27
April, 2026

A News 365Times Venture

27
Monday
April, 2026

A News 365Times Venture

`பருத்தி விளைஞ்ச பூமி சாமி இது! இன்னும் எத்தன உசுரு?!' – அரசுக்குக் கேட்குமா சிவகாசியின் அபயக்குரல்?

Date:

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் பகுதிகள், இந்தியாவின் பட்டாசுத் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் மையங்களாகத் திகழ்கின்றன. பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழிலில் ஜப்பான் போன்று சுறுசுறுப்பாகவும், அதிநவீன தொழில்நுட்பத்துடனும் செயல்படுவதால், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிவகாசிக்கு ‘குட்டி ஜப்பான்’ எனப் பெயர் சூட்டினார். இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் சுமார் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறும் இந்தத் தொழில், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

சிவகாசி

ஒரு காலத்தில் பருத்தி விவசாயம் செழித்து வளர்ந்த இந்தப் பூமியில், கருவேல மரங்களால் இன்று விவசாய நிலங்கள் அனைத்தும் பட்டாசு ஆலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், இந்தத் தொழிலின் அபரிமிதமான வளர்ச்சிக்கு இணையாக, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால், பட்டாசு ஆலைகளிலும், கிடங்குகளிலும் ஏற்படும் வெடி விபத்துகள் அங்கு சர்வ சாதாரணமாக நிகழும் துயரங்களாக மாறிவிட்டன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்துகள் அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட கோர விபத்தில் 27 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, 2023 அக்டோபரில் சிவகாசி ரெங்கபாளையத்தில் நடந்த விபத்தில் 10 பேரும், 2024 பிப்ரவரியில் வெம்பக்கோட்டை பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 10 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

இந்த வரிசையில் மிகச் சமீபத்திய சோகமாக, ஏப்ரல் 19-ம் தேதி விருதுநகர் கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து அமைந்துள்ளது. இந்த விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள். மேலும், சேர்வைக்காரன்பட்டி மற்றும் ஆதிபட்டி ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் மொத்தமாகப் பலியாகியுள்ளனர்.

இந்தக் கோர விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் என்பவர் மீது வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடிபொருட்களைக் கையாளுதல் மற்றும் சட்ட விதிகளை மீறுதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அரசு அதிகாரிகளும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் கூட்டு சேர்ந்து செயல்படுவதே விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என்றக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக சிஐடியு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச்செயலாளர் பாண்டியனிடம் சிலக் கேள்விகளுடன் அணுகினோம்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

அவர், “ மாவட்ட வருவாய் அலுவலரின் (DRO) அனுமதியுடன் இயங்கும் பல ஆலைகளில், அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட மிகக் கூடுதலானவர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். உதாரணமாக, 16 பேர் மட்டுமே வேலை செய்ய வேண்டிய இடத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்படுகின்றனர். விபத்து நடந்த இடத்தில் நுழைவு வாயிலுக்கு அருகிலேயே தற்காலிகத் தகரக் கொட்டகைகள் அமைத்து, அங்கு தொழிலாளர்களைக் குவித்து வைத்து உற்பத்தி நடைபெற்றுள்ளது. விதிமுறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அறைகளில் மட்டுமே உற்பத்தி நடக்க வேண்டும். ஆனால், கூடுதல் லாபத்திற்காக விதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு ஆபத்தான முறையில் உற்பத்தி நடைபெறுவதே இத்தகைய விபத்துகளுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.

இந்த விதிமீறல்களைக் கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் வருவாய்த் துறையினர் தங்களின் கடமையிலிருந்து தவறிவிட்டனர். சிவகாசியில் மட்டுமே வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் இருக்கிறது. அங்கு மிகவும் சொற்பமாக 10-க்கும் குறைவான அதிகாரிகளே பணியாற்றுகின்றனர். ஆயிரம் தொழிற்சாலைகளை இந்தச் சில அதிகாரிகளால் முறையாக ஆய்வு செய்ய முடியாது. எனவே, சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை, அருப்புக்கோட்டை என அந்தந்த வட்டார வாரியாக வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்றும், கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

அதேபோல, வெடி பொருள்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த தொழிலாளர்களுக்குப் போதுமான பாதுகாப்புப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. தற்போது சாட்சாபுரத்தில் உள்ள ஒரு சிறிய அலுவலகத்தில் மிகக் குறைந்த நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, அந்தந்த ஆலை மட்டத்திலேயே அதிகாரிகள் சென்று, உரிமையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கடந்த 2012-ல் ஓம் சக்தி ஆலை விபத்துக்குப் பிறகு இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டாலும், அது காலப்போக்கில் கைவிடப்பட்டது.

மேலும், பயிற்சிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியத்தையும் வழங்க வேண்டும். அப்போதுதான் வறுமையில் வாழும் அவர்கள், கூலிக்காகவாவது ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். ஆனால், பயிற்சி காலங்களில் போக்குவரத்துக்கு மட்டுமே பணம் வழங்கப்படுகிறது.

தொழிலாளர்களின் ஊதியப் பிரச்னையும் விபத்துகளுக்கு ஒரு மறைமுகக் காரணமாகிறது. 2023-ல் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமான 18,000 ரூபாயை வழங்க உற்பத்தியாளர்கள் முன்வருவதில்லை. அதற்குப் பதிலாக ‘பீஸ் ரேட்’ (Piece Rate) எனப்படும் உற்பத்திக்கு ஏற்ற கூலி முறையைப் பின்பற்றுவதால், தொழிலாளர்கள் அதிகக் கூலி ஈட்ட வேண்டும் என்ற கட்டாயத்தில் மிக வேகமாகச் செயல்படுகின்றனர்.

