24
November, 2026

A News 365Times Venture

24
Tuesday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம் விவகாரம்: `தீர்ப்பை அமல்படுத்துவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?' – நயினார் கேள்வி!

Date:

கரூரில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, அடுத்த ஆண்டு விவகாரத்தை அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டும் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், கூட்டம் கூடவோ, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதற்றம் ஏற்படும் எனக் கூறுகிறார். உண்மையில் இந்த விவகாரத்தில் எந்தவிதமான பதற்றமும் இல்லை. பொதுமக்கள் கூட்டமாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் சென்று தீபம் ஏற்றினால் போதுமானது. இதில் என்ன பிரச்னை இருக்கிறது? முதலமைச்சருக்கு மட்டும் ஏன் பதற்றம் ஏற்படுகிறது? திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நேற்று, இன்று புதிதாக உருவானது அல்ல. 1923-ம் ஆண்டு தொடங்கி, 1931-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் பிரிவி கவுன்சில் வரை சென்ற இந்த வழக்கில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வந்த நீதிமன்றத் தீர்ப்புகள் தீபம் ஏற்றுவதற்கு ஆதரவாகவே அமைந்துள்ளன. மலைப்பகுதி முருகப்பெருமானுக்குச் சொந்தமானது என்றும், தர்கா அமைந்துள்ள பகுதி தர்காவுக்குச் சொந்தமானது என்றும் நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு நீதிபதி சாமிநாதன் அவர்கள் நேரில் மலைப்பகுதியை ஆய்வு செய்து தீபம் ஏற்றுவது தொடர்பாக தீர்ப்பு வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டிலும் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையிலான அமர்வு இதே கருத்தை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது, உச்ச நீதிமன்றத்திலும் இதே நிலைப்பாட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரன்

ஒரு நீதிமன்றம் கோயிலை இடிக்க வேண்டும் என உத்தரவிட்டால் உடனடியாக அந்த உத்தரவை அமல்படுத்தும் அரசு, உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்றலாம் எனத் தெரிவித்தால் மட்டும் ஏன் அதை ஏற்க மறுக்கிறது? நீதிமன்ற உத்தரவை மதித்து செயல்பட வேண்டியது அரசின் கடமை அல்லவா… சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இல்லையா? திருவண்ணாமலையில் மட்டும்தான் தீபம் ஏற்ற வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் பல்வேறு காலகட்டங்களில் வழிபாடுகள் தடைபட்ட வரலாறுகள் உள்ளன. மாலிக்காபூர் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் வழிபாடுகள் பாதிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவலிங்கம் மறைத்து வைக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்குப் பிறகு வழிபாடுகள் மீண்டும் நடைபெற்ற வரலாறும் உள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல. முதலமைச்சர் வேல் பிடிக்கிறார், கோயில்களுக்குச் செல்கிறார், மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். இவை அனைத்தும் உண்மையான பக்தியா அல்லது மக்களை ஏமாற்றுவதற்கான பகல் வேஷமா? உண்மையிலேயே அனைத்து மதங்களையும் மதிக்கும் முதலமைச்சராக இருந்தால், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். இன்றைக்கு தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒன்றாக நிற்கின்றன. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை… என்ன தயக்கம்? இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டாமா?

திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்பது இந்து மக்களின் பாரம்பர்யமான விழாவாகும். வீடுகள் தோறும் விளக்கேற்றுவது, கோயில்களில் தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை கொளுத்துவது என பல்வேறு வழக்கங்கள் காலம் காலமாக இருந்து வருகின்றன. கிராமங்களில் பனைமரங்களை நட்டு, பனை ஓலைகளால் அலங்கரித்து சொக்கப்பனை ஏற்றுவது உள்ளிட்ட பாரம்பர்ய நிகழ்வுகள் மக்களின் நம்பிக்கையோடு தொடர்புடையவை. இவற்றில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. யாருக்கும் இடையூறு ஏற்படுத்துவதற்காகவும் செய்யப்படுவதில்லை. இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதைக்கூட தமிழக அரசு நிறைவேற்ற முடியவில்லை என்றால், அரசின் நோக்கம் என்ன என்ற சந்தேகம் எழுகிறது. இந்துக்களின் வாக்குகள் தேவையில்லை என அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படையாகக் கூறட்டும். நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல. அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதே எனது கருத்து. நான் ஜெருசலேம், பெத்லகேம் உள்ளிட்ட புனித இடங்களுக்கும் சென்றுள்ளேன். ஜித்தா வரை சென்றுள்ளேன். எனக்கு அனைத்து மதங்களும் சமமானவை. ஆனால், தமிழக அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறதா என்பதுதான் இன்றைய கேள்வி. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், போதைப் பொருள் புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றச்சாட்டுகள், அரசியல் கட்சியினரைச் சார்ந்தவர்கள் மீதான புகார்கள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது யாருடைய ஆட்சியில்? இவற்றைத் தடுக்க வேண்டிய அரசு ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?

குறிப்பிட்ட வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு அரசு செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறித்து கேட்க்கிறீர்கள். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஏற்கெனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் உத்தரவுப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டிய கடமை உள்ளது. தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டிய முதலமைச்சர், கூட்டணி அரசியல் காரணங்களுக்காக செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்துவது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும். இதன் விளைவுகள் ஆட்சிக்கு மிக மோசமாக இருக்கும். வெகு விரைவில் விபரீதமான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Kallakurichi TVK MLA: விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி; யார் இந்த சிருஷ்டி சிங் IPS?

தமிழ்நாட்டு அரசியலையும் தாண்டி இந்திய அளவில் அரசு நிர்வாக அதிகாரிகளின் மத்தியிலும்...

கள்ளக்குறிச்சி MLA வழக்கு: "‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?" – சீமான்

"கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்" என்று...

"கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ்...

தவெக MLA மீது வழக்கு: “4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" – ஸ்டாலின் காட்டம்

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று,...