பைக்காரா முதல் குந்தா வரை பல்வேறு அணைக்கட்டுகளைக் கொண்டிருக்கும் நீலகிரி மாவட்டத்தில் சில்ஹள்ளா ஆற்றின் குறுக்கே புதிதாக மிகப்பெரிய அணைக்கட்டுகளை உருவாக்கி அதன் மூலம் நீர்மின் உற்பத்தியைத் தொடங்க மத்திய மாநில அரசுகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மெகா டேம் புராஜெக்ட்டான சுமார் 7,000 கோடி மதிப்பிலான இந்த அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றினால் நீர்மின் உற்பத்தி அதிகரிக்கும் என்றாலும்,
நீலகிரியின் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்பையும் மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தனர். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலமும் தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட இருக்கிறது. இதில் சில கிராமங்கள் முதல் சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களும் அடக்கம்.
சில்ஹள்ளா காவடி
இதனால் இந்த திட்டத்திற்கு எதிராக படுகர் சமுதாய மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் நேற்று நடைபெற்ற காவடிப் பெருவிழாவில் சில்ஹள்ளா அணைக்கட்டு திட்டத்தை கைவிட வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய காவடிகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றுள்ளனர். பக்தர்களுடன் திடிரென ஊடுருவிய போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்திருக்கிறார்கள்.

இது குறித்து போராட்டக்காரர்கள், ” நீலகிரி மலைக்கும் இந்த மலையில் வாழும் மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த இருக்கும் இந்த அணைக்கட்டு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே இறைவன் முருகனுக்கு சில்ஹள்ளா காவடி என்ற பெயரில் காவடி எடுத்தோம். போராட்ட வடிவங்களை மாற்றி தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என்றனர்.