.

அந்த 717 கடைகள் எவை என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் டாஸ்மாக் உயர் அதிகாரிகள்தான். குறிப்பிட்ட இந்த கடை இருக்கா என்றும் அவர்கள் தான் சொல்ல வேண்டும்” என்கின்றனர் அவர்கள்.

சம்பந்தப்பட்ட அந்த இரண்டாம் நம்பர் கடையின் விற்பனையாளரிடமே பேசினோம்.

”முந்தைய ஆட்சியில் பள்ளி, ஆலயங்களில் இருந்து 50 மீட்டருக்குள் மதுபானக் கடைகள் இருக்க கூடாதுனு இருந்தது. இந்தக் கடை சர்ச், அந்தப் பள்ளி ரெண்டுல இருந்தும் 65 மீட்டர் தூரத்துல இருக்கு.

புது அரசு வந்ததும் 50 மீட்டரை 500 மீட்டர்னு மாத்தினாங்க. ஆனா அப்படி மாத்திட்டு லிஸ்ட் பண்ணின 717 கடைகளில் இந்தக் கடை வரவில்லை. அதுக்கான காரணத்தை நீங்க அதிகாரிகள் மட்டத்துலதான் கேக்கணும். வேறு இடம் பார்த்து கடையை மாத்தச் சொல்லி உத்தரவு வந்துட்டா நாங்க மாத்த தயாரா இருக்கோம்’ என்றார் அவர்.

TASMAC

மெயின் ரோட்டில் இருந்து உள்ளே தள்ளி மேற்படி டாஸ்மாக் கடைக்கு எதிர் தெருவில் வசித்து வரும் வியாபாரி முத்து இருளாண்டியிடம் பேசிய போது,

”முதல்ல அகற்றுனதாச் சொன்ன 717 கடைகளின் பட்டியலை தொகுதி வாரியாக அரசு வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டாதான் உண்மையிலேயே இந்த மாதிரி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குன்னு மக்களுக்கு நம்பிகை வரும். ஏன்னா இதுக்கு முந்தைய அரசுகள் பதவி ஏற்ற போதும் இந்த மாதிரி அறிவிப்புகள் வந்திருக்கு. ஆனா ரோட்டுல இறங்கி நடந்தா டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை கூடுன மாதிரிதான் தெரியுது.

இந்த விஷயத்துல டாஸ்மாக் அதிகாரிகள் அரசை ஏமாத்துறாங்களோனு நினைக்கத் தோணுது.

முதல்வர் ரொம்ப உஷாரா இருக்கணும். ஏன்னா சாதாரணமா இந்த ரோட்டைக் கடந்து போறவங்க சர்ச்சையும் பள்ளிக் கூடத்தையும் பார்த்துட்டு, டாஸ்மாக் கடையையும் ஒரு தடவை திரும்பி பார்த்துட்டு ‘இது பெரம்பூர் தொகுதிதானங்க, இங்கேயே இதுதான் நிலைமையா’னு கேட்டுட்டுப் போறாங்க’ என்றார்.

இரண்டு திராவிடக் கட்சிகளின் அறுபதாண்டு அரசியலை வீழ்த்தி ஆட்சிக்கு வந்திருக்கிற முதல்வர் விஜய் காதுகளுக்கு ‘ஹலோ சி.எம். சாரா எப்ப சார் கடையை மூடுவீங்க’ என வடிவேலு பாணியில் அவரது சொந்த தொகுதி மக்கள் கேட்பது எட்டுமா?

அது மட்டும் அல்ல, இந்த மக்கள் வைக்கும் கோரிக்கை போல, மூடப்படுவதாக சொன்ன 717 கடைகளின் பட்டியலை தொகுதி வாரியாக வெளியிட வேண்டும். அப்போது தான் அந்த கடை உண்மையில் மூடப்பட்டதா என்பதை மக்களும் சரிபார்த்துக்கொள்வார்கள். வெளிப்படையான நிர்வாகத்துக்கு இதுவும் முக்கியம் தானே.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"GDP-யில் 17% உழைப்பு இல்லத்தரசிகளுடையது; அவர்களின் உத்தேச வருமானம் ரூ.30,000" – உச்ச நீதிமன்றம்

இல்லத்தரசிகள் அல்லது குடும்பத் தலைவிகள் என்பவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் மட்டுமல்ல,...

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது...

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" – தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர்...

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" – உதயநிதி சாடல்

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க...