2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் என இரு மாநிலங்களுமே பெரிய மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் பெரும்பாலான சீட்டுகளைப் புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்திலோ 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸை கீழிறக்கி பாஜக அரியணை ஏறுகிறது.
இந்த இரு மாநிலங்களும் ஆட்சி மாற்றத்தைச் சந்தித்திருப்பது போல, இன்னொரு ஒற்றுமையும் இந்தத் தேர்தலில் இரு மாநிலங்களுக்கும் நடந்திருக்கிறது…
அதாவது, இரு மாநிலங்களின் முதலமைச்சர்களுமே சொந்த தொகுதியிலேயே தோற்றிருக்கின்றனர். இருவருக்குமே எம்.எல்.ஏ பதவியை மக்கள் வழங்கவில்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இருவருக்குமே சட்டமன்றத்திற்கு சீட் கிடைக்கவில்லை என்றாலும், இருவரும் தோற்றதற்கான காரணங்கள் வேறு வேறு.
மம்தாவும், பவானிப்பூரும்
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, 2011, 2016, 2021 என மூன்று முறையுமே எம்.எல்.ஏ சீட்டை மம்தாவிற்கு வழங்கியது பவானிப்பூர் தொகுதி தான்.
2021-ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்றும் நந்திகிராமில் போட்டியிட்டார் மம்தா. ஆனால், அங்கே சுவேந்துவுக்குத்தான் மக்கள் ஆதரவு இருந்தது. மம்தா தோல்வியைத் தழுவினார்.
பவானிப்பூரில் போட்டியிட்டு, வெற்றி பெற்று தனது முதலமைச்சர் பதவியைப் பாதுகாத்துக் கொண்டார் மம்தா. ஆனால், இப்போது அதே தொகுதி அவரை கைவிட்டிருக்கிறது.

அதுவும் 2021-ம் ஆண்டு நந்திகிராமில் எவரிடம் தோற்றாரோ, அதே நபர், சுவேந்து அதிகாரியிடமே மீண்டும் பவானிப்பூரில் தோல்வியை தழுவியுள்ளார் மம்தா.
தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் ஒரு கட்சிக்கு எதிரான மனநிலை மக்களுக்கு நிச்சயம் இருக்கும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
2021-ம் ஆண்டே இந்த அதிருப்தி பெரியளவில் வெளிப்படும் என்று நினைத்திருந்த நிலையில், அந்த நினைப்பை தவிடுபொடியாக்கினர் மேற்கு வங்க மக்கள்.
ஆனால், அவர்கள் அப்போதும் பாஜக-வை மறந்துவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு காரணம்
2014-ம் ஆண்டு இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றப்போதில் இருந்து மேற்கு வங்க மக்களின் கண்கள் பாஜகவை உற்றுநோக்கத் தொடங்கியது.
இதன் விளைவு, மெல்ல மெல்ல பாஜக திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையான மேற்கு வங்கத்தில் காலூன்ற தொடங்கியது. அதற்கான மாபெரும் பதில் தான் இப்போதைய வெற்றி.
திரிணாமுல் காங்கிரஸ் மீதான இந்த அதிருப்தியை தான் பகடை காயாகப் பயன்படுத்தியிருக்கிறது பாஜக. அதன் உச்சமாக தான், உள்துறை அமைச்சர் அமித் ஷா சுவேந்துவை மம்தா போட்டியிடும் தொகுதியான பவானிப்பூரில் போட்டியிட அறிவுறுத்தியிருந்தார்.

ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீதான அதிருப்தி வளர, பாஜக பக்கம் மக்கள் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், பாஜகவின் வலுவான முகமான சுவேந்து பவானிப்பூர் தொகுதியில் நிற்க, அந்தத் தொகுதி மக்கள் அவரை டிக் செய்துள்ளனர்.
பவானிப்பூரில் 2021-ம் ஆண்டு 72 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த மம்தா, தற்போது 42 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். இதையும் உற்றுநோக்க வேண்டும்.
மேலும், பாஜக பவானிப்பூரில் மம்தாவை டார்கெட் செய்து பிரசாரம் செய்யாமல், அந்த மக்களின் மனதில் ‘ஆட்சி மாற்றம் தேவை’ என்பதை கொண்டு சேர்த்தனர்.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கும் மம்தா தோல்வியில் குறிப்பிட்ட அளவு பங்கு உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஸ்டாலினும், கொளத்தூரும்
இப்போது, தமிழ்நாடு பக்கம் வந்து, ஸ்டாலின் தோல்வி குறித்து பார்ப்போம்.
‘கொளத்தூரில் பல நலதிட்டங்களைக் கொண்டு வந்தார்… கொளத்தூர் மக்களுக்கு அதை செய்தார்… இதை செய்தார்… கொளத்தூரில் பூங்கா முதல் படைப்பகம் எனப் பல விஷயங்களைக் கொண்டு வந்திருக்கிறார்’ என்று தோல்விக்கு பிறகு, கொளத்தூரில் ஸ்டாலின் செய்த பணிகள் குறித்து பேசப்படுகின்றது.
எல்லாம் செய்தார்தான். ஆனால், கொளத்தூரில் மட்டுமல்ல… தமிழ்நாடு முழுவதுமே தமிழக வெற்றிக் கழகத்தின் அலையை கணிக்கத் திமுக தவறிவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதில் திமுக செய்த தவறு தான், ஸ்டாலின் தோல்வி வரை வந்து நிற்கிறது என்றும் கூறுகின்றனர்.
2011-ம் ஆண்டு முதல் (அந்தத் தொகுதி உருவானது முதல்) ஸ்டாலினுக்கு தேர்தல் சாய்ஸ், ‘கொளத்தூர்’ தான். ஆக, மம்தாவைப் போல, 2011-ம் ஆண்டு முதல் ஸ்டாலினும் இதே தொகுதியில் தான் போட்டியிட்டு வருகிறார்.
பூங்கா, படைப்பகம், பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துதல் என பல நன்மைகள் கொளத்தூரில் எட்டிப்பார்த்தாலும், அடிப்படை தேவைகளான சாலை வசதி, மழைநீர் வடிகால் போன்றவற்றில் ஸ்டாலின் கோட்டைவிட்டிருக்கிறார்.
இதில் மக்களுக்கு ஸ்டாலின் மீது சற்று அதிருப்தி.
கோட்டைவிட்ட சேகர்பாபு
அடுத்ததாக, கொளத்தூர் தொகுதியின் மாவட்டச் செயலாளர் சேகர்பாபு. அவர் துறைமுகத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்டத்தில், கொளத்தூர் தொகுதியின் மீதான ஃபோக்கஸை தவறவிட்டிருக்கிறார் என்றும், பூத் கமிட்டி முதல் வெற்றி வரை அனைத்திலும் சறுக்கியிருக்கிறார் என்றும் திமுக-வினரே சேகர்பாபு மீது வெளிப்படையாகக் குற்றம்சாட்டிக் குமுறுவதைப் பார்க்க முடிகிறது.
ஆக, மம்தா ஒரு கட்சியின் (பாஜக) எழுச்சியால் தோல்வியுற, ஸ்டாலினோ நலத்திட்டம், கட்சி உள்ளடி, மிக முக்கியமாக தவெக ஃபேக்டர் போன்றவற்றால் சறுக்கியிருக்கிறார்.
எப்படி இருவரின் தோல்விக்கும் காரணம் வேறு வேறோ, அதே மாதிரி இருவரும் தோல்வியை அணுகும் விதம் வேறு வேறாக இருக்கிறது.

நேற்று கொளத்தூருக்குச் சென்று மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து ஸ்கோர் செய்திருக்கிறார் ஸ்டாலின். மேலும், திமுக-வின் ஒட்டுமொத்த தோல்வியையும் ‘இது இன்னொரு ஆரம்பம்’ என்று ஃபிரேம் செய்து பாசிட்டிவ் பிம்பத்தைக் கட்டமைத்திருக்கிறார்.
ஆனால், மம்தாவோ தனது மற்றும் தனது கட்சியின் தோல்விக்கு பாஜக-வையும், எஸ்.ஐ.ஆரையும் குற்றம்சாட்டுகிறார். தனது முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யாமல் அடம்பிடிக்கிறார்.
இதில் எந்த அணுகுமுறை மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க போகிறதோ… அல்லது எதுவும் வேலைக்கு ஆகாமல் போகப் போகிறதோ?




