1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

யோகி Vs அகிலேஷ்: அமைச்சரவை மாற்றம்; சமூக சமன்பாடுகள்; பாஜக-வின் தேர்தல் வலை! – கைகொடுக்குமா?

Date:

மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம், 80 மக்களவைத் தொகுதிகளையும் 403 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளதால், நாட்டின் “டெல்லிக்குச் செல்லும் நுழைவாயிலாக” பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, அங்கு முதன்முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.க, இப்போது தனது முழு கவனத்தையும் உத்தரப் பிரதேசத்தின் பக்கம் திருப்பியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும்போது, அம்மாநிலத்தில் பா.ஜ.க தனது பத்தாண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கும்.

2029-ல் நடைபெறவிருக்கும் அடுத்த மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்தத் தேர்தலில் கிடைக்கும் வெற்றி அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உத்தரப்பிரதேசம்

உத்தரப் பிரதேசத் தேர்தலில் சாதி சமன்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை கவனத்தில்கொண்டே, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் என்ற சூழலில் பா.ஜ.க அரசு தனது அமைச்சரவையை அண்மையில் விரிவாக்கம் செய்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற இலக்கு வைத்துள்ள யோகி ஆதித்யநாத், பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் பூபேந்திர சவுத்ரி மற்றும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகிய மனோஜ் பாண்டே ஆகியோரை அமைச்சரவையில் சேர்த்துள்ளார். மேலும், கைலாஷ் ராஜ்புத், ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மா, கிருஷ்ணா பாஸ்வான் மற்றும் சுரேந்திர திலர் ஆகியோர் மாநில அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

இவர்களுடன் மாநில அமைச்சர்களாக இருந்த அஜித் சிங் பால் மற்றும் சோமேந்திர தோமர் ஆகியோர் மனம் கோணாதபடி, கேபினட் அந்தஸ்துடன் கூடிய தனிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்களில் சவுத்ரி, விஸ்வகர்மா மற்றும் ராஜ்புத் ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (OBC) சேர்ந்தவர்களைப் பிரநிதித்துவப்படுத்துவர்.

அதேப் போல, மேற்கு உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க கூர்ஜர் சமூகத்தைச் சேர்ந்தவர் தோமர். கான்பூர்-ஆக்ரா பகுதியில் கணிசமாக வாழும் பால் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் அஜித் சிங் பால். சமாஜ்வாதி கட்சியில் இருந்து வந்த மனோஜ் பாண்டே பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்.

மனோஜ் பாண்டே - யோகி ஆதித்யநாத்
மனோஜ் பாண்டே – யோகி ஆதித்யநாத்

இதற்கு முன்னதாக, 2025 டிசம்பரில் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பங்கஜ் சவுத்ரியை உத்தரப் பிரதேச பா.ஜ.க தலைவராக கட்சித் தலைமை நியமித்தது. இவரும் OBC யாதவர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் உள்ள குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்

2022 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குர்மி சமூகத்தைச் சேர்ந்த 27 வேட்பாளர்கள் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியிலும் 13 குர்மி சமூக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

சாதி சமன்பாடுகளை முன்வைத்து, எல்லாச் சமூகத்தையும் திடீரென அமைச்சரவைக்குள் கொண்டுவருவது, கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு நியமிப்பதன் பின்னணியில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்வைக்கும் PDA (பின்தங்கியவர்கள், தலித்துகள், சிறுபான்மையினர்) என்ற அரசியல் முழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த பி.டி.ஏ முழக்கம் உள்ளிட்ட சில காரணிகளால், கடந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 37 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது. பா.ஜ.க-வின் பலம் 60 லிருந்து 33 ஆகக் குறைந்தது.

நிதின் நபின்
நிதின் நபின்

“2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் யோகி ஆதித்யநாத் தலைமையிலேயே எதிர்கொள்ளப்படும்” என்று பா.ஜ.க தேசியத் தலைவர் நிதின் நபின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் தேர்தல் பிரசாரத்தை யார் வழிநடத்துவது என்பது குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், ‘யோகி ஆதித்யநாத்துக்கும் பா.ஜ.க-வின் மத்திய தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால், அவர் மாற்றப்படலாம்’ என எழுந்த வதந்திகளுக்கும் முடிவுகட்டப்பட்டிருக்கிறது.

