‘இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்’ என தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிரசாரம் செய்துவருவதால், கடும் அப்செட்டில் இருக்கிறார்கள் வி.சி.க நிர்வாகிகள். ‘பாஜக-வை வீழ்த்துவதே நோக்கம்’ என்பதை முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார், வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின். அவர் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வி.சி.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் த.வெ.க செயல்பாடுகளை விமர்சித்துவருகிறார்கள்!
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வி.சி.க சீனியர்கள், “குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் த.வெ.க ஆட்சியமைக்க ஆதரவளித்தோம். ஆனால் சமீப காலமாக த.வெ.க அரசின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை. பா.ஜ.க எதிர்ப்பில் அவர் கூர்மையாக இல்லை. தலைமைச் செயலாளர் சாய்குமார் வலதுசாரி கண்ணோட்டத்துடன் செயல்படுவதாக இடதுசாரித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும், அவர்மீது நடவடிக்கை இல்லை. இப்போது புதிதாக, இந்தியா கூட்டணியை சீண்டிப் பார்க்கும் ஆயதத்தைக் கையிலெடுத்திருக்கிறார்கள்” என்றனர் கொதிப்புடன்.
அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஏழில் கரோலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்திலிருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும். நம் குரல் சட்டமன்றத்தில் ஒலித்ததைப் போலவே, நாடாளுமன்றத்திலும் ஒலிக்க வேண்டும்” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய தவெக நிர்வாகிகள், “இன்றைய முதல்வர் விஜய்… நாளைய பிரதமர்” எனப் பேசி வருகின்றனர். தங்கள் கட்சியின் தலைவர் உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என தொண்டர்கள் நினைப்பது தவறில்லை. ஆனால் அரசியல் சூழலைப் புரிந்துகொள்ளாமல், இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை உரசிப் பார்க்கும் அளவுக்கு தவெகவினர் பேசி வருவது வருத்தமளிக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவை வீழ்த்துவதுதான் ஒற்றை நோக்கம் என பிரதமர் வேட்பாளரையே முன்னிறுத்தாமல் இந்தியா கூட்டணிக் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. அதன் விளைவாகவே, பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளை நம்பி நிற்கும் நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியா கூட்டணி முழு ஒற்றுமையுடன் செயல்பட்டு, பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற உற்ற துணையாக இருக்க வேண்டும்.
அவ்வாறில்லாமல், “முதல்வர் விஜய்தான் பிரதமர்” எனக் கூறி, தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்ப்பது தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்கும். எனவே, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தவெகவினர் பேசுவதை முதல்வர் தடுக்க வேண்டும். மேலும், “பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்” என்பதை முதல்வர் பேரறிவிப்பாக வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றிருக்கிறார்.

மற்றொரு துணைப் பொதுச்செயலாளரான ரஜினிகாந்த், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை த.வெ.க-வில் இணைப்பது, த.வெ.க-வின் சட்டமன்ற நடவடிக்கைகள், காவல்துறை நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதன்மைச் செயலாளரான ஆளூர் ஷாநவாஸ், “நடப்பது மறைமுக பா.ஜ.க ஆட்சி” என மொத்தமாக போட்டுடைத்துவிட்டார். வி.சி.க-வின் வன்னி அரசு அமைச்சரவையில் பங்கேற்றுள்ள நிலையில், வி.சி.க இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்ச்சியாக விமர்சித்து வருவது, கட்சியை கலகலத்துப்போக வைத்திருக்கிறது.




