2013-ல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஹரிஷ் ராணா என்ற மாணவர் தான் தங்கி இருந்த மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தச் சோகமான விபத்துக்குப் பிறகு கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் படுத்தப் படுக்கையாகவே உள்ளார். சுவாசிப்பதற்காக அவரது தொண்டையில் குழாயும், உணவிற்காக வயிற்றில் குழாயும் பொருத்தப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார்.
கீழே விழுந்ததில் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடர்ந்து எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் படுத்தப் படுக்கையாக இருந்தார். கடந்த 13 ஆண்டுகளில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தங்களது மகன் இறப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரி ராணாவின் வயதான பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், 13 ஆண்டுகளாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் 31 வயது நபரின் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, அந்த வாலிபரின் உயிர்காக்கும் கருவிகளை திரும்பப் பெற அனுமதித்தனர். நோயாளியின் நிலை குறித்து இரண்டு மருத்துவ நிபுணர் குழுக்கள் கொடுத்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் இந்தியாவில் செயலற்ற கருணைக் கொலை குறித்த சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர்.
மேலும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், “ஒரு மருத்துவரின் கடமை ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிப்பதுதான் என்றாலும், நோயாளி குணமடைவார் என்ற நம்பிக்கை இல்லாதபோது தொடர்ந்து சிகிச்சையளிப்பது பயனற்றது. எனவே மருத்துவ சிகிச்சையை திரும்பப் பெறுவதற்காக, நோயாளியை AIIMS மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்க வேண்டும். கௌரவமான முறையில் சிகிச்சை திரும்ப பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும் .
ராணாவின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது வயதான பெற்றோர், பல ஆண்டுகளாக அவரை தன்னலமின்றி பராமரித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் ஒருபோதும் அவரை விட்டு விலகவில்லை. ஒருவரை நேசிப்பது என்பது இருண்ட காலங்களிலும் அவர்களைக் கவனித்துக்கொள்வதாகும். கடவுள் எந்த மனிதனிடமும் வாழ்வை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்பதில்லை, நீ அதை ஏற்றே ஆக வேண்டும். இந்த வரிகள் ஒரு நபர் மரணத்தைத் தேர்ந்தெடுக்க முடியுமா என்ற சட்டக் கேள்வி எழும்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று நீதிபதி பார்திவாலா குறிப்பிட்டார்.
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ‘இருப்பதா அல்லது வேண்டாமா( “To be or not to be)என்ற வரிகளை மேற்கோள் காட்டிய நீதிபதி, வாழும் உரிமை என்பதில் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அடங்குமா என்பதைத் தீர்மானிக்க இந்த வரிகள் பொருத்தமாக இருப்பதாகக் கூறினார்.
2011 ஆம் ஆண்டு அருணா ஷான்பாக் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் செயலற்ற கருணைக் கொலை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஷான்பாக், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார், இதனால் அவர் செயலிழந்து மூளைக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவ சான்றுகள் அவர் உயிர்வாழ வேண்டும் என்று கூறுகின்றன என்று டாக்டர்கள் குறிப்பிட்டனர். ஆனால் செயலற்ற கருணைக் கொலைக்கான விதிமுறைகளைத் தளர்த்தி, கருணைக் கொலையை நீதிபதிகள் அனுமதித்தனர்.




