“என் மீது ஆதாரமில்லாத அவதூறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தடை செய்யக் கோரித்தான் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்…” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இன்று மதுரை வந்த சீமான், செய்தியாளர்களிடம் பேசும்போது, “சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தினர் என்னைப்பற்றி அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அவ்வளவுதான் அவர்களின் நாகரிகம். திருமணம் செய்யாதே, கற்பு இல்லை என்பதே பெரியாரின் கோட்பாடு. ஆனால், அவர்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லை. அதனால்தான் இது போன்ற கேவலமான செயல்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் செய்து வருகின்றனர். என்னைப்பற்றி பேச திமுக-வுக்கும், திராவிடர் கழகத்திற்கும் அருகதை இல்லை.
இந்த வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை வரவேற்கிறேன். எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதில் உடன்பாடு காண்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை.
எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது. இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பேசத் தகுதி இல்லை. காம்ரேட்டிலிருந்து கார்பரேட்டாக மாறியுள்ளனர். நீதிமன்றமே கூறாத நிலையில் மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் எப்படி என்னை பாலியல் குற்றவாளி என்று கூறுகிறார்? வாச்சாத்தி வன்கொடுமைக்கு எதிராகப் போராடிய அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால், ஒரு பெண் கூறுவதை வைத்து என்னை எப்படி குற்றவாளி என்று சொல்கிறார்கள்?
அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம், பொள்ளாச்சி சம்பவம், மயிலாடுதுறை என சமீபத்தில் நாட்டில் 26 க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசுக்கு எதிராக வாய் திறக்கவில்லை. திண்டுக்கல்லில் மாதர் சங்கத் தலைவி வீட்டு சிறையில் வைக்கப்பட்டதற்கு என்ன செய்தீர்கள்?

ஜீவானந்தம், சங்கரய்யாவுடன் கம்யூனிசம் செத்து போய்விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியில் உண்மையான தலைவராக நல்லக்கண்ணு மட்டுமே இப்போது உள்ளார். நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழாவை ஏன் தமிழக அரசு கொண்டாடவில்லை. அதற்கு ஏன் கம்யூனிஸ்டுகள் திமுக-வை வலியுறுத்தவில்லை. நல்லக்கண்ணு நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் நின்றபோது பாஜக-வுடன் சேர்ந்து தோற்கடித்தது இந்த திமுக-தான். ஒருகாலத்தில் 90 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, இப்போது 6 இடங்களில் வந்து நிற்கிறது. எந்த பிரச்னைக்கும் கம்யூனிஸ்ட் கட்சி போராட முன்வரவில்லை. புரட்சியையெல்லாம் வறட்சியாக்கி விட்டீர்கள். நானும் அந்த தத்துவத்தை படித்து வளர்ந்தேன், உங்களுடன் நின்றேன். அப்போதிருந்த தத்துவார்த்த தோழர்கள் இப்போது எங்கே? வாசுகி அம்மாவெல்லாம் சீமானுக்கு எதிராக பேச வேண்டுமென்றால்தானே வருகிறீர்கள்.
மும்மொழிக் கொள்கை, கச்சத்தீவு, காவிரி பிரச்னை, மீத்தேன், கல்குவாரி அமைப்பது போன்றவற்றில் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு என்ன? தெரியவில்லை. திராவிடர் கழகத்தினர் எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இழிவுபடுத்த வேண்டும் என செயல்படுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் புகார் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. தற்போது தீவிரம் அடைந்துள்ள இப்பிரச்னை இப்போது தீர்க்கப்படவேண்டும். நான் தடித்த வார்த்தை பேசிவிட்டதாக சொல்கிறார்கள். இவ்வளவு நாட்களாக இதை கடந்து போய்க்கொண்டிருந்தேன். என் குடும்பத்தினரை அசிங்கமாக பேசினார்கள். என் அம்மாவை அந்தப் பெண் இழிவாக பேசி வந்ததை 15 ஆண்டுகள் பொறுமையாக கடந்து வந்தோம். என்னையும் என் குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசி வருகின்றனர். அதையெல்லாம் பொறுத்து கண்ணியம் காத்து வருகிறேன்.
இழிவான வார்த்தைகளைப் பேச நாங்கள் நாகரிகம் அற்றவர்களோ, அறம் அற்றவர்களோ கிடையாது. ஆனால், திமுக தலைவர்கள் வாடகைத்தலைவர்களை அமர்த்தி இந்த பிரச்னையை பேசி வருகின்றனர். விரைவில் இப்பிரச்னைக்கு முடிவு வரும்” என்றார்.