ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவுடன் முக்கிய நாட்களில் அமாவாசை, தேரோட்டம், மாலை மாற்றும் தபசு திருவிழாவுடன் 16-ம் தேதி சுவாமி – அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று ஆடி அமாவாசை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் நீராடி மறைந்த முன்னோர்கள் நினைவாக சிறப்புப் பூஜைகள் நடத்துவது இந்துக்களின் வழக்கம்.
ஆடி அமாவாசை தினத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னிதீர்த்தம் மற்றும் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் மேலான யாத்திரைவாசிகள் வந்திருந்தனர்.
தீர்த்தமாடி முன்னோர்களுக்குத் திதி கொடுப்பதற்காக நேற்று மாலை முதலே யாத்திரீகர்கள் ராமேஸ்வரம் வரத் துவங்கினர். இதற்கென மாநிலம் முழுவதிலும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடற்கரையில் நீராட பக்தர்கள் குவிந்தனர். அவ்வாறு திரண்ட பக்தர்கள் தங்களின் அத்தியாவசிய தேவையான காலை கடன்களை முடிக்க கோயில் நிர்வாகத்தினால் கட்டப்பட்ட மற்றும் நகராட்சி கழிப்பறைகளைத் தேடி சென்றனர்.
ஆனால் அந்தக் கழிப்பறைகள் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு கிடந்ததால் யாத்திரைவாசிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் தனியார் கழிப்பறைகளை நாடி சென்றதுடன், திறந்த வெளிகளையும் கழிப்பிடமாகப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தேவஸ்தானம் மற்றும் நகராட்சி கழிப்றைகளில் தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டிருந்ததாகக் காரணம் கூறப்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகளுடன் யாத்திரைவாசிகள் கழிப்பிடங்களைத் தேடி அலைந்தனர்.




