திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, இன்று காலை தொடங்குவதற்கும் முன்பே இரண்டு முக்கிய விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டம் வழங்கும் நடைமுறை தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசை தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் இந்த விழாவைச் சுற்றி கவனத்தை ஈர்த்தது.
பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெறும் 131 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தனது கையால் பட்டங்களை வழங்குவார் என்றும், மற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பட்டங்களை வழங்கும் என்றும் தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், “பட்டம் பெறும் அனைவருக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி, பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநரே தனது கையால் பட்டங்களை வழங்குவார் என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் சுமூகமாக நடைபெற்றது.
இதற்கிடையில், பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் வரிசையை மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, நேற்று திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் மாணவர் அமைப்புகள், மாதர் சங்கம் மற்றும் எழுத்தாளர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலேயே இயங்கும் பல்கலைக்கழகத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாடுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், பட்டமளிப்பு விழாவில் அதன் பாரம்பரியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்றைய மட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்க்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை.
ஒருபுறம் பட்டம் வழங்கும் நடைமுறையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்த, மறுபுறம் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இரண்டு முக்கிய சர்ச்சைகளால் பேசுபொருளாக மாறியுள்ளது.




