10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

50000 பேரை அகதிகளாக்கிய எத்தியோப்பிய வன்முறை! எல்லை யாருக்கு சொந்தம்; வெடித்த மோதல்; பின்னணி என்ன?

Date:

துப்பாக்கிச்சூட்டிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறும் குடும்பங்கள்… வழியிலேயே குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள்… உணவின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்… எத்தியோப்பியாவின் மொயாலே பகுதியில் வெடித்துள்ள வன்முறையால் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அண்டை நாடான கென்யாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொடியை ஏற்றியதில் தொடங்கிய மோதல்!

எத்தியோப்பியாவின் மொயாலே பகுதியில், ஒரோமியா மற்றும் சோமாலி ஆகிய இரண்டு பிராந்திய நிர்வாகங்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலப்பரப்பு மற்றும் நிர்வாக அதிகாரம் தொடர்பான பிரச்னை நீடிக்கிறது. அக்டோபர் 18-ம் தேதி சர்ச்சைக்குரிய பகுதியில் சோமாலி பிராந்தியக் கொடி ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

எத்தியோப்பிய

“என் வீடு தீக்கிரையாக்கப்பட்டது!”

வன்முறையிலிருந்து தப்பித்து கென்யா வந்த ஹவா ஹசன் என்ற பெண், இந்த வன்முறையை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.

“வன்முறையின்போது என்னுடைய வீடு தீக்கிரையாக்கப்பட்டது. சுவரின் அருகில் அமர்ந்திருந்த 13 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தச் சிறுமி எந்தக் கொடியையும் தொடக்கூட இல்லை” என்றும் மேலும், “தப்பிச் செல்லும் வழியிலேயே பல பெண்களுக்குக் குழந்தைகள் பிறந்தன.

பல குடும்பங்கள் உணவு, சமையல் பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் என அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாமல் வந்துள்ளனர்” என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் பிறந்த குழந்தைகள் தரையில் உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வயிற்றுப்போக்கு பரவுவதும் மலேரியா குறித்த அச்சமும் அதிகரித்துள்ளன.

எத்தியோப்பிய வன்முறை

50,000-ஐத் தாண்டிய அகதிகள்!

அக்டோபர் 24-ம் தேதி நிலவரப்படி 35,950 பேர் இடம்பெயர்ந்திருந்ததாக அரசு தலைமையிலான ஆய்வு தெரிவித்தது. அவர்களில் 25,000 பேர் உள்ளூர் மக்களின் வீடுகளிலும், சுமார் 11,000 பேர் தற்காலிக முகாம்களிலும் தங்கியிருந்தனர். பின்னர், கென்யா செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்தியத் தலைவர் மாலிக் அடான், இந்த எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது இன்னும் இறுதியாக உறுதிப்படுத்தப்படாத மதிப்பீடாகும்.

உதவிக்கரம் நீட்டிய மக்களுக்கும் நெருக்கடி!

கென்யா மக்கள் அகதிகளுக்குத் தங்கள் வீடுகளில் இடமளித்து வருகின்றனர். முன்பு ஐந்து அல்லது ஆறு பேருக்குச் சமைத்த குடும்பங்கள், இப்போது 20 முதல் 30 பேருக்கு உணவு தயாரிக்க வேண்டியுள்ளது. துப்பாக்கிக் குண்டுகள் வீடுகளுக்கு அருகில் விழுந்ததால் சில கென்யா குடும்பங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

முடங்கிய வர்த்தகம்… உயர்ந்த விலைவாசி!

கென்யாவின் மொம்பாசாவையும் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவையும் இணைக்கும் முக்கிய வர்த்தகப் பாதையில் சரக்கு லாரிகள் இரண்டு வாரங்களாகச் சிக்கியுள்ளன. இது மட்டுமல்லாமல் வங்கிகள் மூடப்பட்டதால் எத்தியோப்பிய நாணயப் புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருள்களின் விலையும் சுமார் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

எத்தியோப்பிய

உதவிகள் ஒருபுறம்…

துப்பாக்கிச்சூடு மறுபுறம்!

கென்யா அரசு, ஐ.நா அகதிகள் அமைப்புடன் இணைந்து உணவு, இருப்பிடம், மருத்துவ உதவிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதற்கிடையே, எத்தியோப்பிய செஞ்சிலுவைச் சங்கம் 1,000 குடும்பங்களுக்கு 3 கோடி எத்தியோப்பிய பிர் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளது.

எல்லை தாண்டி ஆயுதக் குழுக்கள் வரக்கூடும் என்ற அச்சத்தால் கென்யா கூடுதல் காவல்துறையினரைப் பணியமர்த்தியுள்ளது. நவம்பர் 5-ம் தேதி அங்கு சென்ற காவல்துறைத் தலைவர் டக்ளஸ் கன்ஜா, எத்தியோப்பிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பிய

இந்த மோதல் இரு பிராந்தியங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்னையைத் தாண்டி, இன மற்றும் அரசியல் முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆனால், தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெறுவதாக வரும் தகவல்கள், மேலும் பலர் இடம்பெயர வேண்டியிருக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.’முன்பு இந்த ஒரு நகரத்துக்கு மட்டுமே நாங்கள் உணவு வழங்கி வந்தோம். இப்போது இரண்டு நகரங்களுக்கான தேவைகளையும் நாங்களே கவனிக்க வேண்டியிருக்கிறது’ என்று மொயாலே எல்லை தாண்டிய அமைதிக் குழுவைச் சேர்ந்த அப்தி மாலிம் தெரிவித்துள்ளார்.

நிலப்பரப்பு மற்றும் நிர்வாக அதிகாரம் தொடர்பான நீண்டகாலப் பிரச்னையில், ஒரு கொடியை ஏற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து வெடித்த வன்முறை, இன்று ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. எல்லைகள் குறித்த அரசியல் முடிவுகளுக்கு நடுவே, வீடுகள் இழந்து நிற்கும் மக்களின் துயரத்தையும் யாரும் மறந்துவிடக் கூடாது. அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான்… அமைதியும், மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான பாதுகாப்பும்தான்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானிய முதல் பெண் IAS வரை பாதிக்கப்படுறாங்க'- உதயநிதி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது...

‘தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது'- ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக...

`அரசு அதிகாரியோ… சாதாரண பெண்ணோ… தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை..!' – கனிமொழி சாடல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? “யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" – அமைச்சர் ராஜ்மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது...