இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு. 143 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இங்கு வெகு சிலரால் மட்டுமே தேவைக்கு அதிகமான பொருள்கள் மற்றும் சேவைகளில் செலவு செய்ய முடிகிறது என்கிறது Blume Ventures மூலதன நிறுவனத்தின் அறிக்கை.
அந்த நிறுவனத்தின் அறிக்கைப்படி, 13-14 கோடி மக்கள்தான் ‘நுகர்வு பிரிவினராக’ இருக்கின்றனர். அவர்கள் மட்டும்தான் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி பணம் ஈட்டுகின்றனர்.
நாட்டின் ஜி.டி.பி பெருமளவில் நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை சார்ந்துதான் இருக்கிறது.
14 கோடி வாங்கும் திறனுள்ள மக்கள்தான் ஸ்டார்ட்அப்களுக்கான சந்தையை உருவாக்குகின்றனர்.
வளர்ந்துவரும் நுகர்வோர்
அடுத்தகட்டமாக உள்ள 30 கோடி பேர் “வளர்ந்து வரும்” அல்லது “ஆர்வமுள்ள” நுகர்வோர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உள்ளவர்கள் அதிகமாக செலவு செய்யத் தொடங்கியுள்ளனர். டிஜிட்டல் பேமென்ட்கள் வந்த பிறகு இது அதிகரித்துள்ளது. ஆனாலும் அவர்கள் எச்சரிக்கையாக செலவு செய்பவர்களாகவே இருக்கின்றனர். “அவர்கள் அதிகமாக வாங்குகிறார்கள். ஆனால் தயக்கத்துடன் பணம் செலுத்துகின்றனர்” என அறிக்கை குறிப்பிடுகிறது.
“ஓ.டி.டி/மீடியா, கேம்கள், கல்வி தொழில்நுட்பம் மற்றும் கடன் கொடுத்தல் இந்த தரப்பினருக்கான சந்தையாக உள்ளது. UPI மற்றும் AutoPay மூலம் இவர்கள் அதிகம் செலவு செய்கின்றனர்” என அறிக்கை கூறுகிறது.
கிட்டத்தட்ட 100 கோடி இந்திய மக்கள் இந்த அளவுகூட செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை அடையவே சிரமப்படுகின்றனர். இவர்களது சந்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து தொலைவில் இருக்கிறது.
ஆழமாகும் நுகர்வு சந்தை
இந்தியாவின் நுகர்வு சந்தை பரவலடைவதற்கு மாற்றாக ஆழமாவதாக இந்த அறிக்கைக் கூறுகிறது. இதற்கான அர்த்தம் புதிதாக பணம் செலவழிக்கும் வர்கத்தினர் உருவாகவில்லை. ஆனால் ஏற்கெனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகியிருக்கின்றனர்.
இந்த மாற்றம் வர்த்தகத்திலும் வணிகத்திலும் தாக்கம் செலுத்தும். இதனால் பணக்காரர்களுக்கு அதிக லாபத்தில் மிகவும் ஆடம்பரமான பொருள்களை விற்கும் போக்கு அதிகரிக்கும். பெரும்பான்மை மக்களுக்காக பொருள்களைத் தயாரிப்பது குறையும்.
ஆடம்பர வீடுகளும், உயர் மதிப்பு ஸ்மார்ட் போன்களும் அதிகம் விற்பனை ஆவதன் மூலம், இதனைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. இதே நேரத்தில் எளிமையாக வாங்கக் கூடிய பொருள்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் திக்குமுக்காடுவதை கவனிக்கலாம்.
உதாரணமாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலை வீடுகள் சந்தையில் 40 சதவீதமாக இருந்தன. ஆனால் இப்போது வெறும் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்திய பொருளாதாரத்தின் மீட்சி K வடிவில் வளர்ந்துள்ளதாக கூறுகின்றனர். ஏழைகள் வாங்கும் சக்தி குறைந்து போராடும் அதே வேளையில், பணக்காரர்கள் தொடர்ந்து செழித்து வளர்கிறார்கள்.
தரவுகளின் படி, நாட்டின் மொத்த வருமானத்தில் 57.7% வெறும் 10% உயர்மட்ட பணக்காரர்களிடம் உள்ளது.
கடனால் வீழும் மிடில் கிளாஸ் மக்கள்!
பெரும்பாலான இந்தியர்களுக்கு நிதி சேமிப்பை விட கடன் அதிகமாக இருப்பது, வாங்கும் சக்தி இல்லாமையை மேலும் மோசமாக்குகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி கடன் கொடுப்பதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியிருக்கிறது என்றாலும், வளர்ந்து வரும் நுகர்வோர் வகுப்பு செலவழிப்பதற்கு கடன் வாங்குவதையே சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால சவால்கள் அப்படியே இருக்கின்றன. நுகர்வோர் தேவையில் முக்கிய வகுப்பாக இருக்கும் நடுத்தர மக்கள் அளவு குறைந்துகொண்டே வருகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளதை ரிசர்வ் வங்கி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகிறது.
Marcellus Investment Managers அறிக்கை
மார்செல்லஸ் முதலீட்டு மேலான்மை நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் நடுவில் (பொருளாதார ரீதியில்) உள்ள 50% வரி செலுத்துபவர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஊதிய உயர்வும் பெறவில்லை அல்லது அவர்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. இதைப் பணவீக்கத்துடன் பொருத்திப்பார்த்தால் அவர்களது வருமானம் பாதியாக குறைந்திருக்கிறது.
அதாவது வருமானத்தில் உயர்வில்லை ஆனால் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வருங்காலத்தில் மிடில்கிளாஸ் மக்கள் கடினமான சூழல்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர்.
மார்செல்லஸ் அறிக்கை, வெள்ளை காலர் வேலைகள் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி காரணமாக ஆபத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளது. எழுத்தர் மற்றும் செயலகப் பணிகள் குறைந்து வருகின்றன, மேலும் உற்பத்தித் துறையில் மேற்பார்வைப் பணிகள் கூட குறைந்து வருகின்றன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.