கடந்த பொதுத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கு பின்னடைவை ஏற்படுத்திய எதிர்க்கட்சிகளின் “அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளது” என்ற பிரசாரத்தை எதிர்கொள்ள பா.ஜ.க அடிமட்ட அளவில் வேலை செய்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், “அரசியலமைப்பை மாற்றுவோம்” என்று சில பா.ஜ.க தலைவர்கள் பேசியதும், பிரதமரின் ‘நாடாளுமன்றத்தில் 400-க்கும் மேல்’ என்ற முழக்கமும் தலித் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே உத்தரப் பிரதேசத்தில் உள்ள 17 தனித் தொகுதிகளில் பா.ஜ.க 8 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தத் தவறை உணர்ந்துள்ள பா.ஜ.க, ‘இந்த முறை எதிர்க்கட்சிகள் வாக்காளர்களை திசைதிருப்ப அனுமதிக்க மாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாடி Vs பாஜக

உத்தரப் பிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையின் தலித்துகள் சுமார் 21% உள்ளனர். இங்கு அதிக எண்ணிக்கையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (40-50%) அடுத்தபடியாக தலித்களே பெரிய வாக்கு வங்கியாகத் திகழ்கின்றனர். எனவே, பி.டி.ஏ எனக் குறிப்பிடப்படும் மூன்று பிரிவினரும் சேர்ந்து 70-75% வாக்காளர்களாக இருப்பதால், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படுகின்றனர்.

இந்தப் பின்னணியில்தான், ‘பா.ஜ.க அரசு பி.டி.ஏ பிரிவினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறது’ என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், அவர், “22 அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தலித் மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான 11,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் போன்ற முக்கியப் பதவிகளில் இடஒதுக்கீடு இருந்தும் இந்த சமூகங்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டுகிறார்.

மக்களவைத் தேர்தல் பின்னடைவுக்குப் பிறகு பா.ஜ.க நாட்டின் 21 மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட போதிலும், சமாஜ்வாதி கட்சி தனது பி.டி.ஏ உத்தியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக “பி.டி.ஏ தணிக்கை பகுதி-1” என்ற புத்தகத்தையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பெரும் மக்கள் கூட்டத்தையும், குறிப்பாக இளைஞர்களையும் ஒருங்கிணைக்க முடியும் என சமாஜ்வாடி கட்சி நம்புகிறது.

நீட் தேர்வு குளறுபடி
நீட் தேர்வு குளறுபடி

இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, நீட் தேர்வு குளறுபடி உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள், தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம் போன்ற பிரச்னைகள் இளைஞர்களிடையே பெரும் பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக யோகி ஆத்யநாத்க்கு எதிராக உட்கட்சிப் பூசலும் பலம்பெற்றுவருகிறது.

குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் ரூ.5,000 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு, ராமர் கோயில் பக்தர்களின் காணிக்கையில் நடந்த மோசடி, ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினர்களின் அதிருப்தி உள்ளிட்டவை ஆளும் பா.ஜ.க அரசுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த விவகாரங்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வெளிப்படையாகவே எதிர்ப்பு அலையடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இப்படி ஆளும் பா.ஜ.க மீது அதிருப்தி இருந்தபோதிலும், சமாஜ்வாதி கட்சி இன்னும் பா.ஜ.க-வுக்கு மாற்றுக் கட்சியாக இல்லை எனவும், மக்களுக்கு அக்கட்சியின் மீது போதிய நம்பிக்கை ஏற்படவில்லை என்ற சூழலலே நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எனவே, உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரை அடுத்தடுத்து நடைபெறப்போகும் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மயிலாடுதுறை: இடுப்பளவுத் தண்ணீரில் இறுதி ஊர்வலம்… பல தலைமுறைகளாகத் தொடரும் கிராமத்தின் துயர்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, செம்பனார்கோயில் ஒன்றியம், ஆலவேலி ஊராட்சிக்கு உட்பட்ட இளையான்குடி...

`காட்டுமன்னார் கோவிலில் நான் போட்டியிடாதது குறித்து திமுகவிடம் கேள்வி எழுப்பியதுண்டா?'- திருமாவளவன்

மேலவளவு முருகேசன் மற்றும் 6 பேரின் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்டம்,...

'கத்தாரில் ஈரான், அமெரிக்கா பேச்சுவார்த்தை?' – ட்ரம்பின் ட்வீட்டும், ஈரானின் மறுப்பும்

ஈரான், அமெரிக்கா - இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலுக்குப் பிறகு, பேச்சுவார்த்தை...

DMK Files: அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர்.பாலு

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற...