11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

`15 வருட ராஜ்ஜியம்… 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

Date:

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்களும் தனி அணியாக பிரிந்து செல்ல தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இருப்பதால் அதிருப்தி கோஷ்டிக்கே கட்சியின் பெயர் மற்றும் சின்னம் கிடைக்கும் அபாயம் இருக்கிறது.

மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான தலைவர்கள் கூட இப்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். இதனால் இந்த நேரத்தில் அவருக்கு கைகொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு சோனியா காந்தியுடன் நெருக்கம் காட்டினார்.

ரிதபிரதா

ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சியை பகை கட்சி போன்று நடத்திய மம்தா பானர்ஜி பா.ஜ.கவுடனும் கூட்டணி வைத்தார். ஆனால் இப்போது மீண்டும் காங்கிரஸ் துணை அவருக்கு தேவையாக இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸோடு இணைக்க பேச்சுவார்த்தை?

மம்தா பானர்ஜி தனது கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி நேற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் என்ற தகவலும் பரபரக்கிறது.

இதில் ராகுல் காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் தனது கட்சியை இணைப்பது அல்லது காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமான கூட்டணியை வைத்துக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை அமைந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் இணைப்பு பேச்சுவார்த்தையை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. இணைப்பு பற்றி பேசவில்லை என்றும், ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து மட்டுமே பேசினோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்க பதிவில், `சோனியா மற்றும் மம்தா இடையேயான சந்திப்பில் என்ன நடந்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை. சந்திப்பு மிகவும் சுமுகமாக இருந்தது மற்றும் நீண்ட உறவை கருத்தில் கொண்டு பல தனிப்பட்ட விஷயங்கள் பேசப்பட்டன’ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா மற்றும் பிதான்நகர் உட்பட ஏழு மாநகராட்சிகள் மற்றும் 118 நகராட்சிகளின் பதவிக்காலம் நவம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை முடிவடைகிறது. மே 4 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திரிணாமுல் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் அவை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளன. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் 2028ல் நடைபெற உள்ளது. இதில் இருகட்சிகளும் கூட்டணி வைக்க ஆலோசித்து வருகின்றன.

மம்தா பானர்ஜி 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இரு கட்சிகளும் 2012 இல் பிரிந்தன. பின்னர் இரு கட்சிகள் இடையே மிகவும் மோசமான உறவே இதுவரை இருந்து வந்துள்ளது. மேற்கு வங்க காங்கிரஸின் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இது குறித்து கூறுகையில், ”ஒரு காலத்தில் காங்கிரஸை உடைத்து, வங்காளத்தில் இருந்து கட்சி அழிக்கப்படுவதை உறுதிசெய்த அதே மம்தா பானர்ஜி, இப்போது காந்தி குடும்பத்தின் ஆதரவைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்,” என்று அவர் கூறினார்.

மற்றொரு தலைவரான அப்துல் மன்னன் இது குறித்து கூறுகையில்,”காங்கிரஸ் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மம்தா பானர்ஜியுடன் கூட்டணி இல்லை. சுத்தமான தண்ணீரில் சாக்கடை நீரை கலந்தால், அது சுத்தமான தண்ணீரை மாசுபடுத்தும்” என்று கூறினார்.

15 ஆண்டு அசைக்க முடியாத மம்தா

மேற்கு வங்கத்தில் 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மம்தா பானர்ஜி 15 ஆண்டுகள் யாரும் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் மகத்தான வெற்றிக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் மிகவும் வியத்தகு அரசியல் மாற்றங்கள் ஏற்பட தொடங்கி இருக்கிறது. தேர்தலில் மம்தா பானர்ஜியே தனது பபானிபூர் தொகுதியில் தன்னிடம் அரசியல் கற்ற சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். தேர்தலில் 207 இடங்களைப் பெற்று மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த மனோஜ் திவாரி, அருணாவ சென், பாப்பியா கோஷ், ககோலி கோஷ் தஸ்திதார் உள்ளிட்ட பல தலைவர்கள் கட்சித் தலைமைக்கும், உயர்மட்ட பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கும் எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியபோது கட்சியில் விரிசல் ஏற்படத்தொடங்கியது.

இந்தத் தலைவர்கள், கட்சிக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழலை மேற்கோள் காட்டி, அதன் தலைமையை அதிகளவில் அணுக முடியாததாகவும், பொதுமக்களின் கோபம் மற்றும் தவறான நிர்வாகத்தை அறியாதவராகவும் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். திரிணாமுல் காங்கிரசியில் இருந்த அதிருப்தி மெல்ல மெல்ல கட்சியின் மேலிடத்திற்கு எதிரான எதிர்ப்பாக மாறத் தொடங்கியது. முன்னாள் எம்பி சந்தனு சென் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்தார், அதே நேரத்தில் ககோலி கோஷ் தஸ்திதர் அனைத்து கட்சி பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

100 க்கும் மேற்பட்ட திரிணாமுல் மாநகராட்சி கவுன்சிலர்களும் பதவி விலகினர், இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு கடந்த மாதம் 30ம் தேதி மம்தா பானர்ஜி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் 80 எம்எல்ஏக்களில் 60 பேர் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி ஜூன் 2-ம் தேதி எம்.எல்.ஏக்கள் ரிதபிரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது திரிணாமுல் காங்கிரஸில் மேலும் நெருக்கடி ஏற்பட்டது. அதோடு அக்கட்சியின் 80 எம்எல்ஏக்களில் 58 பேர் ரிதபிரதா பானர்ஜியை எதிர்கட்சித் தலைவராக ஆதரித்து சட்டமன்ற சபாநாயகரிடம் கடிதம் அளித்தபோது மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அடியாக கருதப்பட்டது.

சபாநாயகரும் அக் கோரிக்கையை ஏற்று ரிதபிரதாவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரித்தார். இதனால் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களின் கட்டுப்பாட்டை மம்தா பானர்ஜி இழந்தார். மேற்கு வங்கத்தை 15 ஆண்டுகளாக முழு கட்டுப்பாட்டுடன் ஆட்சி செய்த மம்தா பானர்ஜி வெறும் 35 நாட்களில் ஒட்டுமொத்த அதிகாரம், கட்சி என அனைத்தையும் இழந்துள்ளார். அதோடு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சேர்ந்த ரிதபிரதா கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related