தவெக தலைவர் விஜய் முதல்வராவதற்கு முன்பு இருந்தே அவரின் பாதுகாவலராக நயீம் முசா என்பவர் இருந்து வருகிறார்.
தற்போது விஜய் முதல்வரான பிறகும் அவரே பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். சமீபத்தில் முதல்வர் டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தப்போதும் நயீம் முசா பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இந்நிலையில் அதிமுக எம்.பி இன்பதுரை முதல்வர் விஜய்யின் பாதுகாவலர் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், “Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வப் பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்?
மாநிலக் காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்வருக்கே முழு நம்பிக்கை இல்லையா?
அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், ‘பாதுகாவலர்’ என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?

அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?
பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.




