சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில,” என் கணவர் மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். என் கணவர் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இதற்காக கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக என் கணவருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் இல்லாமல் 21 நாட்கள் சாதாரண பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன்.
என் மனுவை சிறை கண்காணிப்பாளர் நிராகரித்து உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்து, எனது கணவருக்கு 21 நாட்கள் பரோல் விடுமுறை வழங்க உத்தரவிட வேண்டும் ” என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சிறைத்துறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த மனுவில், ‘‘மனுதாரர் அவரது கணவருக்கு விடுப்பு கேட்ட காரணம் உண்மையானது. அதே சமயத்தில் ‘அவரை விடுவித்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே விடுப்பு வழங்கக் கூடாது’ என நன்னடத்தை அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். கைதிக்கு பரோல் வழங்கினால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதோடு, கைதிக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, விடுப்பு வழங்கக் கூடாது என திருப்பாச்சேத்தி காவல் ஆய்வாளர் கூறியுள்ளார். இவர்களின் அறிக்கை அடிப்படையில் கைதியின் விடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை கேட்ட, என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் ,” தண்டனை பெற்றவர் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான மனுதாரரின் உரிமையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரரும் தண்டனை பெற்றவரும், குழந்தை பிறப்புரிமையை வசதியாக புறக்கணிக்கின்றனர். குழந்தை இவ்வுலகில் நுழையும் போது 3 கொலைகள் உள்ளிட்ட கொடூரமான குற்றங்களைச் செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ‘ஒரு கைதியின் குழந்தை’ என்ற களங்கத்துடன் வளரும்.
மனுதாரர் கோரிக்கையை அனுமதித்தால் குழந்தை தரப்பில் எந்த தவறும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் ஒரு களங்கத்தைச் சுமக்கும். குழந்தையை பெற்று வளர்ப்பதற்கு மனுதாரருக்கோ, தண்டனை கைதிக்கோ உரிமையில்லை. இதனால் சாதாரண விடுப்பு வழங்க மறுத்து சிறைத்துறை கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. அதில், நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.