சிஐடியு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச்செயலாளர் பாண்டியன்
சிஐடியு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொதுச்செயலாளர் பாண்டியன்

இது பாதுகாப்பில் கவனக்குறைவை ஏற்படுத்துகிறது. 5 லட்சம் பட்டாசு ஆலைத் தொழிலாளர்களில் வெறும் 48,000 பேருக்கு மட்டுமே பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) போன்ற சலுகைகள் கிடைக்கின்றன. அப்படியானால், பாதுகாப்புக்கான பொறுப்பு எப்படி உரிமையாளர்களுக்கு வரும்.

எனவே, இனி இது போன்ற அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதில் அரசும், உரிமையாளர்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள 20 லட்ச ரூபாய் நிவாரணத்தை முழுமையாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகை, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும்.

தொழிலை வளர்க்க டெல்லிக்கும் சென்னைக்கும் செல்லும் உரிமையாளர்கள், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து இதுவரை எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இந்த விபத்துகளுக்குத் தொழிலாளர்களைக் குற்றம் சொல்லாமல், அரசு தனது கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்தி, சட்டவிதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பதே சிஐடியு சங்கத்தின் பிரதான கோரிக்கை.” என்றார் விவரமாக.

இந்த விவகாரம் தொடர்பாக நம்முடன் தங்கள் `வலி’யைப் பகிர்ந்து கொண்ட கட்டனார்பட்டி மக்கள், “ஒரு காலத்துல பருத்தி விளைஞ்ச பூமி சாமி இது! கருவேல மரங்கள் அதிகம் வந்து, இன்னைக்கு பட்டாசு ஆலையா போயிருச்சு. விவசாயம் பொய்த்துப்போன இந்த பூமியில, இந்த தொழிலை விட்டா வேறு தொழில் இல்ல எங்களுக்கு. பட்டாசு ஆலைக்கு வேலைக்குப் போறவங்க, திரும்பி வீட்டுக்கு உசுரோட வருவாங்கன்னு நிச்சயம் இல்ல. தெனமும், `இன்னைக்குக் கூட கடைசி நாளா இருக்கலாம்’ன்னு நெனச்சுட்டே, கடவுளை வேண்டிட்டுப் போவோம். குடும்ப கஷ்டம், பிள்ளைங்க படிப்பு… இதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து நிக்குறப்போ, உசுர விடவும், கெடைக்குற அந்த கூலிப் பணம் தான் பெருசா தெரியுது எங்களுக்கு.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

அரசாங்கம் என்னதான் சட்டங்கள், வழிமுறைகள் அறிவிச்சாலும், இங்க யாரும் அதையெல்லாம் பின்பற்றுவது கெடையாதுங்க… எந்த நிமிஷம் எது நடக்கும்னு தெரியாம, உயிர் பயத்தோடவே தான் பட்டாசு சுருட்டிட்டு கெடக்குறோம். தலைமுறை தலைமுறையா இந்த தொழில்ல தான் இருக்கோம். இதை விட்டா எங்களுக்கு வேற எதுவும் தெரியாது. எங்களுக்குச் சோறு போடுற தெய்வம் இந்த தொழில். அதை பாதுகாப்பான முறையில செஞ்சாலே, நாங்க நிம்மதியா இருப்போம். அரசாங்கம் அதை உறுதி செய்யணும். குடும்ப கஷ்டத்துக்காக சொற்ப கூலிக்கு வேலைக்குப் போய், விபத்துல உசுர விடுற எங்க மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கணும்” என்றனர் கண்களை கசக்கியபடி.

தொடர்ந்து நிகழும் இத்தகைய விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மற்றும் நிர்வாக ரீதியான கடும் நடவடிக்கைகள் அவசியமாகிறது. பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும் துறைகள், காகித அளவில் மட்டுமே ஆய்வுகளை முடிக்காமல், களத்தில் இறங்கி பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக, ஓர் அறையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை விடக் கூடுதலாகப் பணியாளர்களை அமர்த்துவது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் இருப்பது போன்ற விதிமீறல்களைக் கண்டறிந்தால், உடனடியாக ஆலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்குத் தேவையான தீ தடுப்பு உடைகள் மற்றும் முதலுதவி வசதிகளை உறுதி செய்வதோடு, முறையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும். இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பும், கடும் சட்ட நடவடிக்கைகளும் மட்டுமே பட்டாசுத் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

போதும் இந்த உயிர் பலி`கள்’…. இனியாவது இத்தகைய அலட்சிய அசம்பாவிதங்கள் நேராமல் தடுத்து, பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமா அரசு இயந்திரம்?!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

”நகையை அடகு வச்சி தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்தார்” – மறைந்த தாயை நினைத்து உருகும் தவெக வேட்பாளர்

த.வெ.க-வின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் யு.வி.எம்.ராஜராஜன். இவர் நடந்து முடிந்த...

இணைந்த 7 எம்.பி-கள்: `மாநிலங்களவையில் பலம் கூடிய பாஜக' – ஏற்றுக்கொண்ட சபாநாயகர்

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP)...

“பையில் வெங்காயம் வைத்திருந்தால் எந்த ஆபத்தும் வராது" – மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா

மத்தியப்பிரதேச மாநிலம், சிவபுரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்...

தேர்தல் முடிந்த சூட்டோடு விநாயகர், காளி கோயிலில் சாமி தரிசனம்; சொந்த ஊரில் வைகோ

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்ட சூழலில் பதிவான அதிக வாக்கு...